#USA: சில கேள்விகளும், சில பாராட்டுகளும்!

சில கேள்விகளும், சில பாராட்டுகளும்!

2021-ல் துபாய் அமெரிக்கா பயண அனுபங்களை கடந்த சில தினங்களாக எழுதி வந்தேன். அதற்குக்கிடைத்த சில பாராட்டுகளையும் வாசகர்களிடையே ஏற்படுத்திய தாக்கங்களையும் இன்று பகிர்ந்துகொள்கிறேன்.

அமெரிக்காவில் அரசியல், அமெரிக்காவில் சமூக வலைதளங்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்ற இரண்டு விஷயங்கள் எழுத வேண்டிய தலைப்புகள். விரைவில் எழுதுகிறேன்.

அமெரிக்கா 50 மாநிலங்களை உள்ளடக்கியது. மாநிலத்துக்கு மாநிலம் பழக்க வழக்கங்களிலும் சட்ட திட்டங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் மாற்றம் இருந்தாலும் அடிப்படையில் பொதுவாக இருக்கும் விஷயங்களை மட்டுமே எழுதி வந்தேன். இவ்வளவு ஏன் ஒவ்வொரு மாநிலத்துக்கும் நேரம் கூட வித்தியாசப்படும். உதாரணம்: கலிபோர்னியாவில் மாலை 4.00 மணி என்றால் மிசெளரியில் மாலை 6.00 மணி, ஃப்ளோரிடாவில் மாலை 7.00.

நேரத்தைத் தவிர இந்தியாவில்கூட மாநிலத்துக்கு மாநிலம் எல்லாமே வேறுபடத்தானே செய்கின்றன. தமிழ்நாடு போல் கேரளா இருக்கிறதா? கேரளாவைப் போல் தெலுங்கானா இருக்கிறதா? பழக்க வழக்கம், சீதோஷன நிலை இப்படி எல்லாவற்றிலும் சிறுசிறு மாறுபாடுகள் இருக்கத்தானே செய்கிறது?

எத்தனை மாறுபாடுகளும் வேறுபாடுகளும் இருந்தாலும் அடிப்படையில் இந்தியா என்றாலும் இந்திய மக்கள் என்றாலும் உலக அளவில் பொதுவான கருத்து என்ன?

ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை, பெண்களை தெய்வமாகக் கொண்டாடுவது, மருத்துகுணம் பொருந்திய உணவு வகைகள், பெண்கள் அணியும் புடவை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

அமெரிக்காவில் சிறு குழந்தைகள் கைகளில் கூட புத்தகங்களைக் காணலாம் என்று நான் எழுதியபோது, ‘அப்படியிருந்தும் அங்கு பள்ளிகளில் துப்பாக்கியைக்கொண்டு மாணவர்கள் சுடுவதும், பாலியல் குற்றங்களும் அதிகமாக நடக்கத்தானே செய்கின்றன?’ என்ற கேள்வியை எழுப்பினர் ஒருசிலர்.

நல்ல அறிவார்த்தமான கேள்விதான். ஆனால் கொஞ்சம் சிந்தியுங்கள். பெண்களை தெய்வமாகக் கொண்டாடும் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் உயர்ந்த நம் நாட்டில் இன்று ஐந்து வயது, ஆறு வயது பெண் குழந்தைகள்கூட வன்கொடுமை செய்யப்படுகிறார்களே? அது ஏன்?  அருவாள் வெட்டு, ஆசிட் வீச்சு, பாலியல் வன்கொடுமை என வெவ்வேறு ரூபங்களில் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்களே? தெய்வமாகக் கருதினால் இதெல்லாம் ஏன் நடக்கின்றன?

இத்தனை கேள்விக்கும் நாம்மால் பதில் சொல்ல முடியுமா?

ம்… சொல்ல முடியும். சொல்லிக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

பெண்கள் நன்றாகப் படிக்கிறார்கள், நல்ல வேலைக்குச் செல்கிறார்கள், பொதுவெளியில் அதிகம் நடமாடுகிறார்கள், எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராய் பீடுநடை போடுகிறார்கள். அதனால் அவர்களின் நடை உடை பாவனைகள் ஆண்களின் கவனத்தைச் சிதற அடிக்கின்றன.

இப்படி பெண்களுக்கு எதிரான எல்லா குற்றங்களுக்கும்  நம்மால் ஒரு அல்பமானக்  காரணத்தைச் சொல்லிவிட்டு மிக சுலபமாக கடந்துவிட முடிகிறது.

வளர்ந்த பெண்களின் உடை கவனத்தை சிதறடிக்கிறது என்றால் ஐந்து ஆறு வயது பெண் குழந்தைகளின் எந்த உடை ஆண்களை சிதறடிக்கிறது? வெட்கக் கேடு. அறுபது அறுபத்தைந்து வயது தாத்தா தன் குட்டி பேத்தியின் குட்டித் தோழியை சிதைத்த சம்பவங்களையும், அக்கம் பக்கம் நட்பாய் பழகும் குடும்பங்களில் சின்னஞ்சிறு குழந்தைகளையும் சீரழித்து எரிக்கின்ற இளைஞர்கள் பற்றிய கொடூர செய்திகளையும் நித்தம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

இத்தனை விரிவான அலசல் எதற்காக என்றால், குழந்தைகள் கூட புத்தகம் வாசிக்கும் வழக்கம் இருக்கும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு அதிகம் நடைபெறுவது ஏன் என்ற கேள்விக்கான பதிலை சிந்தித்தபோது கொதித்த மனதின் புலம்பல்தான் இவை.

இப்படித்தான் உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கின்றன. நல்லவை ஒரு உச்சம் என்றால், கெட்டவை மற்றொரு உச்சம்.

பெண்களை தெய்வமாகக் கொண்டாடும் நம் நாட்டில் உள்ள பெண்களால் நடு இரவில் தன்னந்தனியாக சென்றுவிட முடியுமா? அமெரிக்காவில் அது சாத்தியமாகிறது.

சமீபத்தில் கூட  ஒரு வெளிநாட்டுப் பெண்ணை நம் நாட்டு இளைஞர்கள் கூட்டு வன்கொடுமை செய்தபோது அவர் தைரியமாக போலீஸுக்கு சென்று புகார் அளித்து அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் குற்றவாளிகளை சீக்கிரம் சுலபமாக பிடிக்க முடிந்தது என்கிறது அண்மைய செய்தி ஒன்று.

இந்தியாவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்கவும், ஏனெனில் அங்கு பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றே ஒருமுறை அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நம் கலாச்சாரப் பண்பாட்டை உலகமே வியந்து அண்ணாந்து பார்க்கும் அதே நேரம் சீர்கேடுகளையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது.

அமெரிக்காவில் குற்றங்களுக்கான தண்டனை அதிகம். அதனால் மக்கள் சட்ட திட்டங்களை சரியாகப் பின்பற்றுகிறார்கள். எல்லா நாடுகளிலும் சட்ட திட்டங்கள் உள்ளன. ஆனால் அதில் ஓட்டைகள் இருந்தால் அந்த சட்ட திட்டங்களினால் என்ன பயன்?

என்னுடைய அமெரிக்கா அனுபவங்கள் குறித்த கட்டுரைகள் அனைத்தும் பிரமாதம் என்றும் அவற்றை பள்ளிப் படிப்பில் இருக்கும் தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பதற்காக அனுப்புவதாக சிலர் குறிப்பிட்டிருந்தனர். இந்தத் தலைமுறை தாங்கள் அறிவதை தங்கள் அடுத்தத் தலைமுறைக்கு கடத்துவது கடமை அல்லவா? அந்த வகையில் என் எழுத்தை கெளரவித்த அந்தப் பெற்றோர்களுக்கு என் வணக்கங்கள்.

அமெரிக்கா பற்றிய தவறான புரிதலில் இருந்த எங்களுக்கு அதன் மற்றொரு கோணத்தை காட்டியிருந்தீர்கள். அமெரிக்க நாடு மற்றும் மக்கள் மேல் நாங்கள் இதுவரை அறிந்து வைத்ததற்கு முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தை கொடுத்திருக்கிறீர்கள் மிக்க நன்றி என ஒருசிலர் கருத்திட்டிருந்தார்கள். அவர்களுக்கும் என் நன்றிகள்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 11, 2022 | வெள்ளி | இந்திய நேரம் காலை 6 மணி

(Visited 1,915 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon