ஹலோ With காம்கேர் -210: சுவாசிக்கக் கற்றுக்கொடுக்க முடியுமா?

ஹலோ with காம்கேர் – 210
July 28, 2020

கேள்வி: சுவாசிக்கக் கற்றுக்கொடுக்க முடியுமா?

கொரோனா காலத்தில் ஆன்மிகப் பயணம் எப்படி சாத்தியமானது என்ற கான்செப்ட்டில் நேற்று நான் எழுதியிருந்த பதிவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்.

பலரும் பலவிதமான குழப்பங்களுடன் படிக்க ஆரம்பித்து ஒரு முறைக்கு இருமுறையாக படித்து குழப்பம் நீங்கி ஒரு வழியாக படித்து ரசித்து பாராட்டியுள்ளார்கள். நல்ல ஐடியாவாக உள்ளதே என புகழ்ந்து தள்ளியுள்ளார்கள். அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இந்தப் பதிவுக்கு ‘எப்படி கதை எழுதுவது என ரா.கி.ரங்கராஜன் புத்தகம் எழுதியதைப் போல நீங்கள் தினம் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை எழுதுவது எப்படி என்ற புத்தகம் வெளியிடலாம்’ என்றி ஆலோசனை கொடுத்திருந்தார் ஃபேஸ்புக்கில் தவறாமல் என் பதிவுகளை படித்து வரும் ராம்குமார் அவர்கள்.

தினமும் எழுதுவதற்கு ஆலோசனை அல்லது பயிற்சி கொடுக்கும் புத்தகம் எழுதுவது என்பது தினமும் சுவாசிப்பதற்கு பயிற்சி கொடுப்பதைப் போலதான். நமக்கு சுவாசிப்பதற்கு பயிற்சி அளிக்க வேண்டுமா, தன் முயற்சியின்றி தானாகவே சுவாசம் தன் பணியை செவ்வனே செய்வதைப் போல உங்களிடம் கிரியேட்டிவிட்டி இருந்தால் அது தானாகவே எழுத்து, பேச்சு, ஓவியம், இசை இப்படியாக தனக்கான ஒரு வடிவத்தை உருவாக்கிக்கொள்ளும்.

நிறைய பேர் என்னிடம் தங்கள் எழுத்து ஆர்வம் குறித்து வெவ்வேறு விதமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

‘என்னிடம் நிறைய கான்செப்ட் இருக்கிறது… ஆனால் லேப்டாப் இல்லை, இருந்தால் எழுதி தள்ளிவிடுவேன். அத்தனை விஷயங்கள் உள்ளன…’

‘எனக்கு எழுத தெரியும், ஆனால் எழுத நேரம் இல்லை…’

‘எனக்கு அமைதியான இடம் இருந்தால்தான் எழுத வரும். வீட்டில் தனி அறை இல்லை…’

இப்படி தாங்கள் எழுதாமல் இருப்பதற்கு நிறைய காரணங்களை வைத்துக்கொள்கிறார்கள்.

காரணங்களை எல்லாம் உடைத்துக்கொண்டு உங்கள் மனதில் இருந்து வருவதுதான் கிரியேட்டிவிடி. ‘அது’ இருந்தால்தான் வெளிப்படும். ‘இது’ இருந்தால்தான் வெளிப்படும் என்ற நிபந்தனை எல்லாம் கிரியேட்டிவிட்டிக்கு கிடையாது. எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களையும் அறியாமல் உங்கள் மனதை பிளந்துகொண்டு வெளிவந்தே தீரும்.

வீட்டில் குழந்தைகளின் தாயை கவனியுங்கள். பிள்ளைகளுக்கு சாதாரண தோசையிலேயே யானை, பூனை, நாய், குரங்கு என விதவிதமான வடிவங்களைக் கொண்டு வந்து அசத்துவார்கள்.

இதுதான் கிரியேட்டிவிட்டி. அதனால்தான் சொல்கிறேன், உங்களிடம் உண்மையிலேயே நல்ல கற்பனைத் திறன் இருந்தால் அது உங்களை சும்மா இருக்க விடாது. உங்களிடம் இருந்து ஏதேனும் ஒருவிதத்தில் விட்டு விடுதலை ஆகி ஏதேனும் ஒரு வடிவமெடுக்கும்.

எழுத்தோ, பேச்சோ, பாட்டோ, ஓவியமோ உங்கள் கிரியேட்டிவிட்டி எதுவாக ஆக விரும்புகிறதோ அதை அதன் போக்கில் விட்டுவிடுங்கள். மிக இளம் வயதிலேயே அது வடிவம் எடுத்துக்கொள்ளும். அதை கண்டறிந்து வளர்த்துக்கொள்வதே நம் வேலை. எந்த வயதிலும் கண்டறியலாம். தவறில்லை.

நிறைய படிக்க வேண்டும், நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டும், நிறைய படித்தவர்களிடம் நட்பாக இருக்க வேண்டும், நிறைய சினிமா பார்க்க வேண்டும்  இப்படி நிறைய  ‘வேண்டும்’-களை எழுத ஆரம்பிப்பவர்களுக்கு ஆலோசனை கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.

என்னைப் பொருந்தவரை உங்கள் கிரியேட்டிவிட்டிக்கு வடிவம் கொடுக்க விரும்பினால் உங்களை நீங்கள் உற்று நோக்குங்கள். பிறர் உங்களிடம் வினையாற்றுவதை வைத்து எடை போடாமல் அவரிடத்தில் உங்களை வைத்துப் பார்த்து சிந்தியுங்கள்.

இந்த இரண்டையும் செய்தாலே பல விஷயங்கள் பல கோணங்களில் புரிய ஆரம்பிக்கும்.

புத்தகங்களிலும், சினிமாக்களிலும் என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்கள். மனிதர்கள்தானே இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் அவர்கள் அறிந்த மனிதர்களை வைத்துத்தானே கதை எழுதுகிறார்கள், சினிமா துறையினர் அதையே சினிமானாக படம்பிடிக்கிறார்கள்.  இவை இரண்டிலும் கற்பனையும் இருக்கலாம், நிஜமும் இருக்கலாம். பயணங்களில் கற்பனையே கலக்காத நிஜ மனிதர்கள், நிஜ அனுபவங்கள், நிஜ சூழல்கள்.

புத்தகமோ, சினிமாவோ, பயணமோ எதுவாக இருந்தாலும் நம்மைப் போன்ற மனிதர்களையும் சக ஜீவன்களையுமே பேசுகின்றன.

எனவேதான் சொல்கிறேன் உங்களை உணருங்கள், பிறரை புரிந்துகொள்ளுங்கள். இந்த இரண்டையும் நேர்மையாக செய்தால், ஒரே விஷயத்துக்கு பல கோணங்கள் புரியவரும். இதுதான் கிரியேட்டிவிட்டியின் மையப்புள்ளி.

கிரியேட்டிவிட்டியை கண்டறிந்துவிட்டால் அதனை அடுத்து அதற்கு புகழின் வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்ற உத்வேகம் உண்டாகும். அதுவும் கிடைத்துவிட்டால் நாம் நினைத்த அளவுக்கு நம் திறமையை சம்பாத்யமாக்க முடியவில்லையே என்ற ஏக்கம் உண்டாகும். இது ஒரு தொடர்கதை. முடிவே கிடையாது.

ஒருவருக்கு தன் திறமையை தன்னளவில் மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு பயன்படுத்தினால் அவர்கள் மீது ஏன் பரிதாபப்பட வேண்டாமே. எல்லா திறமைகளுமே சம்பாத்யமாகவும் புகழ் வெளிச்சத்திலும் இருந்தால் மட்டுமே சிறப்பு என்ற மனநிலையை மாற்றுவோமே.

நம் கிரியேட்டிவிடி நம் அன்றாட பணிகளை சிறப்பாக செய்வதற்கும், நாம் உயிர்போடு இருப்பதற்கும் பயன்பட்டுவிட்டுப் போகட்டுமே. அதைவிட பெரிய கொடுப்பினை வேறென்ன இருந்துவிடப் போகிறது சொல்லுங்கள்.

அப்படியே உங்களுக்கு கிரியேட்டிவிட்டி வரவே இல்லையா, கவலை வேண்டாம். அது ஒன்றும் அத்தனை பெரிய தவறான விஷயமும் அல்ல. இயல்பாக வாழுங்கள். எதைச் செய்தாலும் முழு மனதுடன் ஆத்மார்த்தாக ஈடுபாட்டுடன் செய்யுங்கள். அதுவும் கிரியேட்டிவிட்டிதான்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 36 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon