அமெரிக்காவில் ஆண், பெண் உறவுமுறை!
அமெரிக்காவில் ஆண், பெண் உறவுமுறை பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும். குழந்தைகளை சுயமாக நிற்கும் அளவுக்கு தனித்துவத்துடன் வளர்க்கிறார்கள். குழந்தைகள் கீழே விழுந்தால் நம் ஊர்போல ‘அச்சு, தரையை அச்சு’ என தரையை அடித்துக் காட்டி எல்லாம் சமாதானப்படுத்துவதில்லை. மாறாக, கீழே விழுந்தால் தாங்களாகவே எழுந்து நடக்கும்படி செய்கிறார்கள். சின்னஞ்சிறு குழந்தைக்கும் நீச்சல் சொல்லிக்கொடுக்கிறார்கள். இப்படி வளரும் குழந்தைகளை ஒரு வயதுக்குப் பிறகு சுயமாக சம்பாதிக்கும்படி சூழலை ஏற்படுத்துகிறார்கள். அதனால் இளம் ஆண், பெண்கள் காபி ஷாப்புகளிலும் மால்களிலும் பணிபுரிந்து சம்பாதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
அப்படி சம்பாதிக்கும் பணத்தை வைத்தே மேற்படிப்புக்கு செலவு செய்துகொள்கிறார்கள். அங்கு கல்லூரிப் படிப்பை எந்த நிலையில் பாதியில் விட்டு மீண்டும் தொடரலாம். இந்த வசதி இருப்பதால் முழுநேரம் பணி செய்துகூட பணத்தை சேர்த்து வைத்து மீண்டும் படிப்பை தொடர்கிறார்கள். அதுபோலவே தாங்களாக பணம் சேர்த்து திருமணமும் செய்துகொள்கிறார்கள்.
அதுவரை ஒருவரை புரிந்துகொள்ள பழகுகிறார்கள். அப்போது ஒருவரை ஒருவர் பார்ட்னர் என்கிறார்கள். திருமணம் ஆனதும் கணவன், மனைவியாகிறார்கள். Girl Friend, Boy Friend என்றால் காதலர்கள். Friend என பொதுவாக சொன்னால் சாதாரண நண்பர்கள்.
நம் நாட்டில் நன்றாக படிக்க வைத்து, சொகுசாக வளர்த்து, விரும்பிய வேலை கிடைக்கும் வரை, ஏன் அதன் பின்னரும்கூட பெற்றோர்கள் தாங்கோ தங்கு என்று தாங்குவதால்தான், அமெரிக்க இளைஞர்கள் வேலை செய்துகொண்டே படிப்பதைப் பற்றியும் அமெரிக்கப் பெற்றோர் குறித்தும் மட்டமான கருத்து நிலவுகிறது. அதாவது, ‘ஒரு வயதுக்கு மேல் அமெரிக்காவில் பிள்ளைகளை விட்டேத்தியாக தண்ணீர் தெளித்து விட்டு விடுகிறார்கள்… வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார்கள்…’ அப்படி இப்படி என கட்டுக்கதைகளை அள்ளி விடுகிறார்கள். சுயமாக சம்பாதிக்கிறார்கள். படிக்கிறார்கள். வீடு கட்டிக்கொள்கிறார்கள். திருமணம் குழந்தைகள் என வாழ்கிறார்கள். இது அவர்கள் கலாச்சாரம். அதில் விமர்சிக்கும் அளவுக்கு என்ன தவறு இருக்கிறது சொல்லுங்கள்.
அமெரிக்கர்கள் நினைத்த நேரத்தில் விவாகரத்து செய்துவிட்டு வேறு திருமணம் செய்கிறார்கள் என்பதும் மேம்போக்கான கருத்துதான்.
திருமணம் செய்துகொள்ளும்போது சில நிபந்தனைகள் போட்டுக்கொண்டு டாக்குமெண்ட்டில் கையெழுத்திட்டு திருமண ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள். அந்த நிபந்தனைகளை மீறுவது சட்டப்படி குற்றம்.
கணவன் மனைவியாக வாழும்போது கணவனோ அல்லது மனைவியோ சட்டத்துக்குப் புறம்பாக வேறு தொடர்புகள் வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம். கணவன் மனைவியாக இருக்கும் வரை ‘ஒருவனுக்கு ஒருத்தி’ பாலிசியை மிகக் கடுமையாக பின்பற்றுகிறார்கள்.
கணவன் மனைவியாக வாழும்போது மட்டும் அல்ல அதற்கு முன்பான நிலையில் பழகும்போதும் ஒருவனுக்கு ஒருத்தியாக உண்மையாகப் பழக வேண்டும். மீறினால் குற்றம்.
எந்தக் காரணத்தினாலோ கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து செய்தால் மலைக்க வைக்கும் அளவுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். கணவன் மனைவியைவிட வசதியானவராக இருந்து நல்ல சம்பாத்தியத்துடன் இருந்தால் கணவன் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். மனைவி கணவனைவிட வசதியானவராக இருந்து நல்ல வேலையில் சம்பாத்யத்துடன் இருந்தால் மனைவி கணவனுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். இன்னும் சில இடங்களில் சம்பளம் ஏற ஏற அதற்கேற்றவாறு ஜீவனாம்சமும் அதிகமாகும்.
விவாகரத்தானால் பெரும்பாலும் மனைவி தனது குழந்தைகளை கணவனிடம் விட்டுவிட்டுப் பிரிந்து சென்று விடுகிறார்கள். குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அமெரிக்காவைப் பொருத்தவரை ஆண்களுக்கே அதிகம்.
அமெரிக்காவில் 30, 40 வருடங்கள் சேர்ந்து வாழுந்துகொண்டிருக்கும் அமெரிக்க தம்பதிகளையும் சந்தித்திருக்கிறேன். 3, 4 வருடங்கள் கூட தாக்குப் பிடிக்காத இந்தியத் தம்பதிகளையும் பார்த்திருக்கிறேன்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 9, 2022 | புதன் | இந்திய நேரம் காலை 6 மணி