ஹலோ With காம்கேர் -258: காதுகள் மூடுவதும், கண்கள் செவிடாவதும், வாய் குருடாவதும் சாத்தியமா?

ஹலோ with காம்கேர் – 258
September 14, 2020

கேள்வி: காதுகள் மூடுவதும், கண்கள் செவிடாவதும், வாய் குருடாவதும் சாத்தியமா?

நேற்றைய பதிவின் ஒரு பகுதியாக நான் எழுதி இருந்ததை படித்த ஒருசிலரின் சந்தேகத்துக்கான பதிலே இன்றைய பதிவு.

‘நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது சைக்கிளில் பள்ளிக்குச் செல்வேன். நான் செல்லும் வழியில் ஒரு தியேட்டர் வரும். ஒரு நாள், என் வகுப்பாசிரியர் ‘அந்தத் தியேட்டர் வழியேத்தானே நீ வருகிறாய்? அதில் என்ன படம் (சினிமா) போட்டிருந்தது’ என்று கேட்டார்.  ‘தெரியாது டீச்சர்’ என்று சொல்ல, ‘கண்ணை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்க்க மாட்டியா?’ என்று கேட்டார்.

உண்மைதான். தேவையில்லாத விஷயங்களில் காதுகள்கூட மூடிக்கொள்ளும், கண்களும் செவிடாகிவிடும், வாய் குருடாகிவிடும். என் பெற்றோர் கற்றுக்கொடுத்தப் பாடம் இது. இளம் வயதில் என்னுள் விதைக்கப்பட்ட இந்த நல்ல பழக்கத்தை இன்று வரை நான் பின்பற்றி வருகிறேன்.

இதைப் படித்துவிட்டு ஒருசிலர் இந்த பாராவை நான் கவனிக்காமல் தவறாக எழுதிவிட்டதாக நினைத்து தனித்தகவலில் சுட்டிக் காட்டினார்கள்.

காதுகளுக்கு மூடும் தன்மை கிடையாது, கண்களுக்கு செவிடாகும் தன்மை இல்லை, வாய் குருடாவதும் எந்த ஜென்மத்திலும் சாத்தியமில்லை. இது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான்.

ஆனாலும் அவைகூட எனக்கு சாத்தியமாகும் அளவுக்கு நல்ல பழக்க வழக்கங்களை எங்களுக்குள் புகுத்தினார்கள் என் பெற்றோர் என்பதை மிகைப்படுத்தி சொல்வதற்காக அந்த சொல்லாடலை நான் பயன்படுத்தினேன்.

பொய்தான் பெரும்பாலும் பிரமாண்டப்படுத்தி சொல்லப்படுகிறது. நான் உண்மையை சற்று கூட்டிச் சொல்லி இருக்கிறேன். அவ்வளவுதான்.

சந்தோஷத்தில் மனசு அப்படியே இறக்கைக் கட்டிப் பறப்பதைப் போல இருந்தது என்று வெற்றியின் உச்சத்தையும், ஏமாற்றத்தினால் அதலபாதாளத்தில் விழுந்தேன் என்று தோல்வியின் அதிபயங்கரத்தையும் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்துவதைப் போன்ற சொல்லாடலே நான் பயன்படுத்தியது.

மனசுக்கு இறக்கை முளைக்குமா, யாரேனும் அதலபாதாளத்தில் விழத்தான் முடியுமா? எல்லாம் ஓர் உருவகம். கற்பனை. நிஜத்தை மிகைப்படுத்திச் சொல்லும் ஒரு யுக்தி. அவ்வளவுதான்.

நல்ல விஷயமானாலும் கெட்ட விஷயமானாலும் அவை காதுகளால் கேட்பதாலும், கண்களால் பார்ப்பதாலும், வாயால் பேசுவதாலும் மட்டுமே அவை பல்கிப் பெருகுகின்றன.

நல்ல விஷயங்கள் பல்கிப் பெருகினால் சுபம். தீய விஷயங்கள் பல்கிப் பெருகினால் ஆபத்து.

எனவே தீய விஷயங்கள் மூலம் பரவும் தீய சக்திகளை நம் மனதுக்குள் அண்டவிடாதிருக்க காது, கண், வாய் இவற்றை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை சொல்லவே அந்த சொல்லாடலை நான் பயன்படுத்தினேன்.

காதுகள் மூடிக்கொள்ளும்…

தேவையில்லாத விஷயங்கள் கண்களால் பார்க்கப்பட்டு அவை குறித்து வாயால் பேசுவதால்தானே நம் காதுகள் அவற்றைக் கேட்டு அவை நம் மனதுக்குள் ஏறி சிம்மாசனமிட்டுக்கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கின்றன. நம் வாயையும், கண்களையும் கட்டுப்படுத்துவதற்கு பதில் நம் காதுகளை அந்த நேரத்தில் செயலிழக்க செய்துவிட்டால் தீயவை நம் மனதுக்குள் ஏற வாய்ப்பில்லை அல்லவா? எனவேதான் தேவையில்லாததை கேட்க நேரிடும்போது காதுகள் செவிடாகிவிடும் என்பதை மிகைப்படுத்திச் சொல்ல காதுகள் மூடிக்கொள்ளும் என்று எழுதினேன்.

கண்கள் செவிடாகிவிடும்…

தேவையில்லாத விஷயங்களை கண்கள் பார்ப்பதால்தானே அவை பிறர் காதுகளுக்கு வதந்தியாக போய் சேர்கிறது. காதுகளை கட்டுப்படுத்துவதற்கு பதில் கண்களை(யே) அந்த நேரத்தில் செயலிழக்க செய்துவிட்டால் தீயவை பரவாதல்லவா? காதுகளோடு கண்களை தொடர்புபடுத்தியதால் கண்களை செவிடாகிவிடும் என்று எழுதினேன்.

வாய் குருடாகிவிடும்…

தேவையில்லாத விஷயங்களை வாய் பேசுவதால்தானே கண்கள் மேலும் மேலும் அவற்றை தேடித்தேடி பார்க்கிறது. கண்களை கட்டுப்படுத்துவதற்கு பதில் வாயை(யே) அந்த நேரத்தில் செயலிழக்கச் செய்துவிட்டால் வாய் தேவையில்லாமல் பேசாதல்லவா? கண்களோடு வாயை தொடர்புபடுத்தியதால் வாய் குருடாகிவிடும் என்று சொல்லி இருந்தேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 108 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari