ஹலோ With காம்கேர் -178: மாற்றுப் பாதை ஆபத்தானதா?

ஹலோ with காம்கேர் – 178
June 26, 2020

கேள்வி:   மாற்றுப் பாதை ஆபத்தானதா?

‘கொரோனா’ நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை குறி வைக்கிறது. கூடவே பலரின் பொருளாதார அடிப்படைத் தேவையான வேலைக்கு உலை வைத்து வருகிறது.

உடனடியாக அதே துறையில் வேலை வாய்ப்பைப் பெறுவது என்பது கடினமாக இருக்கும் சூழலில் என்ன செய்யலாம் என்று மாற்று வழி யோசிக்கும் காலம் இது.

தாங்கள் தற்சமயம் இயங்கிவரும் துறையை விட்டு விலக மனமில்லாமல் தன் திறமை இதுதான் அதில்தான் இயங்க முடியும் என்ற மனத்தடை இருப்பவர்களுக்காகவே இந்தப் பதிவு.

எனக்குத் தெரிந்து சட்டம் படித்து சில வருடங்கள் அதே துறையில் வக்கீலாக ப்ராக்டிஸ் செய்துவிட்டு / பணி புரிந்துவிட்டு மீடியாவுக்கு வந்து கொடி கட்டிப் பறப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். முன்னது அவர்கள் கல்வி. பின்னது அவர்கள் ஆர்வம் / திறமை. கல்வியால் கிடைத்த வேலையில் பெற்ற அனுபவத்தை தங்கள் விருப்பத் துறையில் இணைத்து செயல்படுத்தும்போது மற்றவர்களைவிட வித்தியாசமான கோணத்தில் சிந்திக்க முடிகிறது என்று சொல்கிறார்கள்.

என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன். நான் இயங்கும் துறை தொழில்நுட்பம். அதிலும் சொந்தமாக நிறுவனம் தொடங்கி 27 வருடங்களாக தொய்வின்றி நடத்தி வருகிறேன். என்னுடைய அனுபவம் வெறும் தொழில்நுட்பம் மட்டும் கிடையாது. மனித மனங்களை கையாளும் நுட்பத்தையும் சேர்த்தே பெற்றேன். காரணம், சொந்தமாக நிறுவனம் நடத்தும்போது பணிபுரிபவர்களின் நலன்களையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும்.

ஓரிடத்தில் வேலை செய்தால் செய்கின்ற பணியில் அனுபவம் கிடைக்கும். சொந்தமாக நிறுவனம் நடத்தும்போது நிறுவனத்தின் அடிப்படை பணியில் மட்டுமில்லாமல் மனிதவளம், நிதி, விளம்பரம், விற்பனை இப்படி பல துறைகளில் பரந்துபட்ட அனுபவம் கிடைக்கும். அத்தனையின் அடிப்படையும் மனித மனங்களே. அது இயங்கும் சூட்சுமமே.

அந்தச் சூட்சுமத்தை தாராளமாகப் பெற்றதால் தொழில்நுட்பம் சார்ந்து மட்டுமில்லாமல் உளவியல் சார்ந்தும் என்னால் ஆழமாக சிந்திக்க முடிகிறது. அந்த அனுபவங்களை இதோ உங்களுக்காக தினமும் எழுதவும் முடிகிறது. பலர் நான் இயங்குவது சைக்காலஜி என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு என் முதன்மைப் பணியான தொழில்நுட்பத்தில் கிடைக்கும் அனுபவத்துக்கு இணையாக சைக்காலஜியிலும் கிடைத்துள்ளது.

சரி, படிப்பு வேறு வேலை வேறு என்றால் எதற்காக கல்வி என்று கேட்பவர்களுக்காக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.

ஒரு மளிகைக் கடைக்கு அரிசி வாங்கச் செல்கிறோம். அங்கு ஒரு கிலோ அரிசி, இரண்டு கிலோ, ஐந்து கிலோ, பத்து கிலோ என பேக் செய்து வைத்திருக்கிறார்கள்.

அதில் ஒரு பேக்கைப் பார்த்து ‘இது எத்தனை கிலோ?’ என்று கேட்கிறீர்கள். விற்பனையாளர் ‘இரண்டு கிலோ’ என சொல்கிறார்.

இதுபோலதான் நாம் கற்கும் கல்வியும். கல்வி என்பது ஓர் அளவுகோல்.

சீல் செய்து வைத்திருக்கும் பொட்டலத்தில் உள்ளது புது அரிசியா, பழைய அரிசியா, புழு வண்டு  இல்லாமல் சுத்தமாக இருக்கிறதா, தரமாக உள்ளதா என்பது போன்ற விவரங்கள் அந்த பேக்கை பிரித்தால்தான் தெரியும்.

அதுபோலதான் பட்டம் பெற்றவர்களின் அறிவின் ஆழமும்.

உதாரணத்துக்கு பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பில் நாற்பது மாணவர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு ஐடி நிறுவனத்தில் இருந்து காம்பஸ் இண்டர்வியூவுக்கு வருகிறார்கள். நாற்பது மாணவர்களில் 5 பேர் மட்டுமே தேர்வாகிறார்கள். அதனால் மற்ற 35 பேரும் முட்டாள் என்று அர்த்தம் கிடையாது. அந்தத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அவர்களுக்கு கஷ்டமானதாக இருந்திருக்கலாம், தேர்வு எழுதும் நாளில் மனமோ அல்லது உடலோ  சரியில்லாமல் இருந்திருக்கலாம். அவ்வளவுதான்.

அடுத்து வேறொரு நிறுவனத்தில் இருந்து வந்து தேர்வு நடத்தும்போது மீதமிருந்த 35 மாணவர்களில் 20 மாணவர்கள் தேர்வாகிவிடுகிறார்கள். காரணம் ஏற்கெனவே தேர்வாகவில்லை என்ற காரணத்தால் சிறப்பு வகுப்புகள் பயிற்சிகள் எடுத்திருக்கலாம். அவ்வளவுதான்.

அடுத்து ஒரு நிறுவனத்தில் இருந்து வந்து தேர்வு நடத்தும்போது மீதமிருந்த 15 பேரில் 10 பேர் தேர்வாகி விடுகிறார்கள். காரணம் அந்தத் தேர்வு ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டர் மொழியில் இயங்கும் ப்ராஜெக்ட்டுக்காக வைக்கப்பட்ட தேர்வு. அந்த கம்ப்யூட்டர் மொழியில் ஆர்வம் உள்ள 10 பேர்தான் தேர்வானார்கள். அவ்வளவுதான்.

மீதி இருக்கும் ஐந்து பேரும் வடிகட்டிய முட்டாள் என அர்த்தம் கிடையாது. அந்த ஐந்து பேரும் சினிமாவில் ஸ்கிரிப்ட் எழுதுபவராகவும், அப்பாவின் பிசினஸ் பார்ட்னராகவும், மீடியாவில் ஜர்னலிஸ்டாகவும், விவசாயியாகவும், தொலைக்காட்சியில் சீரியல் நடிகராகவும் பணியைத் தேர்ந்தெடுத்து கொடிகட்டிப் பறக்கத் தொடங்குகிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் கடைசியாக சொன்ன ஐந்து பேரும் தங்கள் விருப்பத் துறைக்குச் செல்ல வேண்டுமென்றே தேர்வை சரியாக எழுதாமல் தவிர்த்திருக்கலாம் அல்லது தேர்வையே தவிர்த்திருக்கலாம் என்றுதானே அர்த்தம். ஆனால் தேர்வுகள் நடக்கின்ற காலத்தில் அவர்கள் முட்டாள்கள் என்றே சக மாணவர்களால் கருதப்பட்டிருப்பார்கள். தவிர்க்க முடியாது.

அதனால்தான் சொல்கிறேன் படிப்பு என்பது ஓர் அளவுகோல். ஓர் அடையாளம். அவ்வளவே.

அந்தப் படிப்பை நேரடியாகவோ பயன்படுத்தியோ அல்லது வேறு வகையில் அதனை செயல்படுத்தியோ வாழ்க்கையில் உயர்வது என்பது அவரவர் சாமர்த்தியம்.

கல்வி என்பது பரந்துபட்ட அறிவுக்கும், பெருந்தன்மையான குணத்துக்கும், வாழ்க்கை சூட்சுமத்துக்கும் வழிவகுக்கும் (வழிவகுக்க வேண்டும்).

‘கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்று சும்மாவா சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்கள் நம் முன்னோர்கள். சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கிறதோ இல்லையோ நாம் இயங்கும் இடத்தையும் செய்கின்ற பணியையும் சிறப்பாக வைத்துக்கொள்ள உதவுவது கல்வி. கல்வி மட்டுமே. அது எந்தத் துறையாக இருந்தாலும். துறை மாறுவது தவறல்ல. யாருக்குத் தெரியும், அதுவே உங்களின் வாழ்க்கையின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும் மாற்றுப் பாதையாகக் கூட அமையலாம். வாழ்த்துகள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 36 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon