#USA: குப்பைக்கும் மரியாதை, கழிவறைகளிலும் சுத்தம்!

விழாக்களும் கொண்டாட்டங்களும்!

விழாக்களும் கொண்டாட்டங்களும் நம் நாட்டைப் போலவே இங்கும் உள்ளன. இருக்கும் இடத்தை வண்ண மயமாக்கிக் கொள்கிறார்கள். கொண்டாடி மகிழ்கிறார்கள்.

சுதந்திர தினம் (ஜுலை 4), ஹாலோவென், தேங்க்ஸ் கிவிங், கிருஸ்துமஸ், மார்ட்டின் லூதர் கிங் டே, பிரசிடன்ஸ் டே / வாஷிங்டன்ஸ் பர்த்டே, மெமோரியல் டே, லேபர் டே, வெட்ரன்ஸ் டே போன்றவை விடுமுறையுடன் கூடிய விசேஷ தினங்கள்.

ஹாலோவென் டே – Holy Evening என்பது Halloween என காலப்போக்கில் மாறியுள்ளது. இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் புனிதமான மாலைப் பொழுது Holy Evening என பெயர் பெற்று Halloween ஆக மாறிவிட்டது. இறந்தவர்கள் ஆவியாக வீடுகளுக்கு வருவதாக அவர்கள் நம்பிக்கை. அதனால் தான் அன்றைய தினம் மிக பயங்கரமாக வீட்டை அலங்கரித்து வைப்பார்கள். குழந்தைகளும் பிறரை பயமுறுத்தும் பயங்கரமான வேடம் அணிந்து வீடு வீடாக செல்வார்கள். அப்படி வீட்டுக்கு வரும் குழந்தைகள் விளையாட்டாக பயமுறுத்துவார்கள். அவர்களுக்கு சாக்லெட்டுகள் கொடுத்து அனுப்புவார்கள். அலுவலகங்களில் பெரியவர்களும் மாறுவேடம் அணிந்து வரலாம். யார் மிக பயங்கரமாக வேடம் அணிந்து வருகிறார்களோ அவர்களுக்கு பரிசுகொடுத்து உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்துகிறார்கள்.

கிருஸ்துமஸ் – வீட்டையும், ஊரையும் வண்ணமயமாக அலங்கரிக்கிறார்கள். கடைகளை, அலுவலகங்களை, ஷாப்பிங் மால்கள் என அனைத்துமே கண்களைக் கவரும் ஒளிரும் விளக்குகளால் அலங்கரித்து மகிழ்கிறார்கள். கிருத்துமஸ் வருவதற்கு சில வாரங்கள் முன்பில் இருந்தே அலங்கரிக்கப்படும் அலங்கார விளக்குகள் கிருஸ்துமஸ் முடிந்தும் சில வாரங்கள் அப்படியே இருக்கின்றன.

தேங்க்ஸ் கிவிங் டே – நன்றி செலுத்தும் தினம். அன்றைய தினம் தங்களுக்கு கிடைத்திருக்கும் உணவு, உடை, செல்வம் எல்லாவற்றுக்கும் இறைவனுக்கும், இயற்கைக்கும், தன்னுடன் இணைந்து பயணிக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி செலுத்தும் தினம். அன்றைய தினம் குடும்பமாக சேர்ந்து விருந்து தயாரித்து சாப்பிடுகிறார்கள். ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள்.

பிரசிடென்ட் டே – ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளை சிறப்பிக்கக் கொண்டாடும் தினம். ஒருசில இடங்களில் ஜார்ஜ் வாஷிங்டன், ஒருசில இடங்களில் அப்ரஹாம் லிங்கன், இன்னும் சில இடங்களில் இருவருக்கும் சேர்த்து அல்லது வேறு சில அமெரிக்க ஜனாதிபதிகளுக்கும் சேர்த்து என ஜனாதிபகளை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் தினம்.

மார்ட்டின் லூதர் கிங் டே – கருப்பின மக்கள் அமெரிக்க சட்ட உரிமைகளுக்காகவும், சம உரிமைக்காகவும் போராடிய போராளியான மார்ட்டின் லூதருக்கு மரியாதை செலுத்தும் தினம்.

லேபர் டே – தொழிலாளர்கள் தினம், நாட்டின் செழிப்புக்காக உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதிக்கும் தினம்.

மெமோரியல் டே – நினைவு தினம், இராணுவத்தில் பணிபுரிந்து நாட்டுக்காக போராடி இறந்தவர்களின் நினைவாகக் கொண்டாடப்படும் தினம்.

வெட்ரன்ஸ் டே – படைவீரர்கள் தினம், இராணுவத்தில் பணிபுரிந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் தினம்.

எந்த சிறப்பு தினமாக இருந்தாலும் ஷாப்பிங் மால்களில் சிறப்பு விற்பனை உண்டு. தள்ளுபடி விற்பனை நடக்கும். அப்போது விற்பனை அமோகமாக நடக்கும்.

சமையலும், சமையலுக்குப் பிறகான குப்பையும்!

அமெரிக்கர்கள் காரம் குறைவாகவே சமைக்கிறார்கள். நம் ஊர் போல சாதம், சாம்பார், ரசம் எல்லாம் கிடையாது. கொஞ்சம் காரம் இருந்தாலே கண்களில் இருந்து த(க)ண்ணீர் வந்துவிடும்.

பயறு, பருப்பு வகைகளை அவர்கள் எடுத்துக்கொள்ளும் பதம் வேறு மாதிரியாக இருக்கும். பழங்களையும், பச்சைக் காய்கறிகளையும் நிறைய எடுத்துக்கொள்கிறார்கள். பீட்சா, பாஸ்தா, பர்கர், டோனெட்ஸ் போன்றவற்றை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். குளிர்பானங்கள் நிறைய சாப்பிடுகிறார்கள். நம் ஊர் இட்லி சாம்பார் அவர்களுக்கும் பிடிக்கும்.

சமைப்பது பெரிதல்ல. சமைத்தபின் சேரும் குப்பைகளை பிரிப்பதில்தான் இருக்கிறது சுகாதாரத்தின் சூட்சுமம். குப்பைத் தொட்டியை பராமரிப்பதில்தான் எத்தனை சிரத்தை அவர்களுக்கு? மக்கும் குப்பை, மக்காத குப்பை, உரத்துக்குப் பயன்படும் குப்பை, மறுசுழற்சிக்கான குப்பை என தரம் பிரித்து குப்பைகளை அததற்கான குப்பைத் தொட்டிகளில் போடுகிறார்கள்.

வாரத்தில் இரண்டு நாட்கள் குப்பை லாரி வருகிறது. ஒரு நாள் மக்கும் குப்பைக்காக, ஒரு நாள் மக்காத குப்பைக்காக. அன்றைய தினம் காலையிலேயே எல்லோர் வீட்டு வாசலிலும் அந்த குப்பைத்தொட்டிகளை கொண்டு வைத்துவிடுகிறார்கள். குப்பை லாரி வந்து குப்பைகளை எடுத்துக்கொண்டு காலியான குப்பைத் தொட்டியை அவரவர் வீட்டு வாசலிலேயே வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.

ஓரிடத்தில் வாழும் இந்தியர்கள் ஒற்றுமையாக யாரேனும் ஒருவர் வீட்டில் ஒருங்கிணைகிறார்கள். அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த உணவை சமைத்து எடுத்துவந்து பகிர்ந்து பண்டிகை தினங்களை கொண்டாடுகிறார்கள். நவராத்திரி கொலுவெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் களைக்கட்டும். நவராத்தியின் 9 நாட்களும், தினம் ஒரு வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளி, பொங்கல், நவராத்திரி போன்ற பண்டிகை தினங்களின்போது அமெரிக்கர்களையும் விருந்தினர்களாக அழைக்கிறார்கள்.

பெரும்பாலும் அமெரிக்கர்களுக்கு வருங்காலத்துக்காக சேர்த்து வைக்கும் பழக்கம் கிடையாது. ஒரே ஒரு முறை கிடைத்திருக்கும் அரிய அற்புத வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சனி, ஞாயிறு  வார விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் உற்சாகமாக வெளியில் கிளம்பி விடுவார்கள். வாரத்தின் சனி, ஞாயிறுடன் சேர்த்து இன்னும் ஒருநாள் கூடுதலாக விடுமுறை கிடைத்தால் அதை ‘லாங் வீக் எண்ட்’ என்கிறார்கள். வெளியூர்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்கள்.

பொது இடங்களில் உள்ள கழிவறைகள்!

இங்கு கழிவறைகளை ரெஸ்ட் ரூம் என்கிறார்கள். பொது இடங்களில் உள்ள கழிவறைகள்கூட சுத்தமோ சுத்தம். நாள் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கின்ற விமானநிலையங்கள் முதற்கொண்டு மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள சிறிய சிறிய கடைகள் வரை கழிவறைகள் இப்படித்தான் சுத்தமாக இருக்கின்றன. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இப்படி ஒரு நேர்த்தியையும் ஒழுங்கையும் பராமரிக்கவே முடியாது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 8, 2022 | செவ்வாய் | இந்திய நேரம் காலை 6 மணி

(Visited 641 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon