ஹலோ With காம்கேர் -153: வித்தியாசங்களை  உணர்ந்து மனிதர்களை புரிந்துகொள்ளலாமா?

ஹலோ with காம்கேர் – 153
June 1, 2020

கேள்வி:   வித்தியாசங்களை உணர்ந்து மனிதர்களை புரிந்துகொள்ளலாமா?

1. பிறருடன் தொடர்பில் இருப்பதும், அவர்களுடன் அன்பின் இணைப்பில் இருப்பதும் வெவ்வேறு. எப்படி?

இணைப்பு என்பது  இதயத்துக்கும் இதயத்துக்கும் இடையே இருப்பது. ஒருவர்மீது ஒருவர் அக்கறை கொண்டு, ஒன்றாக அமர்ந்து, ரசித்து ருசித்து உணவைப் பகிர்ந்து, ஆறுதலாய் தொட்டுப் பேசி, கண்களை நேருக்கு நேர் பார்த்து, சேர்ந்து அமர்ந்து மனம் விட்டு உரையாடி சேர்ந்து நேரத்தை செலவிடுவதுதான் இணைப்பு.

மனிதர்களை செல்ஃபோனிலோ, ஃபேஸ்புக் முதலான சமூகவலைதள நட்பு இணைப்பிலோ தொடர்பில் வைத்துக்கொண்டு நமக்குத் தேவைப்படும்போது  மட்டும் அவர்கள் நினைவைக் கொண்டாடி அவர்களுடன் பேசி தேவையானதைப் பெறும் இயந்திரத்தனமானது ‘தொடர்பில் இருப்பது’ என்கின்ற விஷயம்.

முன்னதுக்கு அடிநாதமாக இருப்பது முழுக்க முழுக்க அன்பு. பின்னதுக்கு பெரும்பாலும் சுயநலம்.

2. நேர்மையாக இருப்பதற்கும் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதற்கும் மெல்லிய கோடுதான் வித்தியாசம். தெரியுமா?

நான் நேர்மையாக இருப்பதால் என்னை யாருக்கும் பிடிப்பதில்லை என்று சற்றே கழிவிரக்கத்துடன் பேசுகின்றவர்களை மேலோட்டமாக நோக்கினால் அவர்களிடம் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையுடன் பேசுவதாகத் தோன்றும். ஆனால் உண்மையில் அவர்களிடம் இருப்பது தன்னைப் பற்றிய அதீதமான உயர்வு மனப்பான்மையே.

நேர்மையாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அடுத்தவர் விஷயங்களில் மூக்கை நுழைத்து மூக்குடைபடும்போது தான் நேர்மையாக இருப்பதால்தான் இப்படி நடக்கிறது என புலம்புவது அவர்களுக்கு ஒரு சுகமான உணர்வாகவே ஆகிவிடுவதுண்டு.

நேர்மையாக இருப்பது என்பது, தான் செய்கின்ற பணிகளை முழுமனதுடன் செய்வது, பரிபூரண ஈடுபாட்டுடன் செய்வது, வேலை பளு என புலம்பாமல் செய்வது, செய்கின்ற வேலைக்காக லஞ்சம் வாங்காமல் இருப்பது, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கின்ற பேராசையில் குறுக்கு வழியில் சென்று சம்பாதிக்க முயலாமல் நேர்வழியில் செல்வது  இவைதான் நேர்மையாக இருப்பதற்கான அடையாளம்.

தாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கு முன்னும் பின்னும்  ‘நான் எத்தனை  நேர்மையானவன் தெரியுமா?’ என தாங்களே சான்றிதழ் கொடுத்துக்கொள்பவர்களில் பலர் நேர்மையாக இருப்பதில்லை. பிறரை நம்ப வைக்க அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் அது.

உண்மையாகவே நேர்மையாக இருப்பவர்களின் நேர்மை அவர்கள் உடல்மொழியிலும், செயல்களிலும் வெளிப்படும்.

3. மனஸ்தாபத்துக்கும், விரோதத்துக்கும் உள்ள வேறுபாடு?

மனஸ்தாபம் என்பது இரண்டு புரிதல் உள்ள உள்ளங்களுக்குள் மனசாட்சி உள்ளவர்களுக்குள்  ஏற்படுவது. ஏதேனும் ஒரு கட்டத்தில் தானகவே சரியாகும்.

ஈகோ, பொறாமை, காழ்ப்புணர்ச்சி இதுபோன்ற காரணங்களினால் உண்டாவதற்கு பெயர் விரோதம்.

மனஸ்தாபத்தை சரி செய்யலாம் அல்லது சரியாகும். விரோதத்தை சரி செய்வது என்பது இயலாத செயல்.

4. அவமதித்தலுக்கும் எதிர்வினைக்கும் உள்ள வேறுபாடு?

அறத்துக்கும் சமூகத்துக்கும் மனசாட்சிக்கும் எதிராக தகாத செயல்களை செய்யக்  கூடாது. அவற்றை செய்ய மனதால் நினைப்பதுகூட அவமானம்தான். அப்படி  அவமானகரமான செயல்களை செய்யும்போது உங்களுக்குக் கிடைக்கும் மரியாதைக்குப் பெயர்தான் அவமரியாதை.

மற்றபடி உங்கள்  கொள்கைகளும்  கருத்துக்களும் பிடிக்காமல் உங்களிடம் கடுமையாக நடந்துகொள்பவர்களின் நடவடிக்கையை எதிர்வினை எனலாம்.

அவமதித்தலையும், எதிர்வினையையும் இப்படியாக புரிந்துகொள்வோம். மனிதர்களை கையாளப்பழகுவோம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 17 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon