ஜம்முனு வாழ காம்கேரின் OTP-54: ‘நான் இப்படித்தான்’ என்று சொல்லும் மன உறுதி இருக்கிறதா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 54
பிப்ரவரி 23, 2021

‘நான் இப்படித்தான்’ என்று சொல்லும் மன உறுதி இருக்கிறதா?

பல சிக்கல்கள் ஆரம்பத்திலேயே நம் விருப்பு வெறுப்புகளை சொல்லி நம்மை சரியாக வெளிப்படுத்திக் கொள்ளாததில் இருந்து தொடங்குகிறது. தொடக்கத்தில் ஒரு சிறு புள்ளியாக இருக்கும் சிக்கல் நாளடைவில் பெரும் சிக்கலாகி அவிழ்ப்பதற்கே கடினமாகி, சிக்கலான நூற்கண்டை கத்தறிக்கோல் வைத்து வெட்டி சிக்கலை எடுப்பதைப்போல, சிக்கலை விட்டு வெளியேறுவதற்குள் பல சோதனைகளை கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும்.

ஆரம்பத்திலேயே சொல்லி விட்டால் சிக்கலே வராது என்று அர்த்தமா? என்ற சந்தேகம் வரலாம்.

சிக்கல்கள், பிரச்சனைகள், சோதனைகள் இவை இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால் அவை சட்டத்துக்கு விரோதமாக, தர்மத்துக்கு எதிராக, நம் மனசாட்சிக்கு துரோகமாக மாறி நம்மை சிதைக்கத் தொடங்குவதற்கு முன் நம்மை பாதுகாத்துக்கொண்டு வாழ வேண்டுமானால் அதற்கான முதல் படி ‘நம்மை நாம் சரியாக வெளிப்படுத்திக்கொள்ளுதல்’.

அது காதலாக இருக்கலாம், நட்பாக இருக்கலாம், குடும்ப உறவுகளாக இவ்வளவு ஏன் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதள தொடர்பில் உள்ளவர்களாக இருக்கலாம்.

யாராக இருந்தால்தான் என்ன?

‘நான் இப்படித்தான்’ என்று தைரியமாக சொல்வதற்கான மனோநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அன்பாக இருப்பதும், பண்பாகப் பழகுவதும், மரியாதையாக நடந்துகொள்வதும் எவ்வளவு முக்கியமோ அத்தனை முக்கியம் நம்மை மிகச் சரியாக வெளிப்படுத்திக்கொள்ளும் தைரியம்.

‘எனக்கு இதெல்லாம் பிடிக்காது’ என்று சொன்னால் அந்த நட்பு நம்மை விட்டு விலகிப் போய்விடுமோ, ‘நம்மை தவறாக நினைத்துவிடுவார்களோ’, ‘நம்மைப் பற்றிய நல்லெண்ணம் போய்விடுமோ’ என்றெல்லாம் குழப்பம் உண்டாகும்தான்.

நமக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை தைரியமாக உரக்கச் சொன்னால் அதற்கு மதிப்பளிக்காமல் நம்மை விட்டு விலகும் தொடர்புகள் நம்முடன் இருந்துதான் என்ன சாதிக்கப்போகிறது. விலகிப்போகட்டுமே. உடன் இருந்து குடைச்சல் கொடுத்துக்கொண்டே இல்லாமல் நல்லவர்கள் நம் தொடர்பில் வருவதற்கு ஒரு சீட்டை காலியாக்கி இடம் விட்டு விலகிச் செல்வது உத்தமம்தானே?

உதாரணத்துக்கு ஒருவர் உங்களிடம் தன் காதலை சொல்கிறார் என வைத்துக்கொள்வோம். அது குறித்து ஆழமாக சிந்தித்து ஒரு முடிவெடுங்கள். விருப்பம் இல்லை என்றால் உங்களுக்கு விருப்பம் இல்லை என்பதை உங்கள் பாணியில் மிகத் தெளிவாக சொல்லிவிடுங்கள். அதுவும் எவ்வளவு விரைவாக காலதாமதமின்றி சொல்ல முடியுமோ சொல்லிவிடுங்கள்.

பெரிதாக காரணங்களை எடுத்துச் சொல்லி உரையாடலை அதிகரித்தால் அந்த உரையாடலில் இருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை எடுத்து வைத்துக்கொண்டு உங்களை ‘கார்னர்’ செய்வார்கள்.

அதற்காக எந்த பதிலையும் சொல்லாமல், ரியாக்‌ஷனே காண்பிக்காமல் ஒதுங்கிச் செல்வதாக நினைத்துக்கொண்டு எதிராளியை ஒதுக்கினால் பிரச்சனை பெரிதாகுமே தவிர குறையாது.

இது விஷயத்தை ஆரம்பத்திலேயே சரி செய்யும் ஒரு யுக்தி. அப்படிச் சொன்னால் எதிராளி விலகிவிடுவார்களா, தொந்திரவு செய்ய மாட்டார்களா? என நினைக்கலாம். நல்லவர்களாக இருந்தால் புத்தியோடு பிழைப்பவர்களாக இருந்தால் விலகலாம். இல்லையென்றால் தொந்திரவும் கொடுக்கலாம்.

அந்த சூழல் அந்தப் பிரச்சனையின் இரண்டாவது நிலை. அப்படிப்பட்ட சூழலை சமாளிப்பது என்பது அந்தந்த பிரச்சனையைப் பொருத்தது. வழிகள் தானாகவே பிறக்கும்.

எதுவுமே பதில் சொல்லாமல் ஒதுங்கிச் செல்வதாக நினைத்து ஒதுக்க ஆரம்பிக்கும்போது எதிராளியின் எதிர்பார்ப்புகள் கூடிக்கொண்டே இருக்கும். கற்பனைகளை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள். மனதளவில் தாங்களாகவே பல கோட்டைகளை உருவாக்கிக்கொண்டு தடுமாறிக்கொண்டிருப்பார்கள்.

தாமதமாக நீங்கள் சொல்லும் பதிலால் அவர்களின் கற்பனைக் கோட்டை சரியத் தொடங்கும்போது என்ன செய்கிறோம் என்ற உணர்வே இன்றி எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.

இது காதல் என்ற விஷயத்துக்கு மட்டுமல்ல. நட்பாகவும் இருக்கலாம். உங்கள் நட்புகளை, குடும்ப நட்புகளாக மாற்றிக்கொள்ள முடிந்தால் இன்னும் உத்தமம். தவறுகள் குறையும். தவறு செய்ய வேண்டும் என்கின்ற சிந்தனை வருவதற்கே வாய்ப்பே கொடுக்காமல் இருப்பதுதான் தவறுகள் நடக்காமல் இருப்பதற்கான ஒரே வழி. அதையும் மீறி தவறுகள் நடந்தால் அது சர்வ நிச்சயமாக நம்மை நாமே சீரழித்துக்கொள்ளும் ஒரு செயலாகவே இருக்கும். யானை தன் தலைமீது தானே மண்ணை எடுத்துத் தூவிக்கொள்ளும் செயல்போலதான். வேறென்ன சொல்ல?

உதாரணத்துக்கு, இங்கு ஃபேஸ்புக்கில் என்னுடைய படைப்புகளின் தொடர் வாசகர்கள் மிக கண்ணியமாக பண்பாக பழகுகிறார்கள், தங்கள் கருத்துக்களைப் பதிவிடுகிறார்கள் என்றால் அதற்கு மிக முக்கியக் காரணம் நான் என்னை சரியாக வெளிப்படுத்திக்கொள்ளும் யுக்தியினால் மட்டுமே.

ஒருசிலர் ‘ஒரு அலுவலகம் போன்று இருக்கிறது உங்கள் முகநூல் பக்கம்’, ‘இவ்வளவு உறுதியான சட்ட திட்டங்களுடன் எப்படி உங்கள் முகநூல் பக்கத்தை வழிநடத்த முடிகிறது?’ என்றெல்லாம் வியந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே பதில் இதுதான்:

‘என் 22 வயதில் நிறுவனம் தொடங்கினேன். அந்த வயதில் என்னிடம் பணியில் இருந்தவர்களும் ஏறக்குறைய அதே வயதினர்தான். அவர்களிடம் வேலை வாங்குவது என்பது அத்தனை எளிதல்ல. சம வயதினர் தானே, இவளிடம் நாம் வேலை செய்ய வேண்டியுள்ளதே, அதிலும் ஒரு பெண் தலைமையில் பணி புரிய வேண்டியுள்ளதே என்றெல்லாம் ஏகப்பட்ட மனச்சிக்கல்கள். வயதானவர்களை பணிக்கு எடுத்தால் நம்மைவிட வயதில் சிறிய பெண்ணிடம் பணி செய்ய வேண்டியுள்ளதே என்ற தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். இப்படி பல்வேறு மனச்சிக்கல்களில் சிக்குண்டிருப்பவர்களை மனதளவில் சமன்படுத்தி ஒழுக்கமான ஒரு சூழலை கொண்டு வந்து நிர்வாகம் செய்ய வேண்டுமென்றால் நான் எத்தனை உறுதியான மனப்பக்குவத்தில் இருக்க வேண்டும். அன்று தொடங்கிய பயணம் இப்போது சமூக வலைதளங்கள் வரை தொடர்கிறது.

இன்றும் நினைவிருக்கிறது ‘லோகநாதன்’ என்ற ஒரு கிளையிண்ட் எங்கள் நிறுவனத்தில் இருந்து தகவல்களைப் பெற்றுச் சென்று தன் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் டைப் செய்து ஃப்ளாப்பியில் கொண்டு தருவார். அப்போது அவருக்கும் என் வயதே இருக்கும். போனில் பேசும்போது ‘நான் லோகு பேசறேன்…’ என்று ஆரம்பித்து பேசுவார்.

அந்த வயதில் நான் என்ன பதில் சொன்னேன் தெரியுமா?

‘சார், உங்கள் முழு பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு பேசுங்கள். லோகநாதன் என்றே சொல்லுங்கள், அதுபோல என்னை மேடம் என்றே அழையுங்கள்…’ என்று மிகத் தெளிவாக சொன்னது இன்றளவும் எனக்கு நினைவில் இருக்கிறது.

பெயர் சொல்லி அழைக்கும் மேலைநாட்டுக் கலாச்சாரம் அதிகமுள்ள ஐடி நிறுவனத்தைத் தொடங்கி நிர்வாகம் செய்யும்போதே எங்கள் நிறுவனத்தில் நம் பாரத தேசத்தின் பண்புகளுடன் நிர்வாகம் செய்ய முடிகிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எந்த இடத்தில் எப்படி வித்தியாசப்படுகிறேன் என்று. எங்கள் நிறுவனத்துக்குள் வருபவர்கள் கோயிலுக்குள் வருவதைப் போல உணர்வார்கள். குறிப்பாக என் அறையில் தெய்வீக அலை வீசுவதாக பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

சாரோ, மேடமோ, ‘ஜி’யோ, ஐயாவோ, அம்மாவோ எப்படிப்பட்ட அடைமொழியைப் பயன்படுத்துகிறீர்களோ அது உங்கள் இஷ்டம். ஆனால் சரியான அடைமொழி தேவை. அடைமொழி எதுவாக இருந்தாலும் அது நம்மை எதிராளியிடம் இருந்து சரியான இடைவெளியை அமைத்துக்கொள்ள உதவும் ஒரு அரண். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் உங்களுக்குள் பேசிக்கொள்ளலாம். அதை தவறு என்று சொல்லவில்லை.

நான் அப்பா போல நினைத்தேன் அப்படி நடந்துகொண்டார், நான் பாட்டிபோல நினைத்தேன் இப்படி நடந்துகொண்டார், நான் அண்ணா போல நினைத்தேன் இப்படி செய்வார் என நினைக்கவே இல்லை என்று புலம்பாமல் இருக்க நமக்கு நாமே அரண் அமைத்துக்கொள்வதுதான் ஒரே வழி.

நம் நிஜ அப்பா அம்மா அண்ணா அக்கா தம்பி தங்கை தவிர  ‘அவர்களைப் போல’ என்று கருதும் உறவுகள் எல்லாம் எந்த நேரத்திலும் தடம் மாறுவதற்கு வாய்ப்புண்டு. அதற்காக எல்லோரையும் சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜாக்கிரதையாக இருப்பதில் தவறில்லையே. இப்போதெல்லாம் 80 வயது தாத்தாக்கள்கூட ஆறு ஏழு வயதுள்ள சிறுமிகளை சீரழிப்பதையும், சொந்த அப்பாவே மகளிடம் தவறாக நடந்துகொள்வதையும் செய்திகள் வாயிலாக கேள்விப்படுகிறோம். அடுத்த வீட்டில் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் நம் வீட்டு கதவைத் தட்டாமல் இருப்பதற்கு நமக்கு நாமே சில அரண்களை அமைத்துக்கொள்வதில் தவறே இல்லை.

உயிரினங்கள் மீது அன்பாக இருக்க வேண்டும்தான். அதற்காக நம் வீட்டுத் தோட்டத்துக்குள் அத்துமீறி  நுழைந்து  மேய்ந்து நம்  செடிகொடிகளை  ஆடுகளும், மாடுகளும் பாழ் செய்தால் வேலிபோடாமல் இருப்போமா நம் தோட்டத்துக்கு. சொல்லுங்கள்.

அதுபோலதான் டிஜிட்டல் உலகுக்கும் வேலி அவசியம். நான் இங்கு சொல்லியுள்ள அரண்கள் தவறுகளும் பிரச்சனைகளும் நடக்காமல் இருக்க நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் டிஜிட்டல் வேலி.

அதையும் மீறி பிரச்சனைகள் ஏற்பட்டால் அதையும் சமாளிக்க நமக்கு நம் புத்தி சுயநினைவுடன் இருக்க வேண்டுமானால், பிரச்சனை தொடங்கிய முதல் புள்ளியில் முதன் நிலையில் நாம் எந்த அளவுக்கு சரியாக நடந்துகொண்டிருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது சூட்சுமம்.

வாழ்க்கையில் ஆனந்தமாக பயணிப்போம், அந்தப் பயணத்தில் கவனமும் இருக்கட்டும்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 19 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon