ஹலோ With காம்கேர் -270 : ‘சர்வே ஜனா சுகினோ பவந்து!’

ஹலோ with காம்கேர் – 270
September 26, 2020

கேள்வி:  ‘சர்வே ஜனா சுகினோ பவந்து!’ குறித்து எஸ்.பி.பி என்ன சொல்கிறார்?

ஒருவரின் வெற்றி என்பது தனிநபர் சார்ந்ததல்ல. அவரை உயிர்ப்புடன் இயங்கவைக்கும் அவரது குடும்பம், அவருடன் இணைந்து பணிபுரிபவர்கள், அவருக்கு உதவி செய்த அத்துறை சார்ந்த வல்லுநர்கள், பெரியோர்களின் ஆசி, இறை அருள் இப்படி பல்வேறு காரணிகள் வெற்றிக்கு காரணகர்த்தா.

நான் இத்துடன் ‘இயற்கையின் கருணை’ என்ற காரணியையும் சேர்த்துச் சொல்வேன், வெற்றியையும் சாதனையையும் குறித்துப் பேச வேண்டிய சந்தர்பங்களில் எல்லாம்.

இறை அருளும், இயற்கையின் கருணையும் இருப்பதால்தான் எந்த ஒரு முயற்சியும் வெற்றி அடையும் என்பது என் தீர்க்கமான கருத்து.

எடுக்கின்ற முயற்சிக்கான நல்ல சூழல் அமைவதே இறை அருள், அந்த சூழலில் நல்ல உடல் நலத்துடனும் மன ஆரோக்கியத்துடனும் சோர்வில்லாமல் உழைக்கும் வல்லமையை நமக்குக் கொடுப்பது இயற்கையின் கருணை.

—***—

எஸ்.பி.பி அவர்கள் தன் சாதனை குறித்து பேசும் இடங்களில் எல்லாம் மற்றொரு விஷயத்தையும் சேர்த்து குறிப்பிடுகிறார்.

அது என்ன தெரியுமா?

இயந்திரங்கள் – இசை சாதனங்கள்!

இவை இல்லாவிட்டால் ஒரு பாடகனின் பாடல் ஜெயிக்கவே முடியாது என அழுத்தமாக பதிவு செய்கிறார்.

—***—

அவரது நேர்காணல் ஒன்றையும், ஓர் இசை நிகழ்ச்சியில் அவரது உரையையும் நேற்று பார்த்தேன்.

முதலில் நேர்காணலில் சொன்ன விஷயத்தை சொல்கிறேன்…

அது அவரது 40, 45 வயதில் பொதிகை தொலைக்காட்சியில் கொடுத்த நேர்காணல். அவரே கேள்விகான சூழலை உண்டாக்கி கேள்விகளை அமைத்து பதில் சொல்லிக்கொண்டே வருகிறார்.

அவருக்கு முதன் முதலில் பாட வாய்ப்பு கொடுத்த இசை அமைப்பாளர், அடுத்தடுத்து வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்துக்கொண்டிருக்கும் இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், தன் பாடலுக்கு வாய் அசைத்து திரையில் அற்புதமாக நடித்த ரஜினி, கமல், மோகன் உட்பட பல்வேறு நடிகர்களின் நடிப்பு, தன்னுடன் இணைந்து பாடிய பாடகர்கள், பாடகிகள், தன் பாடலுக்காக இசை அமைக்கும் கலைஞர்கள் என யாரையுமே விட்டு வைக்காமல் அத்தனை பேருக்கும் நன்றி சொல்லிக்கொண்டே வருகிறார்.

இறை அருள் இருப்பதால்தான் கலைஞர்களால் இத்தனை அற்புதமாக பாட்டு எழுதவும், பாட்டுப் பாடவும், இசை அமைக்கவும், இசை வாத்தியங்கள் வாசிக்கவும் முடிகிறது என்று சொல்கிறார்.

‘நன்றி நன்றி’ என வார்த்தைகளால் சொல்லாமல் அந்தந்த காலகட்டங்களில் எப்படியெல்லாம் அவர்கள் தான் பாடிய பாட்டுக்கு உயிர்கொடுத்தார்கள் எப்படியெல்லாம் இன்னும் தன்னை வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சில சம்பவங்கள் மூலம் தன் அழகான தமிழில் அருமையான உச்சரிப்பில் விவரித்துக்கொண்டே வருகிறார்.

‘1966-ல் பாட ஆரம்பித்த நான் 26 வருடங்களில் 56 வயதுக்கான உழைப்பை செய்துள்ளேன். என் உழைப்பு வெற்றிகரமான பாதையில் பயணிப்பதற்கு இப்போது சொல்ல காரணிகளையெல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு காரணி உள்ளது. அது என்ன தெரியுமா?’ என்று கேட்டு பதில் சொல்லி இருக்கிறார்.

‘இயந்திரங்கள். இசை சாதனங்கள் இல்லை என்றால் பாட்டுக்கு உயிர் ஏது? இசை சாதனங்களுக்குத்தான் நாமெல்லாம் நன்றி சொல்ல வேண்டும்.’

அந்த நேர்காணலை ‘உலகம் நன்றாக இருக்க வேண்டும், அனைவரும் நலமாக இருக்க வேண்டும்’ என்று பொருள்படும் ‘சர்வே ஜனா சுகினோ பவந்து!’ என்ற வாழ்த்துடன் முடிக்கிறார்.

—***—

இதே கருத்தை இம்மியும் பிசகாமல் அண்மையில் தன் 75 வயதில் ஒரு ஆன்லைன் ஆர்கெஸ்ட்ராவில் பேசும்போதும் சொல்கிறார்.

‘1000 ரசிகர்கள் கூடிய மேடை நிகழ்ச்சியில் கைதட்டல்களுடன் பாடும்போது ஓர் உற்சாகம் உள்ளுக்குள் தொற்றிக்கொள்ளும். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வடிவில் உலக முழுவதும் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். இதோ இப்போது ரசிகர்கள் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு அதே உத்வேகத்துடன் ரசனையும் வெர்ச்சுவலாக ஆன்லைன் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுவிட்டேன். திரும்பவும் ரசிகர்களின் உற்சாக கரகோஷத்துடன் கூடிய மேடை நிகழ்ச்சிகள் கிடைக்கும் நாட்கள் வருமா என்பது சந்தேகமே. வரும் நாட்களில் இசைக் கலைஞர்கள் ஓரிடத்தில் இசை அமைக்க, இசை அமைப்பாளர் ஓரிடத்தில் ஒருங்கிணைக்க, பாடகர்கள் வேறொரு இடத்தில் ஓர் அறையில் இருந்து பாட… இப்படியாகக் கூட நிகழ்ச்சிகள் வெர்ச்சுவலாக நடக்கக்கூடும்…’

என்று சொல்லிக்கொண்டே வந்தவர் ஒரு கட்டத்தில் தன்னை  ‘சரஸ்வதி புத்திரர்’ என்று பாராட்டிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு பதிலையும் சொல்கிறார்.

‘என்னை சரஸ்வதி புத்திரர் என மிகவும் உயர்வாக பாராட்டிவிட்டார் இவர், நான் மட்டுமல்ல என்னைச் சுற்றி இதோ இங்கு இசை அமைத்துக் கொண்டிருக்கும் எல்லா இசைக் கலைஞர்களுக்குமே சரஸ்வதி புத்திரர்கள்தான். இவர்களுக்கும் இறை கடாட்சம் இருக்கிறது. அந்த அருள் இல்லை என்றால் இவர்கள் எல்லாம் இசை அமைக்க முடியுமா, இப்படி அருமையாக இசை வாத்தியங்கள் வாசிக்க முடியுமா, நாங்களெல்லாம் பாட முடியுமா?’ என்று மிக அற்புதமான கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

மேலும் முத்தாய்ப்பாக அவர் சொன்ன ஒரு விஷயம், ‘ஆன்லைனில் இதுபோல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி பெற காரணமாக உள்ள இயந்திரங்களுக்கும் (இசை சாதனங்கள்) அதை வழங்கிய அத்தனை பேரையும் வணங்குகிறேன்…’ என்று சொல்கிறார்.

இந்த உரையையும் ‘உலகம் நன்றாக இருக்க வேண்டும், அனைவரும் நலமாக இருக்க வேண்டும்’ என்று பொருள்படும் ‘சர்வே ஜனா சுகினோ பவந்து!’ என்ற வாழ்த்துடன் முடிக்கிறார்.

‘என்னுடன் கிட்டத்தட்ட 55 வருடங்களாக பயணித்த உங்கள் அனைவருக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்’ என்று தன் நன்றியை ரசிகர்களுக்கு அர்பணித்துவிட்டு அந்த நிகழ்ச்சியை நிறைவு செய்துள்ளார். அதுவே அவரது கடைசி நிகழ்ச்சி என்று சொல்கிறார்கள்.

—***—

45 வயதில் அவர் நேர்காணல் ஒன்றில் பேசியதையும், 75 வயதில் இசை நிகழ்ச்சியில் பேசியதையும் நன்றாக ஒப்பிட்டுப் பாருங்களேன்.

இயந்திரங்கள்-இசை சாதனங்களுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்திலும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் உலகம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகின்ற அந்த அழகான மனதிலும், ரசிகர்கள் முதற்கொண்டு தன்னுடன் பயணித்த அத்தனைபேருக்கும் நன்றி சொல்லும் அந்த நன்றி மறவா குணத்திலும் எந்த மாற்றமும் இல்லை என்பது புரியும்.

ஒரு மனிதர் தன் வாழ்க்கைப் பயணம் முழுவதும் ஒரே மாதிரி மாறாத சிந்தனையுடன் மனித நேயத்துடன் வாழ முடியும் என்ற பேருண்மைக்கு பேருதாரணமாக எஸ்.பி.பி அவர்கள் வாழ்ந்துவிட்டுச் சென்றுள்ளார்.

சக மனிதர்கள் மீது காட்டும் பரிவில் தொடங்கி இறை அருள் வரை இம்மியும் மாறாத கருத்துடன் தன் வாழ்க்கைப் பயணத்தில் பயணித்து மற்றவர்களுக்கு ஆகச் சிறந்த முன்மாதிரியாக வாழ்ந்துவிட்டுச் சென்றுள்ள உலகம் போற்றும் மாபெரும் இசைக் கலைஞரை வணங்கி விடைகொடுக்கிறேன்.

ஓம் சாந்தி!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 120 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon