ஹலோ With காம்கேர் -261: எது கிடைத்தாலும் அதில் பெஸ்ட்டாக செயல்படும் மனோபாவம்!

ஹலோ with காம்கேர் – 261
September 17, 2020

கேள்வி: எது கிடைத்தாலும் அதில் பெஸ்ட்டாக செயல்படுவேன் என்ற மனநிலை எத்தனை ஆச்சர்யமானது?

சமூக வலைதளங்களில் என் பதிவுகளை பின் தொடர்பவர்கள் சிலர் தங்களுக்காகவும் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காகவும் தொழில்நுட்பம் சார்ந்தும், வாழ்வியல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும் என்னிடம் சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறுவார்கள்.

நேரம் கிடைக்கும்போது பதில் அளிப்பேன். சில சமயங்களில் நேரமே கிடைக்காமலேகூட போய்விடும். பதில் கொடுக்கவும் வாய்ப்பிருக்காது.

ஒருசிலரிடம் போனில்  பேசி புரிய வைக்க வேண்டியிருக்கும். அப்படிப் பேசும்போது அவர்கள் என் குறித்து ஆச்சர்யமான சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். அதில் ஒரு கேள்வியை இங்கு பகிர்கிறேன்.

உங்களுக்கு தொழில்நுட்பத் துறை மீது எப்படி இத்தனை ஆர்வம் ஏற்பட்டது?

நான் +2 முடித்த காலத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதாவது, கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்வித் திட்டத்தில் முதன் முறையாக பாடதிட்டமாக, பட்டப் படிப்பாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. எனவே அதுவே எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் என் பெற்றோர் எங்களுக்கு எடுத்துச் சொல்லி அதில் சேர்த்தார்கள்.

நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்ததால் தொழில்நுட்பத் துறையில் சிறப்பாக செயல்படுகிறேன்.

டாக்டருக்குப் படித்திருந்தால் நல்ல டாக்டராக இருந்திருப்பேன்.

கட்டடக் கலை படித்திருந்தால் நல்ல இன்ஜினியராக இருந்திருப்பேன்.

சட்டம் படித்திருந்தால் நல்ல வழக்கறிஞராக இருந்திருப்பேன்.

ஏன் சமையல் கலை படித்திருந்தால் அந்தத் துறையிலும் சிறப்பாகவே செயல்பட்டிருப்பேன்.

இப்படி எதை படிக்கிறோமோ அதில் ஜொலிக்கவும் வாழ்க்கையில் உயரவும் ஆயிரம் வாசல்கள் காத்திருக்கும்போது ஏன் ஒரே சாய்ஸை மனதுக்குள் ஏற்றி வைத்துக்கொண்டு கஷ்டப்பட வேண்டும்?

நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுப்பதில் ஒரே சாய்ஸை வைத்துக்கொள்ளாமல் ஆப்ஷன் வைத்துக்கொள்ள வேண்டும். ஏமாற்றம் இருக்காது.

அது படிப்பானாலும் சரி, சாப்பாடானலும் சரி.

உதாரணத்துக்கு உங்களுக்கு ஆலு பரோட்டா பிடிக்கும் என்றால் அது கிடைக்கும் ஹோட்டலுக்குச் சென்றுதான் சாப்பிட வேண்டும். உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கிறதே என்று ஏதோ ஒரு ஹோட்டலுக்குச் சென்றால் அங்கு அது இல்லாவிட்டால் அங்கு என்ன கிடைக்கிறதோ அதைத்தான் சாப்பிட வேண்டும். அதைவிட்டு அந்த ஹோட்டல் உரிமையாளரை திட்டுவது எந்த விதத்தில் நியாயம்.

எந்த ஒரு விஷயத்துக்கும் நம் விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றிகாண நேர்வழியில் கடுமையாக முயற்சிக்க வேண்டும். அப்படியும் அந்த முயற்சி கைகூடவில்லை என்றால் அந்த விருப்பம் சார்ந்த துணைப் பிரிவுகளில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இப்படிப்பட்ட மனோபாவம் அமைந்தால்தான் அதுதான் நிம்மதியான வாழ்க்கைக்கு அடிகோலும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 39 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon