ஹலோ With காம்கேர் -209: கொரோனா காலத்தில் ஆன்மிகப் பயணம் எப்படி சாத்தியமானது?

ஹலோ with காம்கேர் – 209
July 27, 2020

கேள்வி: கொரோனா காலத்தில் ஆன்மிகப் பயணம் எப்படி சாத்தியமானது?

நேற்று…

நாங்கள் முடிவு செய்திருந்தபடி விடியற்காலையில் 3 மணிக்கே எழுந்து ப்ளாஸ்க்கில் காபி, டிபனுக்கு இட்லி என தயார் செய்துகொண்டு 4.30 மணிக்கு காரில் அமர்ந்துவிட்டோம். நான்தான் காரை எடுத்தேன். சுப்ரபாதத்தை மெல்லியதாக ஒலிக்க விட்டேன். அப்பாவும் அம்மாவும் சுப்ரபாதத்துடன் தாங்களும் ஸ்லோகம் சொல்லிக்கொண்டே வந்தார்கள்.

கொரோனா, லாக் டவுன், இ-பாஸ் இப்படியான கெடுபிடியான காலகட்டத்தில் இந்த பயணத்தை நாங்கள் ரிஸ்க் எடுத்துதான் மேற்கொண்டோம்.

விடியற்காலை அமைதி. ஆள் அரவமற்ற சாலைகள். ஏசி போடாமல் ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு ஜில்லென்ற சுத்தமான காற்றை சுவாசித்துக் கொண்டே காரில் ஒலித்த சுப்ரபாதத்தை கேட்டபடி ரம்யமான பயணம்.

மயிலாடுதுறை முளப்பாக்கம் ஐயனார், மாரியம்மன் பேச்சாயியை தரிசனம் செய்துகொண்டு அங்கிருந்து நேராக வைதீஸ்வரன் கோயில் சென்றோம். அங்கேயே ஆளுக்கொரு டம்ளர் காபியை குடித்தோம்.

அங்கிருந்து மயிலாடுதுறை மாயூரநாதர், திருவிழந்தூர் பெருமாள் கோயில், ஆஞ்சநேயர் கோயில், வள்ளலார் கோயில் தரிசனம் முடித்துக்கொண்டு கோழிக்குத்தி அத்திவரதரை தரிசனம் செய்தோம். எப்போது மயிலாடுதுறை சென்றாலும் கோழிக்குத்தி செல்லாமல் வரமாட்டோம்.

திருக்கடையூர் மார்க்கண்டேயர், அபிராமி அம்மன், அனந்தமங்கலம் ஆஞ்சநேயர், திருநள்ளார் சனீஸ்வரன், அம்பகரத்தூர் மாரியம்மன், கூத்தனூர் சரஸ்வதி, லலிதாம்பிகை, திலதர்ப்பணபுரி, திருவாரூர் தியாகராஜர், எட்டுக்குடி, எண்கண், சிக்கல், திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன் கோயில், சுவாமிமலை வரை திவ்ய தரிசனம்.

அதற்குப் பிறகு இட்லி சாப்பிட்டு திரும்பவும் ஒரு டம்ளர் காபி குடித்தோம்.

அப்பா தான் கார் ஓட்டுவதாகச் சொன்னதால் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன்.

அப்படியே கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் தரிசனம் செய்துகொண்டு பட்டீஸ்வரம் அம்மன், திருக்கருகாவூர் அம்மன், திட்டை குருஸ்தலம், ஆலங்குடி குருஸ்தலம் முடித்துக்கொண்டோம்.

அங்குள்ள கோயில் வாசலில் இளநீர் விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் மூவரும் இளநீர் சாப்பிடத் தோன்றியது. ஆனால் கொரோனா பயத்தினால் அதைத் தவிர்த்தோம்.

அங்கிருந்து திரும்பவும் நான் கார் ஓட்டும் பொறுப்பை எடுத்துக்கொண்டேன்.

தஞ்சாவூர் மாரியம்மன், திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் திருவானைக்கோயில், சமயபுரம் மாரியம்மன், திருப்பட்டூர் பிரம்மா கோயில் தரிசனம் முடித்துக்கொண்டு எங்கள் உறவினர் வீட்டில் வடை பாயசத்துடன் விருந்து. சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம்.

இப்போது அப்பா காரை எடுத்தார்.

அங்கிருந்து நேராக சென்னை வந்துவிடுவதாக முடிவு செய்தோம். வரும் வழியில் தாம்பரம் சானிடோரியம் ஆஞ்சநேயர் கோயில், அடையார் அனந்தபத்மநாப கோயில், திருவல்லிக்கேனி பார்த்தசாரதி, மயிலை கபாலீஸ்வரர், வேளச்சேரி பேபி நகர் ஆஞ்சநேயர் கோயில் முடித்தவுடன் அடையார் ஆனந்தபவனில் காபி சாப்பிட தோன்றியது. கொரோனா பயத்தினால் அதையும் தவிர்த்தோம். தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு நேராக நங்கைநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் சென்றோம்.

கூட்டம் அதிகம் இல்லை. தரிசனம் முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

கோயிலுக்குச் சென்று வந்தபிறகு குளிக்கக் கூடாது என்பார்கள். கொரோனாவுக்காக அந்த விதிமுறைகள் எல்லாம் விலக்கி வைத்து நன்றாக குளித்துவிட்டு கொண்டு சென்றிருந்த பைகளையும் மற்ற பொருட்களையும் டெட்டால் போட்டு சுத்தம் செய்தோம்.

இரவு 8 மணி ஆகிவிட்டது.

அப்பா சுடச்சுட டிகாஷன் போட்டு காபி கலந்துகொடுத்தார். அம்மா ரவா உப்புமாவுக்கு தயார் செய்ய அதையும் சாப்பிட்டுவிட்டு தூங்கினோம்.

—-

காலை டிபன் சாப்பிட நேரமாகிறதே என நினைத்துக்கொண்டு அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றேன். ட்ரெட்மில்லில் அப்பா கண்களை மூடிக்கொண்டு வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

‘அப்பா நேரம் ஆகிறது, வாக்கிங் போதும்பா. டிபன் சாப்பிடலாம்’ என அழைத்தேன்.

—–

என்ன புரியவில்லையா?

நாங்கள் நினைத்துக்கொண்டால் இப்படி ஆன்மிகப் பயணம் கிளம்பிவிடுவோம். வெளிநாட்டில் இருந்து சகோதரன் சகோதரி வந்தாலும் இப்படிப்பட்ட இனிமையான பயணங்கள் நிச்சயம் உண்டு.

அப்பா இதுபோன்ற பயணங்களை மிகவும் விரும்புவார். கொரோனாவுக்குப் பிறகான மார்ச் மாதத்தில் இருந்து இன்றுவரை எங்கும் வெளியில் கிளம்பாததால் தினமும் ட்ரெட்மில்லில் வாக்கிங் செல்லும்போது மானசீகமாக இப்படி எல்லா கோயில்களுக்கும் சென்று வெர்ச்சுவலாக தரிசனம் செய்துவிடுகிறார் அப்பா.

எங்கள் குலதெய்வக் கோயிலில் தொடங்கும் பயணம் சென்னையில் வந்துதான் முடியும்.

சில நேரங்களில் திருப்பதிக்குச் சென்று அங்கிருந்து திரும்பும் வழியில் திருத்தணி, திருவள்ளூர் பெருமாள், சிறுவாபுரி முருகன், சுருட்டப்பள்ளி சிவன், பெரிய பாளையத்தம்மன், மயிலம் முருகன் என்று பயணம் அமையும்.

அப்பா ஒருநாளும் தன் ஏக்கங்களை மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்வதில்லை. தினமும் ஒரு ஆன்மிகப் பயணம். மானசீகப் பயணம். மன அழுத்தம் எல்லாம் இல்லவே இல்லை. நம்மைப் புத்துணர்வாக வைத்துக்கொள்ள இதுவும் ஓர் அருமையான வழிதானே? 

நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 36 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon