விபூதியும் குங்குமமும்!
பொதுவாக அமெரிக்கர்கள் மலர்ந்த முகத்துடன் இருப்பார்கள் என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா? நம் முகாந்திரமே அறியாதவர்கள் கூட தெருவில் எதிர்பட்டால் நாம் கண்டு கொள்ளாமல் தலைகுனிந்து சென்றாலும் அவர்களாக ‘ஹேவ் அ நைஸ் டே’ என்றோ, ‘குட் டே’ என்றோ சொல்லியபடி நம்மை கடந்து செல்வார்கள்.
அதற்காக அவர்களுக்கு பிரச்சனைகளே இல்லை என்று அர்த்தம் கிடையாது. கேன்சர் நோய்க்கு மருத்துவம் செய்துகொண்டிருப்பவர்களும், சிறுநீரகக் கோளாறால் வாரம் இரண்டுமுறை டயாலிசிசிஸ் செய்துகொண்டிருப்பவர்கள் கூட நம்மை புன்னகையுடன்தான் கடந்து செல்வார்கள்.
ஒருமுறை ஷாப்பிங் சென்றபோது சிறுநீரகப் பிரச்சனைக்காக உடலுடன் இணைத்துக்கொண்ட ஒரு மருத்துவ உபகரணத்துடன் வந்திருந்த நபர் எதிர்பட்டார். அவரும் முகத்திலும் புன்னகையே.
ஆக, தங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்பது அவர்களைப் பொருத்தவரை பொருளாதாரம் சார்ந்தது அன்று. அது அவர்கள் இயல்பு.
அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும்போதான விமான பயணத்தில் பேபேஜ் செக்கிங்கின்போது பணியில் இருந்த பெண் பெட்டிகளை வெயிட் பார்த்துக் கொண்டே நான் நெற்றியில் இட்டிருந்த விபூதியையும் குங்குமத்தையும் பார்த்து ‘அது என்ன?’ என ஆச்சர்யமாக கேட்டார்.
விபூதி குங்குமம் இந்தியர்களின் பாரம்பர்யம் என்றேன். வீட்டை விட்டுக் கிளம்பும்போது குங்குமம், விபூதி இட்டுக்கொள்வோம். விருந்தினர்கள் வீட்டை விட்டு கிளம்பும்போது குங்குமம் கொடுத்து வழி அனுப்புவார்கள் என்றும் சொன்னேன்.
‘ஒ…ஓ…. நைஸ்…’ என சொல்லி ‘ஹேவ் அ நைஸ் ஜர்னி’ என விடைகொடுத்தார் அவர்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மார்ச் 6, 2022 | ஞாயிறு