ஹலோ With காம்கேர் -260: பிள்ளைகளிடம் நம்பிக்கை வைத்தால் மட்டும் போதுமா?

ஹலோ with காம்கேர் – 260
September 16, 2020

கேள்வி: பிள்ளைகளிடம் நம்பிக்கை வைத்தால் மட்டும் போதுமா?

எங்கள் குடும்ப நண்பரின் வீட்டில் ஓர் இளம் பெண் சினிமா துறையில் கால்பதிக்க விரும்பி இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக பணியில் சேர்ந்தாள்.

அவள் படித்தது பி.காம். வயது 21. பொதுவாக குழந்தைகள் கிரியேட்டிவாக வரைவது போல படங்கள் வரைவதைத் தவிர அவளுக்கு பெரிதாக எந்த ஈடுபாடும் கிடையாது.

ஒரு குடும்ப நிகழ்வில் அவளை சந்தித்தபோது நான் ஆச்சர்யமாக, ‘சினிமா துறையில் எப்படி ஆர்வம் வந்தது?’ என்று கேட்டேன்.

அதற்கு அவள், ‘எப்படியும் வேலை பார்க்கப் போகிறோம். அது சினிமா துறையாக இருந்தால் நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள், பிரபலமடையலாம்…’ என்றாள்.

‘உனக்கு நடிப்பதில் ஆர்வமா?’ என்றேன்.

‘வாய்ப்பு கிடைத்தால் அதையும் செய்வேன். இப்போதைக்கு டைரக்ஷனில்தான் ஆர்வம்…’ என்றாள்.

‘தினமும் உனக்கு என்ன வேலை கொடுப்பார்கள்?’ என்றேன்.

‘ஷீட்டிங் ஸ்பாட் போவதற்கு முன் ஆஃபீஸ் போனதும் டைரக்டர் சார் டேபிள் சேர் சரி செய்யணும், அன்றைய சீனுக்குத் தேவையான பொருட்களுக்கான லிஸ்ட்டை தயார் செய்து லிஸ்ட் போட்டுக் கொடுக்கணும்… டைரக்டர் சாருக்கு அவர் வரும்போது அவர் அறை கமகமன்னு இருக்கணும் அதனால் ஊதுவத்தி  ஏற்றி வைக்கணும் அல்லது ரூம் ஸ்ப்ரேயர் போட்டு வைக்கணும்… அவுட்டோர் ஷூட்டிங் என்றால் மதிய சாப்பாட்டுக்கு எத்தனை பேர் என கணக்கிட்டு உணவு சப்ளை செய்பவருக்குச் சொல்லணும்…’ என்று அடுக்கிக்கொண்டே போனாள்.

எந்த இடத்திலும் அவள் திரைத் துறைக்கு எதற்காக சென்றிருக்கிறாளோ அந்த துறை சார்ந்த அனுபவம் பெறுவதற்கான பயிற்சி கிடைப்பதற்கான வாய்ப்பு குறித்து சொல்லவே இல்லை.

‘இவைதான் உன் அன்றாடப் பணிகள் என்றால் எப்போது வேலை கற்றுக்கொள்வாய்?’ என்றேன்.

‘என்னக்கா, இதுவரை நான் சொல்லிக்கொண்டிருந்ததே என் வேலை குறித்துதானே… டைரக்டரை குருவைப்போல பாவித்து அவர் சொல்படி  செய்துகொண்டிருந்தால் விரைவில் அந்தத்துறையில் நல்ல வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பார்…’ என்றாள்.

எனக்கு அவள் பதில் மனமுதிர்ச்சி இல்லாமல் இருக்கவே ‘கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்… பலதரப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் புழங்கும் துறை…’ என்று பொதுவான அக்கறையுடன் சொன்னேன்.

அதற்கு அவள் பதில் சொல்வதற்குள் அருகில் நின்றுகொண்டிருந்த அவளுடைய அம்மா பெருமைபொங்க ‘என் பொண்ணு எட்டு ஊருக்கு தனியாவே ஜமாய்ச்சுடுவா…’ என்றார்.

நான் சிரித்துக்கொண்டேன். அதன் பிறகு நான் பேசவில்லை.

எங்கள் காம்கேரில் அனிமேஷன் துறையில் கால்பதிக்க விரும்பி வருபவர்கள் பலதரப்பட்ட மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பெரிதாக கல்வித் தகுதியைகூட நான் எதிர்பார்ப்பதில்லை. வரையத் தெரிய வேண்டும். நல்ல கிரியேட்டிவிட்டி இருக்க வேண்டும். படைப்புகளுக்கு ஏற்ப நான் சொல்வதைப் போல அல்லது அதற்கு மேலும் கற்பனை செய்ய அறிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.

ராமாயணம், கந்தர் சஷ்டிக் கவசம், திருவாசகம் போன்ற அனிமேஷன் படைப்புகளை தயார் செய்தபோது காம்கேரில் அந்தந்த ப்ராஜெக்ட்டில் பணிபுரியும் ஓவியர்களுக்கும் அனிமேட்டர்களுக்கும் அவை குறித்து ஆழ்ந்த புலமையை கொடுப்பதற்காகவும், கதாபாத்திரங்களை சரியாக வரைவதற்காகவும்  நிறைய புத்தகங்களை தமிழிலும் பிற மொழிகளிலும் வாங்கி நிறுவன லைப்ரரியை நிரப்புவேன். ஏற்கெனவே வந்த திரைப்படங்களுக்கான சிடி (அப்போதெல்லாம் சிடிதானே, யு-டியூப் லிங்க்கெல்லாம் கிடையாதே) வாங்கி அடுக்குவேன்.

நானும் அவை குறித்து தினமும் கதைபோல பேசி நிறைய தகவல்களை கொடுப்பேன்.

ஏனெனில் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கும் என்று சொல்ல முடியாதல்லவா?

தினமும் காலையில் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் கந்தர்சஷ்டிக் கவசம், கந்தகுரு கவசம், சுப்ரபாதம் பார்க்கச் சொல்வேன். காரணம் அப்போதுதான் அந்த படைப்புகளுக்கு கதாபாத்திரங்கள் வரையும்போது உயிரோட்டம் இருக்கும். மனதுக்குள் அந்த வைப்ரேஷன் இருந்துகொண்டே இருக்கும். ஆன்மிக ப்ராகெக்ட் முடியும் வரை அவர்களின் காலைப்பொழுது இப்படித்தான் தொடங்கும்.

ஏன் நானே கூட திருவாசகம் முடியும் வரை திருவாசகத்தின் 51 பதிகங்களையும், 658 பாடல்களையும் வரிவரியாக வாசித்து புரிந்துகொண்டேன். தூங்கும் நேரத்தில், பயணத்தில், அலுவலகத்தில் என் டேபிளில் என எங்கேயும், எப்போதும் திருவாசம் புத்தகம் என்னுடன் இருந்துகொண்டே இருக்கும்.

தூங்கும்போது தலையணை அருகேயே திருவாசகம் புத்தகத்தை ஒரு கவரில் போட்டு வைத்துக்கொள்வேன். கனவிலும் அந்த நினைவுகள் நிரம்பி புத்துணர்ச்சி கொடுக்கும் என்ற நம்பிக்கை. இது என் சிறுவயது பழக்கமும்கூட. நான் உறங்கும்போது பள்ளிக்கூட பாடபுத்தகங்களும் என்னுடன் சேர்ந்து சொகுசாக உறங்கும்.

திருவாசகம் ப்ராஜெக்ட் முடியும்வரை அதற்கான படம் வரைதல், ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ப பாடல்வரிகளை இணைத்தல், அனிமேஷன் செய்தல், தரப் பரிசோதனை செய்தல் என அந்த ப்ராஜெக்ட் முழுமை அடையும் வரை என் அலுவலகம் முழுவதும் திருவாசகமே வாசனைபோல பரவி இருந்தது.

அதில் பணி புரிந்தவர்களும் நாங்கள் எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் அவர்களாகவே அந்த சூழலுக்கு கட்டுப்பட்டார்கள். மரியாதை கொடுக்க ஆரம்பித்தார்கள். சிகரெட் பிடிக்காமல், அசைவம் சாப்பிடாமல் அவர்களாகவே தங்களுக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

சூழலை நாம் சரியாக அமைத்துக்கொடுத்து நாமும் சரியான முன்னோடியாக இருந்தால் நம்மைப் பின் தொடர்பவர்களும் இயல்பாக அதற்குக் கட்டுப்பட்டு பின் தொடர்வார்கள் என்பது நிதர்சனம்.

சரி சரி இந்தக் கதையெல்லாம் இருக்கட்டும். திரைத்துறைக்குச் சென்ற அந்த பெண் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

திரைத் துறையில் ஜொலிக்க விரும்பிய அந்தப் பெண் மற்றொரு உதவியாளரை தன் வீட்டுக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டு திடீரென ஒருநாள் அப்பா அம்மா முன் வந்து நின்றிருக்கிறாள்.

அவர்களும் வேறு வழியில்லாமல் அவசரம் அவசரமாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்து மிக சிலரை மட்டும் அழைத்து திருமணம் செய்து வைத்தார்கள்.

அதன் பிறகு அவள் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள். அவள் கணவன் சினிமா துறையில் குறிப்பிட்ட இடத்தை எட்டவும் இல்லை.  இன்று வரை மாத வாடகைக்கும், மளிகைக்கும், குழந்தைகள் வளர்ப்புக்கும்  ‘ததுங்கிணத்தோம்’ தான்.

அவளுடைய நகைகளை அவளுக்குத் தெரிந்தும் தெரியாமலும் எடுத்துச் சென்று விற்று காசாக்கி குடித்து கும்மாளமிட்டு அவள் பெற்றோரிடம் பணம் வாங்கித்தரச் சொல்லி அடித்து அவனும் சீரழிந்து அவள் வாழ்க்கையையும் நரகமாக்கினான். இப்போதுவரை அதே நிலைதான்.

நான் ஜாக்கிரதையாக இருக்கணும் என்று சொன்னபோது, ‘என் பொண்ணு எட்டு ஊருக்கு தனியாவே ஜமாய்ச்சுடுவா…’ என்று அந்தப் பெண்ணின் தாய் சொன்னது நினைவுக்கு வந்தது.

குழந்தைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியதுதான். ஆனால் அந்த நம்பிக்கையால் அவர்கள் மீது பின்னிப் பிணைக்கும் பாசக் கயிற்றின் ஒரு முனையை உங்கள் கைகளிலும் மறு முனையால் அவர்களையும் கட்டிக்கொண்டே செயல்பட வேண்டும்.

இது அடக்குமுறை அல்ல. ஒரு பாதுகாப்புக் கவசம். பிள்ளைகளை சுதந்திரமாக செயல்பட விடும்போது அவர்களுக்கு மற்றவர்களால் பாதிப்பு ஏற்பட்டால் அதில் இருந்து அவர்களை காப்பாற்றவும், அவர்களே தடம் மாறிச் சென்றால் அதில் இருந்து அவர்களை மீட்டு சரியான பாதைக்குத் திருப்பவும் உதவும் மந்திரக் கயிறாக இருக்கும்.

உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமே உங்கள் சொத்து. காசு பணம் எல்லாம் இரண்டாம்பட்சமே. சுதந்திரமாக செயல்பட கற்றுக்கொடுங்கள். ஆனால் கண்காணித்துக்கொண்டே இருங்கள்.

அவர்கள் கடமையை அவர்கள் ஆற்றட்டும். நம்பிக்கை வைக்கிறோம் என்ற பெயரில் உங்கள் பொறுப்பை நீங்கள் உதாசினப்படுத்திவிட வேண்டாம். கவனம்!

மு.கு: விரைவில் எங்கள் ‘காம்கேர் டிவி’ யு-டியூப் சேனலில் ‘திருவாசகம்’.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 16 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon