அகத்தின் வலிமை புறத்தின் ’மேக்அப்’!
எனது அமெரிக்கப் பயணத்தில் அங்கு நான் கலந்துகொண்ட ஓரிரு நிகழ்ச்சிகளின் போது என்னை அடையாளம் கண்டுகொண்ட ஒருசிலர் ‘நீங்கள் இன்னார் தானே உங்கள் எழுத்துக்களை பேஸ்புக்கில் படித்திருக்கிறேன். மிக அருமையாக எழுதுகிறீர்கள்’ என பாராட்டிவிட்டு ‘நேரில் ரொம்ப சாஃப்ட்டாக இருக்கிறீர்கள்…’ என்று ‘ஐஸ்க்ரீம் டாப்பிங்’போல கூடுதலாக வாழ்த்துரைத்தார்கள்.
‘அப்போ என்னை கடுமையாகவா கற்பனை செய்து வைத்திருந்தீர்கள்’ என மனதுக்குள் கேட்டுக்கொண்டேன்.
என் எழுத்தை வாசிக்கும் பலரும் இப்படித்தான் என் எழுத்தையும் என் உடல்மொழியையும் ஒப்பிட்டு வியப்பார்கள்.
மேலும் ஒரு சி.ஈ.ஓ ஆக என்னை சந்திக்க வரும் பலரும் இப்படித்தான் சொல்வார்கள்.
பிரச்சனை என வரும்போது அதை நான் எப்படி வலைமையாக அணுகுவேன் என்பதை என்னுடன் பயணிப்பவர்கள் நன்கறிவர்.
இன்றல்ல, நேற்றல்ல… நான் ஏ.வி.சி கல்லூரியில் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரி ஆண்டு மலரில் பெண் குழந்தைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அதை வாசித்த சக மாணவர்கள் மட்டுமில்லாமல் பேராசிரியர்களும் வியந்து பேசிக்கொண்டதாக சொன்னார்கள்.
‘பார்ப்பதற்கு ரொம்ப சாஃப்டா இருக்கிறார். எழுத்து ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு…’
இதற்கு அகவலிமை என்று பெயர். அகத்தில் வலிமையாக இருக்கும் பலர் புறத்தில் அப்படி காட்டிக்கொள்ள முனைவதில்லை அல்லது அவர்கள் புறத்தோற்றம் இயல்பாகவே எளிமையாக அமைந்துவிடுகிறது.
அமெரிக்காவில் ஒரு நிறுவன சி.ஈ.ஓ-வை நிகழ்ச்சி ஒன்றில் நேரில் சந்தித்தேன். அவர் ஒரு பெண். இந்தியர். தமிழர். 40 இருந்து 45 வயதிற்குள் இருக்கும். எளிமை. எளிமை. எளிமையோ எளிமை.
ஒரு அலுவலக ஆன்லைன் மீட்டிங்கிலும் சந்தித்தேன். மிக எளிமையான உடை. எந்த புறப்பூச்சும் இல்லாத பளிச்சென்ற முகம். அழகான புரியும்படியான ஆங்கில உச்சரிப்பு. பேச்சில் கம்பீரம். இவை அத்தனையும் சேர்ந்து அவர் எனக்கு உலக அழகியாகத் தோன்றினார்.
என்னுடைய வியப்பில், உலகளாவிய நிதர்சனம் ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்தது கொள்ள முடிந்தது.
உலகம் முழுவதும் தன்னம்பிக்கையாக இருப்பவர்கள், தைரியமாக இருப்பவர்கள், திறமைசாலியாக இருப்பவர்கள் எல்லோருமே இப்படித்தான் எளிமையாக இருக்கிறார்கள். அமெரிக்காவிலும் இதுபோல நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களின் அகமே அவர்களின் புறத்துக்கான அலங்காரமாகிவிடுகின்றன. அகமும் புறமும் ஒன்றுக்கொன்று போட்டிப் போட்டுக்கொண்டு மிளிர்வதுதான் எத்தனை கம்பீரமாக உள்ளது!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
December 14, 2021 | செவ்வாய் | இந்திய நேரம் அதிகாலை 6 மணி