ஹலோ With காம்கேர் -269 : ‘வீட்டுக்கு வராதீர்கள், வந்துவிடாதீர்கள்’!

ஹலோ with காம்கேர் – 269
September 25, 2020

கேள்வி:  ‘வீட்டுக்கு வராதீர்கள், வந்துவிடாதீர்கள்’ என்று அலறும் நிலை என்று மாறும்?

வழக்கம்போல் சென்ற வாரம் காய்கறிகள் வாங்கச் சென்றிருந்தோம். கடையில் கூட்டம் இல்லை என்றாலும் இருக்கின்ற இரண்டு மூன்று வாடிக்கையாளர்களே மேலே இடித்துத் தள்ளாத குறையாக வெகு சகஜமாக அங்கும் இங்கும் நடந்துகொண்டு செல்போனில் பேசியபடி காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தார்கள். நாம்தான் கவனமாக ஒதுங்கி நிற்க வேண்டியுள்ளது.

தக்காளிக் குவியலுக்கு முன் நின்றிருந்த ஒரு நபருக்கு நடுத்தர வயதிருக்கும். தான் அணிந்து வந்த  மாஸ்க்கைக் கழற்றிவிட்டு நன்றாக மூன்று முறை தும்மினார். தக்காளி மீதே அத்தனை கிருமிகளும் படர்ந்திருக்கும். பிறகு கைகளால் மாஸ்க்கை மேலே இழுத்து விட்டுக்கொண்டார்.

இரண்டு தக்காளியை எடுப்பதற்குள் இருமல் வர திரும்பவும் மாஸ்க்கை கழற்றி வலது கையால் வாயை மூடிக்கொண்டு இருமினார். பின்னர் மாஸ்க்கை மேலே இழுத்துவிட்டுக்கொண்டார்.

பின்னர் கைகளை சானிடைசர் போட்டு துடைத்துக்கொள்ளவில்லை (Note this point). சுத்தமில்லாத அதே கைகளால் தக்காளியை பொறுக்கி எடுத்துக்கொண்டிருந்தார்.

இந்தக் காட்சியை கண்ட பின்னர் தக்காளியை வாங்க எப்படி மனது வரும்? நம் கண்களுக்குத் தெரியாமல் எத்தனையோ நடந்தாலும் நம் கண்முன் காணும் சிலவற்றை அப்படியே புறந்தள்ள முடிவதில்லையே.

அவரிடம் ஏன் இப்படி சுத்தமில்லாமல் நடந்துகொள்கிறீர்கள், சானிடைசர் போட்டு இருமிய கைகளை துடைத்துக்கொண்டு காய்கறிகளை எடுக்கலாமே, நம் கைகளை அடிக்கடி மாஸ்க் அருகே கொண்டு சென்று அதை தொட்டு பயன்படுத்திக்கொண்டே இருந்தால் நம் கைகளில் ஏதேனும் கிருமிகள் ஒட்டியிருந்தால் உள்ளே சென்றுவிட வாய்ப்புள்ளதே என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைக்கலாம் என நினைத்து ஓரடி முன் சென்றோம். ஆனால் முடிவை மாற்றிக்கொண்டோம்.

கடைக்குச் சொந்தக்காரர் எங்கே என கேட்டு அவரிடம் சென்று நடந்ததை சொன்னோம்.

‘எத்தனை முறை சொன்னாலும் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். கடைக்கு வெளியே சமூக இடைவெளிக்காக வட்டம் போட்டு நிற்க வைத்து இரண்டிரண்டு நபர்களாய் உள்ளே விட்டாலும் உள்ளே வந்து இதுபோல நடந்துகொண்டால் என்ன செய்வது சொல்லுங்கள். மிகவும் வற்புறுத்தினால் அவர்கள் வேறு கடைக்கு சென்று விடுகிறார்கள்…’ என்றார்.

‘இப்படி ஒருசிலர் நடந்துகொள்வதினால் உங்கள் கடையில் உள்ளவர்கள் யாருக்கேனும் கொரோனா வந்தால் கடையையே சில நாட்கள் மூட வேண்டி இருக்குமே… அந்த நஷ்டத்துக்கு நம் கண்களால் பார்க்கும்போது வற்புறுத்திச் சொல்வதில் தவறில்லை…’ என்றோம்.

வீட்டுக்கு வந்ததும் அன்று நாங்கள் வாங்கிய காய்கறிகள் உப்பு தண்ணீர், மஞ்சள் தண்ணீர் இவற்றுடன் மேலும் இரண்டு முறை நல்ல தண்ணீரில் குளியல் எடுத்துக்கொண்டன.

இதைவிட உச்சகட்டம் என்னவென்றால் வங்கிக்கு நேரடியாக சென்று முடிக்க வேண்டிய ஒரு வேலை இருந்ததால் நேரில் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒரு பெண் என்னை தொட்டு அழைத்து ‘இந்த விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தர இயலுமா?’ என கேட்டபோது கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.

அவருக்கு வகுப்பெடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து காரை எடுத்துக்கொண்டு நகர்ந்தால் வழியில் குப்பை அள்ளும் தூய்மைப்பணியாளர்கள் சிலரை பார்க்க நேரிட்டது. வாயில் மாஸ்க் இல்லை. கைகளில் கிளவுஸும் இல்லை. பேசி சிரித்துக்கொண்டு குப்பைகளை பிரித்து எடுத்து போட்டுக்கொண்டிருந்தனர்.

எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் ஒரு வீட்டில் ஏதோ மரவேலை நடந்துகொண்டிருந்தது. அங்கு பணிபுரியும் ஒருவர் வெகு இயல்பாக வாயில் இருந்து எச்சிலை தரையில் துப்பிவிட்டு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

வாட்ஸ் மேனிடம் சொல்லி அந்த இடத்தை சுத்தம் செய்யச் சொல்லலாம் என அழைத்தால் அவர் மாஸ்க்கை வாயைவிட்டு கீழிறக்கி ஏதோ பேச வந்தார். எத்தனையோ முறை அவரிடம் ‘பேசும்போதும், தும்மும்போதும், இருமும்போதும் மாஸ்க்கை கழற்றக் கூடாது’ என்று சொல்லியாயிற்று. ஆனாலும் அவருடைய பழக்கத்தில் மாற்றமில்லை. ஆனாலும் திரும்பவும் வலியுறுத்தினோம்.

இதற்கிடையில் என் மாமா (அம்மாவின் அண்ணா) போன் செய்து ‘பஸ் எல்லாம் போகிறதே. நான் உங்கள் வீட்டுக்கு இந்த ஞாயிறு வரட்டுமா?’ என கேட்டார். அவருக்கோ வயது 75. பாசக்காரர். தாம்பரத்தில் இருக்கிறார். நினைத்துக்கொண்டால் வந்து நிற்பார்.

‘ஐயையோ வர வேண்டாம்… ஜாக்கிரதையாக வீட்டிலேயே இருங்கள்… வேண்டுமானால் வீடியோ காலில் பேசிக்கொள்ளலாம்..’ என்றோம்.

‘என்ன பெரிய வீடியோ கால், நேரில் பார்ப்பதைப் போல் ஆகுமா?’ என்றார் ஆதங்கத்தோடு.

‘நிச்சயமாக நீங்கள் பஸ்ஸில் வரக்கூடாது… உங்களுக்கும் வயதாகிறது… இங்கும் வயதான என் அப்பா அம்மா இருக்கிறார்கள்… ஏதேனும் பாதிப்பு வந்தால் உங்களை மட்டும் அது பாதிக்கப்போவதில்லை… எங்களையும் சேர்த்துத்தான் பாதிக்கும்…’  என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

எல்லோரையும் ஏதேனும் ஒரு காரணம் வைத்துக்கொண்டு வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கும் நாங்கள் ‘வீட்டுக்கு இப்போது வரவேண்டாம், வரவே வேண்டாம்…’ என அலறும் நிலை ஏற்பட்டுள்ளதை  நினைக்கும்போது காலம்தான் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தி கடக்கிறது என்ற உண்மை மனதைத் தைத்தது.

கொரோனா பரவாமல் இருப்பதற்கு ‘சுய பாதுகாப்பு’ ஒன்றே இப்போதைய தீர்வாக இருப்பதால் மாஸ்க், சானிசைடர், சமூக இடைவெளி மூன்றையும் தவறாமல் கடைபிடிப்போம்.

நம் பாதுக்காப்பு நாம் இயங்கும் இந்த சமுதாயத்துக்குமான பாதுகாப்பு என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 22 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon