#USA: அமெரிக்காவில் மதங்களும், நம்பிக்கைகளும்!

அமெரிக்காவில் மதங்களும், நம்பிக்கைகளும்!

அமெரிக்கர்களின் நம்பிக்கை கிறிஸ்துவம் என்றாலும் அவர்கள் மற்ற மதங்களை இழிவாக பேசுவதில்லை. பொதுவாக அமெரிக்கர்களில் இரண்டே பிரிவினர்தான்.  எந்த ஒரு விஷயத்தையும் பின்பற்றுவர்கள் அல்லது பின்பற்றாதவர்கள். இந்த இரண்டே பிரிவில் அவர்களை அடக்கிவிடலாம் என்கிறார்கள். ஒருவரை ஒருவர் எதிர்ப்பதற்காக இழிசெயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் சொல்கிறார்கள்.

உதாரணத்துக்கு, அங்குள்ள பள்ளி கல்லூரிகளில் உலகின் பலதரப்பட்ட நாடுகளில் இருந்தும் மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு பைபிள் வாசிக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டாலும் மற்றவர்களின் மத நம்பிக்கையை அவர்கள் தரக் குறைவாக பேசுவதில்லை. கல்விக்கூடங்களில் இந்தியப் பாரம்பர்யத்தை முழுமையாகப் பின்பற்றும் இந்தியக் குடும்பத்து மாணவர்கள்  சந்தனம், குங்குமம், விபூதி இட்டுக்கொண்டோ, ஸ்படிக மாலை அணிந்துகொண்டோ வந்தால் பள்ளி நிர்வாகம் தடுப்பதில்லை. இவ்வளவு ஏன் குடுமி வைத்துக்கொண்டுச் சென்றாலும் தடுப்பதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதை ஏதோ மிகைப்படுத்துவதற்காக சொல்வதாக நினைக்க வேண்டாம். அக்மார்க் முத்திரை நிஜம். சக மாணவர்களும் கிண்டல் செய்வதில்லை.

நானே ஒருசில மாணவர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களிடம் ‘சக மாணவர்கள் கிண்டல் செய்ய மாட்டார்களா?’ என கேட்டதற்கு ‘இரண்டு நாள் வித்யாசமாகப் பார்ப்பார்கள். மூன்றாவது நாள் இவன் இப்படித்தான் என புரிந்துகொள்வார்கள். நாம் நம் கல்ச்சரை ஏன் விட்டுக்கொடுக்கணும்…’ என முதிர்ச்சியோடு பேசும் அபூர்வ இந்திய சிறுவர்களும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அப்படி செயல்படுவதற்குக் காரணம் அவர்களின் பெற்றோரும், அந்தப் பெற்றோரின் பெற்றோருமே. அதாவது வழிவழியாக அவர்கள் பின்பற்றும் குடும்பத்துப் பழக்க வழக்கங்களும், பண்பாட்டு நெறிகளும்தான் இன்றைய தலைமுறை குழந்தைகளின் செயல்பாடுகளாக வெளிப்படுகின்றன. அவர்கள் வாழ்ந்து காட்டி கற்றுக்கொடுத்த பாரம்பர்ய பொக்கிஷங்களின் பிரதிபலிப்பே அந்த அபூர்வக் குழந்தைகள்.

கல்விக்கூடங்களில் வருடத்தில் ஒருநாள் சீருடைத் தவிர்த்து அவரவர்கள் பாரம்பர்ய உடை அணிந்து வர அனுமதிக்கப்படுகிறார்கள். அவரவர்கள் கலாச்சாரப் பாரம்பர்யம் பற்றியெல்லாம் கலந்துரையாட அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பைபிள் பற்றி சொல்லும்போது, மாணவர்கள் பகவத் கீதை குறித்தும் பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். ஆசிரியர்களும் ஆர்வமாகக் கேட்கிறார்கள்.

அங்குள்ள அமெரிக்க ஆசிரியர் ஒருவரது டேபிளில் சிறியதாக சரஸ்வதி சுவாமி சிலை இருந்தது. விசாரித்தபோது தெரிந்தது, அது ஒரு இந்திய மாணவர் கொடுத்த பரிசுப் பொருளாம்.

அமெரிக்கர்கள் மாலை 6.30 மணிக்குள் தங்கள் இரவு சாப்பாட்டை முடித்துக்கொள்கிறார்கள். சாப்பிடுவதற்கு முன்னர் இறைவனை வணங்கி நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுகிறார்கள். விருந்து, கொண்டாட்டம், விழாக்கள், குடும்ப நிகழ்வுகள் போன்றவற்றில் சாப்பிடத் தொடங்குவதற்கு முன்னர் தலை குனிந்து, கண்களை மூடி, ஒருவரை ஒருவர் கைக்கோர்த்துக்கொண்டு அல்லது அவரவர்களின் இருகைகளையும் மடித்து பிரார்த்தனை செய்து கடவுளுக்கு நன்றி தெரிவித்துவிட்டே சாப்பிடத் தொடங்குகிறார்கள். கடவுள் மறுப்பாளர்கள் கூட அவர்கள் சாப்பிடும் உணவுக்காக உழைப்பவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டே சாப்பிடுகிறார்கள்.

‘உங்களின் சாப்பாடு உங்களைப் போன்ற பலரின் கடின உழைப்பின் பலனாகவே உங்களுக்குக் கிடைக்கிறது. அவர்களின் உழைப்பும் ஒத்துழைப்பும் இல்லை என்றால் நீங்கள் சாப்பிட எதுவுமே இருக்காது’ என்று நியூயார்க் நகரைச் சார்ந்த டிம் ஹெல்லர் என்ற எழுத்தாளர் தனது ‘பிரேயர்’ என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

‘It’s a powerful way of reminding yourself that you are not self-sufficient, that you are living by somebody’s grace, that plenty of other people who work just as hard as you don’t have anything to eat’ – Tim Keller, a prominent New York City pastor who wrote a book on prayer.

இரவு 6.30-7.00 மணிக்குள் சாப்பிட்டு விடுவது, உணவு உண்ணும் முன்னர் கடவுளை வணங்குதல், வேற்றுமையில் ஒற்றுமை போன்ற இந்தியப் பாரம்பர்யத்தின் சிறப்பியல்புகளை அமெரிக்கர்களிடமும்  காண முடிகிறதே. நம்மைப் பார்த்தெல்லாம் அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை. வழிவழியாக வரும் அவர்களின் பாரம்பர்யப் பழக்க வழக்கங்கள்தான் அவை.

அங்கே ஒருவருக்கொருவர் அவரவர்கள் சமய வழிபாட்டில் மற்றவர்கள் தலையிடுவதில்லை. மற்றவர்கள் கலாச்சாரத்தை மதிக்கிறார்கள். பொதுவாக சொல்லப்போனால் அமெரிக்கர்களின் மனிதநேயம் நம்மை வியக்க வைக்கிறது.

அதே நேரம் நம் பாரம்பர்யத்தையும் முழுமையாகப் பின்பற்றாமல், ‘When you are in Rome be a Roman’ என்று காலரைத் தூக்கிவிட்டபடி, அமெரிக்கர்களின் பாரம்பர்யத்தையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல், அவர்களைப் போல வாழ்வதாக சொல்லிக்கொண்டும், அவர்களின் பழக்க வழக்கங்களை தங்கள் வசதிக்கு ஏற்ப பொருத்திக்கொண்டும் இரண்டும்கெட்டானாக வாழும் ஒருசில இந்தியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட குழப்பவாதி இந்தியப் பெற்றோர்களால் வளர்க்கப்படும் இந்தியக் குழந்தைகளை ABCD – ‘American-Born Confused Desi’ என்கிறார்கள். குழப்பவாதிகள் குழப்பத்தைத் தானே விதைப்பார்கள். விதைப்பதுதானே முளைக்கும்?

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 10, 2022 | வியாழன் | இந்திய நேரம் காலை 6 மணி

(Visited 831 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon