ஹலோ With காம்கேர் -145: ‘புரிந்துகொள்ளுதல்’ என்பதை எல்லோரும் சரியாக புரிந்துகொள்கிறார்களா?

 

ஹலோ with காம்கேர் – 145
May 24, 2020

கேள்வி:   ‘புரிந்துகொள்ளுதல்’ என்பதை எல்லோரும் சரியாக புரிந்துகொள்கிறார்களா?

புரிதல் என்பது பிறரை புரிந்துகொள்வது மட்டுமல்ல. நம்மை நாம் புரிந்துகொள்வதும் புரிதல்தான். ஆனால் பெரும்பாலானோர் இரண்டையுமே செய்வதுமில்லை. முயற்சிப்பதுமில்லை. அதற்கெல்லாம் அவசியமும் ஏற்படுவதில்லை அவர்களுக்கு. எல்லாவற்றையும் ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து சென்றுகொண்டே இருக்கிறார்கள். இதில் சிறியவர் பெரியவர் என்ற வயது வித்தியாசமே கிடையாது. என் அனுபவத்தில் கண்டுணர்ந்த சில புரிதல்களை கேள்விகளாக்கி பதில் அளித்துள்ளேன்.

1. உங்களுக்கு அதிக சலிப்பை உண்டு செய்யும் பேச்சு?

‘என்னவோ போங்க… இப்பவெல்லாம் யாருங்க பெத்தவங்கள மதிக்கிறாங்க… முதியோர் இல்லத்துல சேர்த்துடறாங்க…’

‘என்னவோ போங்க… இப்பவெல்லாம் காலம் மாறிப்போச்சு… ஊழல் பெருகிப் போச்சு… நாட்டு நிலைமையே சரியில்லை…’

‘என்னவோ போங்க… இப்பவெல்லாம் யாருங்க அடுத்தவங்களை மதிக்கிறாங்க…’

‘என்னவோ போங்க… கல்விச் சூழலே சரியில்லீங்க…’

‘என்னவோ போங்க… அரசாங்க சிஸ்டமே ஒன்னும் சொல்லிக்கிறா போல இல்லை…’

இப்படி வீட்டுப் பிரச்சனை, சமுதாயப் பிரச்சனை, அரசாங்கப் பிரச்சனை என்று தொடங்கி இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் ‘என்னவோ போங்க…’ ஆதங்கங்கள் நம் மக்களிடம்.

இப்படி பிறரைப் பார்த்து ஆதங்கப்படுபவர்களில் பெரும்பான்மையானோரால் தங்கள் வீட்டில்கூட சின்ன மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்த முயல்வதுமில்லை, முடிவதுமில்லை.

2. உங்களுக்கு மன நிலையை ஜென் நிலைக்குக் கொண்டு செல்லும் பிறரது செயல்பாடுகள் ஏதேனும் உண்டா?

ஒன்றா இரண்டா. பல. இப்போதைக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். எப்படித்தான் எளிமையாக சின்ன சின்ன வார்த்தைகளைப் போட்டு புரிந்துகொள்ளும்படி எழுதினாலும் புரியாததைப் போலவே ‘புரிந்து’ (?!) கொண்டு அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை என் எழுத்துக்களில் தேடித்தேடி ‘புரிந்து’ (?!) கொண்டு பின்னூட்டமிடுபவர்கள் என்னை பல சமயங்களில் ஜென் மனநிலைக்குக் கொண்டு செல்கிறார்கள். இருந்தாலும் நான் எழுதியதை புரிய வைக்க வேண்டியது என் கடமை என்பதால் புரிய வைத்துவிட முயல்கிறேன்.

எழுத்தில் உள்ளதை எழுதியவர் கோணத்தில் எழுதியவரின் அனுபவத்துடன் சேர்ந்து புரிந்துகொண்டு படிப்பவர்கள் ஒரு ரகம். எழுதியவர் எழுத்தில் தான் நினைத்ததைத் தேடி அது அங்கு கிடைக்காதபோது ஏதோ அவர்கள் தவறாக எழுதிவிட்டதைப் போல எண்ணிக்கொண்டு படிப்பவர்கள் மற்றொரு ரகம். படிப்பதோடு நின்றுவிட்டால் பரவாயில்லை. அதை பின்னூட்டமாக்கி பிறரையும் குழப்புவார்கள்.

எழுதும்போது என் தலைமுறை, முந்தைய தலைமுறை, அடுத்த தலைமுறை, அதற்கும் அடுத்து வரப்போகும் தலைமுறை என பலவற்றையும் பல கோணங்களில் ஆராய்ந்து அறிந்து யோசித்துத்தான் என் ஒவ்வொரு வார்த்தைகளையும் செதுக்குகிறேன்.

என்னைப் பொருத்தவரை என் எண்ணம் சொல் செயல் ஒன்றாக இருப்பவற்றையே எழுதுகிறேன். ரெஃபரென்ஸ் கொடுத்து எழுதுவது அபூர்வம். எதுவுமே கற்பனையோ, சாத்தியமில்லாததோ கிடையாது. உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை.

3. உங்களுக்கு அபத்தமாகத் தோன்றும் ஒரு விஷயம்?

நீண்ட நாட்கள் கழித்து என்னை சந்திக்கும் பெரியவர்கள் சிலர் ‘அப்பா அம்மாவை நன்றாக கவனித்துக்கொள்கிறாயா?’ என கேட்பார்கள். எனக்கு இந்த கேள்வியே அபத்தமாகத் தோன்றும். அதற்கு நான்  ‘ம்… அப்பா அம்மா என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள்’என்பேன்.

நான் நகைச்சுவையாகச் சொல்வதாக நினைத்து சிரிப்பார்கள். ஆனால் நான் சொன்னதுதான் உண்மை.

எல்லா நேரங்களிலும் மனோரீதியாக உறுதுணையாக இருந்து, தேவைப்படும்போது பொருளாதார ரீதியாக கைக்கொடுப்பதும் என் பெற்றோரே. என் நிறுவனத்துக்கு நல்ல ஆலோசகர்கள்; வாழ்க்கைக்கு ஆகச்சிறந்த வழிகாட்டிகள்; வேளா வேளைக்கு ஆரோக்கியமான உணவு, நிம்மதியான தூக்கம் இவற்றை நான் மறந்தாலும் நினைவூட்டிக்கொண்டே இருப்பார்கள். என் பெற்றோரே எனது ஆகச்சிறந்த நண்பர்கள்.

எனக்கு மட்டும் அல்ல பலருக்கும் அவரவர்களின் பெற்றோர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

ஆனால் பலரும் பெருமைப்பட்டுக் கொள்வது என்னவோ ‘நான் என் அப்பா அம்மாவை வைத்துக் காப்பாற்றுகிறேன்’ என்று.  யாரை யார் காப்பாற்றுவது?

பெற்றோர்கள் என்றாவது ‘நான் உங்களை எல்லாம் சின்ன வயதில் இருந்து எங்களுடன் வைத்துக் கொண்டு காப்பாற்றினேன்’ என பிள்ளைகளிடம் சொல்லி இருக்கிறார்களா?

எல்லோரும் ஒன்றாக வசிக்கிறோம் என்று சொல்வது எப்படி இருக்கிறது, நான் தான் என் அப்பா அம்மாவை வைத்து காப்பாற்றுகிறேன் என சொல்வது எப்படி இருக்கிறது. யோசித்துப் பேசலாமே.

புரிந்துகொள்வோம் அல்லது புரிந்துகொள்ள முயற்சிப்போமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 12 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari