துபாய் பயணத்தில் நான் தங்கி இருந்த ஓட்டல் வரவேற்பறையை சுற்றி கண்ணாடி சுவர்கள். உள்ளிருந்தும் வெளியில் பார்க்கலாம். வெளியில் இருந்தும் உள்ளே பார்க்கலாம்.
ஒருநாள் புக் செய்திருந்த காருக்காக காத்திருந்தேன். கார் வரும் வரை லேப்டாப்பில் ப்ராஜெக்ட்டுக்கான லாஜிக் ஒன்றை ஒர்கவுட் செய்துகொண்டிருந்தேன்.
அப்போது திடீரென ஒருவர் அருகில் வந்து நிற்க நிமிர்ந்து பார்த்தேன். தமிழ்நாட்டு மனிதர் என முகஜாடை சொன்னது. ‘என்ன வேண்டும்?’ என்பதைப் போல முகபாவனையில் கேட்டேன்.
‘நீங்கள் தமிழா?’ என கேட்டுவிட்டு சட்டைப் பையில் இருந்து ஏதோ அடையாள அட்டையைக் காண்பித்து பரபரப்பாக ‘ஊருக்கு போக பணம் இல்லை. இருபது டினார் இருந்தா கொடுங்களேன்…’ என்று கேட்டார், அவர் கேட்டதை நான் உள்வாங்குவதற்குள் ஓட்டல் மேனேஜர் அவரை அவசரமாக அப்புறப்படுத்தினார்.
அப்போதுதான் கவனித்தேன். என்னைத் தவிர வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் அந்த நாட்டைச் சார்ந்தவர்கள். சாலையில் இருந்து கண்ணாடி சுவர் வழியாக வரவேற்பறையின் சோபாவில் அமர்ந்திருக்கும் என்னை பார்த்து என் முகசாயலை சரியாக கணித்து ‘நீங்கள் தமிழா’ என கேட்டது ஆச்சர்யமாக இருந்தது.
அதற்குள் மேனேஜர் என்னை நெருங்கி ‘சாரி மேடம், இங்கு இதுபோல நிறைய பேர் இருக்கிறார்கள்… ஊருக்குப் போகணும் என்று பணம் கேட்டு தொந்திரவு செய்வார்கள்… கவனம்’ என்றார்.
எந்த ஊருக்குப் போக வேண்டும்? அதற்கு எப்படி 20 டினார் போதும்? நிஜமாகவே பணத் தேவையில் கேட்டாரா? இல்லை இப்படி எல்லோரிடமும் கேட்டுப் பிழைக்கிறாரா?
எது எப்படியோ, திக்குத் தெரியாத ஊரில் இப்படி கையேந்திப் பிழைக்கும் நிலை யாருக்கும் வரக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.
கூழோ கஞ்சியோ குடும்பத்துடன் சேர்ந்து குடித்து ஒன்றாக சேர்ந்து வாழும் வாழ்க்கைதான் நிம்மதியான வரம் பெற்ற வாழ்க்கை!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜனவரி 30, 2022 | ஞாயிறு | இந்திய நேரம் அதிகாலை 6 மணி