ஹலோ with காம்கேர் – 208
July 26, 2020
கேள்வி: பிறர் வாழ்க்கைக்கு நாம் ஏன் நீதிபதி ஆக வேண்டும்?
ஒருவர் வெற்றி அடைந்தால் அதற்கு அவரது திறமை, உழைப்பு, குறிக்கோள் போன்ற அகக் காரணங்களை சொல்லாமல் ‘அவனுக்கு பணம் இருக்கு’, ‘அவனுடைய பேக்கிரவுண்ட் அப்படி’ என அவசரம் அவசரமாய் ஆயிரம் ஆயிரம் புறக் காரணங்களை சொல்லும் நம் மக்கள், அவர் வீழ்ந்துவிட்டாலோ அத்தனைப் புறக் காரணங்களையும் ஒதுக்கிவிட்டு ‘அவன் செய்த வினை அவனுக்கே ஊறு விளைவித்துவிட்டது’, ‘அவன் எண்ணம் போல் வாழ்க்கை’, ‘ரொம்ப ஆடினான் இல்ல… அதான் இப்ப அனுபவிக்கிறான்’ என்று அவனுடைய அகக் காரணங்களைச் சொல்வது வேடிக்கைதான். இந்த லாஜிக் ஆண் பெண் என இருபாலருக்கும்தான்.
இன்னும் சொல்லப் போனால் ஒருவரது வெற்றி, தோல்வி எல்லாமே அவரவர் கைகளில் இல்லை. ஒரு சின்ன விஷயம் வெற்றியின் உச்சாணிக்குக் கொண்டு செல்லும், அதே சின்ன விஷயம் தோல்வியின் அதலபாதாளத்துக்குத் தள்ளிவிடும்.
குறிக்கோளுடன் வாழும் திறமையான பலர் தோற்றுப் போவதையும், குறிக்கோள் இல்லாமல் வாழ்பவர்கள் வெற்றி பெறுவதையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
‘எப்போது நீ நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உனக்கு மேலே ஒன்று வேலை செய்கிறது என்று அர்த்தம். அதன் பெயர்தான் விதி. வீரன் வெற்றி பெற்றால் வீரத்தால் விளைந்தது. கோழை தோல்வியடைந்தால் கோழைத்தனத்தால் வந்தது. வீரன் தோல்வியுற்றாலோ, கோழை வெற்றி பெற்றாலோ விதியின் பிரவாகம். எடுத்து வைத்த அடியெல்லாம் வழுக்குகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லையா. நின்றுவிடு. முடிவை கடவுளிடம் விட்டுவிடு. அவன்மீது நம்பிக்கை இல்லை என்றால் காலத்திடம் விட்டுவிடு. நடுக்கடலில் தத்தளிக்கும் ஆளே இல்லாத படகுகூட என்றோ ஒருநாள் ஏதோ ஒரு கரையைச் சேரும்…’ என்று சொன்ன அர்த்தமுள்ள இந்துமதம் நினைவுக்கு வந்தது.
இன்னும் சொல்லப் போனால், ஒருவரது வெற்றிக்கு நேர்மறைக் காரணிகள் மட்டுமே காரணமாக அமைந்துவிடுவதில்லை.
அந்த வெற்றியை அடைய அவர் எடுக்கும் முயற்சியில் எதிர்மறை விஷயங்களுக்கும் அவர் ஈடு கொடுத்திருந்தால் மட்டுமே அவரது வெற்றி அவரை முன்னிலைப்படுத்தும்.
நன்றாக கவனியுங்கள், எதிர்மறை விஷயங்களை எதிர்த்துப் போராடி என்று சொல்லவில்லை… எதிர்மறை விஷயங்களையும் ஏற்றுக்கொண்டு அதற்கும் ஒத்துழைத்து அதையும் பிடித்தமானதாக்கிக்கொண்டு, குறிப்பாக அதற்கு அடிபணிந்து பவ்யமாய் வளைந்து நெளிந்து செல்பவர்களுக்கு மட்டுமே வெற்றி பெயரை சம்பாதித்துக்கொடுக்கும். நாளடைவில் அவரும் அந்த எதிர்மறை செயல்களை செய்ய ஆரம்பித்துவிடுவார். (விதிவிலக்குகள் உண்டு)
பிசினஸ் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், சினிமா துறை என்றால் இப்படித்தான் இருக்க முடியும் என்று பொதுவிதிகளை கற்பிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இவர்களைப் போன்றவர்களே காலம் காலமாக நடைபெற்றுவரும் தவறுகளை அந்த பதத்திலேயே வைத்துக்கொள்ள உதவுகிறார்கள்.
எதிர்மறை சக்திகளுக்கு அடிபணியாமல் நேர்மறையாக மட்டுமே சிந்தித்து நேர்மறை விஷயங்களை மட்டுமே செய்பவர்களுக்கும் வெற்றி கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவர்கள் பெறும் வெற்றியால் அவர்கள் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. அவ்வளவுதான். உண்மையில் அவர்கள் பெறும் வெற்றியே அசாத்தியமானது. துணிச்சல்மிக்கது. கொண்டாடப்பட வேண்டியது.
ஒருமுறை என் ஃபேஸ்புக் நட்பில் இருக்கும் ஒருவர் ‘மேடம் எத்தனை பெண்கள் அழகாக எழுதுகிறார்கள். அவர்கள் எல்லோரும் எங்கேயோ இருக்க வேண்டும். வாய்ப்பில்லாமல் இருப்பது வேதனை’ என்று ஆதங்கப்பட்டார்.
அதற்கு நான், ‘அவர்கள் திறமையை வெளிப்படுத்திக்கொண்டுதானே இருக்கிறார்கள். இதுதானே வாய்ப்பு. அவர்கள் இருக்க வேண்டிய இடத்தில்தானே இருக்கிறார்கள்… அவர்களின் குறிக்கோள் வேறாக இருக்கும். எழுதுவது அவர்களின் பொழுதுபோக்காக இருக்கலாம். நாம் ஏன் அவர்கள் மீது பரிதாபப்பட வேண்டும்…’ என்றேன்.
அதற்கு அவர் ‘இல்லை மேடம் பத்திரிகைகள் கொண்டாட வேண்டாமா அவர்களை… இப்படி வீணாகிறதே அவர்கள் திறமை’ என்றார் அவரது கண்ணோட்டத்திலேயே.
ஒருவருக்கு தன் திறமையை தன்னளவில் மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு பயன்படுத்தினால் அவர்கள் மீது ஏன் பரிதாபப்பட வேண்டும். எல்லா திறமைகளுமே சம்பாத்யமாகவும் புகழ் வெளிச்சத்திலும் இருந்தால் மட்டுமே சிறப்பு என்ற மனநிலை நோயாளி மனோபாவமே.
நம் வாழ்க்கைக்கே நாம் நீதிபதியாக இருக்க முடிவதில்லை, பார்வையாளராக மட்டுமே இருக்கிறோம் எனும்போது பிறர் வாழ்க்கையை நாம் ஏன் விமர்சிக்க வேண்டும்?
அவரவர் வாழ்க்கை. அவரவர் பாதை. அவரவர் தேர்வு. நாம் ஏன் நீதிபதியாக வேண்டும். சிந்திப்போமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software








