#Dubai: படிக்க அடம் பிடிக்கிறார்களா?

என் மகனுக்கு படிப்பே வேப்பங்காயாக உள்ளது. எப்படி அறிவுரை சொல்லி திருத்துவது? இதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் சவால்.

அறிவுரை சொல்ல வேண்டாம். இந்தப் பதிவை வாசிக்கச் சொல்லுங்கள் அல்லது வாசித்துக் காட்டுங்கள்.

சமீபத்திய துபாய் பயணத்தின் போது சரவண பவன் ஹோட்டலில்

சில தினங்கள் சாப்பிட நேர்ந்தது.

ஒருநாள் இரவு 7 மணிக்கு டிபன் சாப்பிட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது யாரோ அழைப்பதைப் போல் இருந்தது.

சரவண ஹோட்டல் சர்வர் ஒருவர் சைக்கிளை விட்டு இறங்கினார்.

அங்கு பெரும்பாலும் சைக்கிளையே பயன்படுத்துகிறார்கள்.

‘என்ன சாப்பிட்டீங்களா ஊருக்கு எப்போ கிளம்பறீங்க…’ என்று பொதுவாக விசாரித்தார்.

‘நீங்க என்ன இந்த நேரத்தில்…’ என கேட்டதற்கு ‘டோர் டெலிவரி… கொடுத்துட்டு வரேங்க…’ என்றார்.

அவரது குடும்பம் குழந்தைகள் பற்றி விசாரித்தபோது மொபைலில் தன் குடும்ப புகைப்படத்தை காண்பித்தார். ஒரு மகன் +2 படித்துக்

கொண்டிருப்பதாகவும் ஒரு மகள் முதுகலை படித்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். தஞ்சை மாவட்டத்துக்கு

அருகில் ஒரு ஊரில் வசிப்பதாகவும் சொன்னார். அவர் சொன்ன ஊரின் பெயர் சரியாக நினைவில்லை.

எத்தனை வருடங்களாக துபாயில் வேலை செய்கிறீர்கள்? என்றதுக்கு

‘அது இருங்குங்க 10 வருஷத்துக்கும் மேல்…’ என்றார்.

‘ஊருக்கு எப்போ போவீங்க…’ என்றதற்கு ‘இரண்டு வருஷத்துக்கு ஒருமுறை ஐந்தாறு நாட்கள் சென்று வருவேன். இப்போ கொரோனா காலத்துல அதுவும் போகலை…’ என்றார்.

ஒரு மகன், ஒரு மகளா என்று கேட்டதற்கு ‘என் மூத்த மக பத்தாம் வகுப்பு படிச்சுட்டிருந்தபோது இறந்துடிச்சு. ரொம்ப நல்லா படிக்கும்…’ என்றார் ஆதங்கத்துடன்.

‘ஏன் என்னாச்சு’ என பதறியதற்கு ‘ஜூரம் வந்தது. இன்னும்

நல்ல ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போயிருக்கலாம்.

நான் இங்க இருந்தேன். வீட்ல அவங்களுக்கு தெரிஞ்ச டாக்டர்கிட்ட

காமிச்சிருக்காங்க… சாதாரண ஜூரம்னு சொல்லி அனுப்பிட்டாங்க… மூளைக் காய்ச்சல்னு ரொம்ப லேட்டா தான் தெரிஞ்சுது…’

என்று சொல்லி பெருமூச்சு விட்டவர் கடைசியாக சொன்னவை இன்றும் மனதில் வலியாய் கேட்டுக் கொண்டிருக்கிறது.

‘நான் மட்டும் அந்த சமயத்தில் அங்கிருந்திருந்தேன்னா என் மகள எப்படியாவது பொழைக்க வச்சிருப்பேன்…’ என சொல்லிவிட்டு மொபைலில் இரட்டைப் பின்னல் போட்டு பள்ளிக்குச் செல்லத் தயாராக இருக்கும் தன் மூத்த மகளின் புகைப்படத்தைக் காண்பித்தார்.

குடும்பத்துக்காக உழைப்பது சுகம். ஆனால் குடும்பம் இருந்தும் வாழ்நாளின் பெரும்பகுதியை குடும்பத்தைப் பிரிந்து தன்னந்தனியாக  உழைப்பதற்காகவே வாழ்வது நரகம்!

படித்தால் இந்த உலகில் எங்கேனும் ஒரு மூலையில் குடும்பத்துடன் வாழ முடியும். படிக்கவில்லை என்றால் இந்த நிகழ்வில் வரும் சர்வரின் நிலைதான் எங்கெங்கும்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 24, 2022 | வெள்ளி | இந்திய நேரம் அதிகாலை 6 மணி

(Visited 27 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon