அமெரிக்காவில் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்பவர்கள் பெரும்பாலும் சொந்த காரில் தானே டிரைவ் செய்து செல்கிறார்கள். 15, 16 மணி நேர டிரைவ் எல்லாம் சர்வ சாதாரணம். அப்படி இல்லை என்றால் விமானப் பயணமே. மற்றபடி தனியார் ‘கேப்’ வைத்துக்கொண்டு டிரைவர் ஏற்பாடு செய்துகொண்டு செல்வதெல்லாம் மிக மிக செலவு. அப்படியே ‘கேப்’ ஏற்பாடு செய்தாலும் தாங்களே டிரைவ் செய்துகொண்டுதான் சொல்வார்கள்.
நான் ஃபென்டனில் இருந்து கலிபோர்னியா செல்வதற்காக ஏற்பாடு செய்திருந்த விமானத்தில் அரை மணி நேரம் இடையில் டிரான்ஸிட். இறங்கி வேறு விமானம் ஏற வேண்டாம். விமானத்திலேயே உட்கார்ந்திருக்கலாம். அந்த இடத்துக்குச் செல்வதற்காக புக் செய்தவர்கள் மட்டும் இறங்குவார்கள்.
நீண்ட நேரம் விமானத்தில் உட்கார்ந்திருந்ததால் எழுந்து நடக்கலாம் என நினைத்து எழுந்து நின்றேன். விமானத்தின் முன் இருக்கையில் நான் அமர்ந்திருந்ததால், திரும்பிப் பார்த்தேன். விமானத்தில் கடைசி இரண்டு மூன்று சீட்டுகளில் மட்டும் மனிதத் தலைகள் தெரிந்தன. ஆட்களே இல்லாத விமான இருக்கைகள் அத்தனை அழகாக நேர்த்தியாக இருந்தது.
இங்கு மக்களை அவர்கள் ஒப்புதல் இல்லமால் போட்டோ எடுக்கக் கூடாது என்பதால் போட்டோ எடுக்கவில்லை. நான் போட்டோ எடுக்கும்போது அவர்கள் அத்தனைத் தெளிவாகத் தெரிய மாட்டார்கள் என்றாலும் அவர்கள் அனுமதி பெற வேண்டும் என்ற நியதி வலுவாக என்னுள் பதிந்திருந்ததால் புகைப்படம் எடுக்காமல் காட்சியை மட்டும் மனதில் படமாக்கிக்கொண்டேன்.
இரண்டு அடி முன்னே சென்றால் பைலட்(கள்) அமர்ந்திருக்கும் காக்பிட் (Cockpit) பகுதி. விமானத்தில் பைலட், கோபைலட் என இரண்டு பைலட்டுகள் இருப்பார்கள். அவர்கள் அமர்ந்திருக்கும் ‘காக்பிட்’ பகுதியின் கதவு முழுமையாகத் திறந்திருந்தது. அந்தக் கதவுக்குப் பின்னால் டாய்லெட்.
காக்பிட்டின் வலது பக்க இருக்கையில் பைலட் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். இடது பக்கம் அமர்ந்திருந்த பைலட் கையில் ‘கோக்’. மெதுவாக குடித்துக்கொண்டிருந்தார். நான் நடந்து சென்று ஆர்வத்துடன் காக்பிட் பகுதியை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது தவறுதலாக திறந்திருந்த கதவில் லேசாக இடித்துவிட்டேன். உடனே இருவரும் திரும்பிப் பார்த்து புன்னகையுடன் ‘மே ஐ ஹெல்ப் யு’ என்று ஒருவரும், ‘டு யு வாண்ட் டு யூஸ் ரெஸ்ட் ரூம்… கேன் ஐ குளோஸ் த காக்பிட் டோர்?’ என மற்றொருவரும் மாறி மாறி கேட்க நான் கொஞ்சமாக பதற்றமானேன். அந்தப் பதற்றத்துக்குக் காரணம் கூச்சமோ அல்லது வேறெதுவோ இல்லை.
பிறகு வேறென்ன?
கார்பிட் பகுதியின் கதவு திறந்திருந்ததால் அதன் பின்னால் உள்ள ரெஸ்ட் ரூம் கதவை திறப்பதற்கு நான் கஷ்டப்படுவதாக நினைத்து கார்பிட் பகுதியின் கதவை மூடுவதற்காக இருவரும் எழ முயற்சித்த அந்த கண்ணியமும், பொறுப்பும்தான் காரணம்.
‘நோ… நோ… நோ… ஜஸ்ட் ஐ வாண்ட் டு சீ யுவர் வொர்க் ஸ்பேஸ்…’ என சொல்லி நானும் புன்னகைத்து விட்டு நன்றி சொல்லி என் இருக்கையில் வந்தமர்ந்து கொண்டேன்.
இப்படித்தான் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகில் அவ்வப்பொழுது நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பவர்கள் ‘வசியம்’ எதுவும் வைப்பதில்லை. நம் எல்லோருக்குள்ளும் இருக்க வேண்டிய அடிப்படை குணாதிசயங்களை அநாயசமாக வெளிப்படுத்துகிறவர்களாக இருப்பார்கள். அவ்வளவுதான்.
பெரும்பாலானோரைக் கவர்பவர்கள் மாய மந்திரங்கள் எதுவும் செய்வதில்லை, தங்களின் மேன்மையான குணத்தினை கண்ணியமாக வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜனவரி 28, 2022 | வெள்ளி | இந்திய நேரம் அதிகாலை 6 மணி