அவள் விகடன்: நியூ வெர்ஷன் பெண்களாக இருப்போம் – மகளிர் தினம் (March 15, 2022)

அவள் விகடன் : மார்ச் 15, 2022
மகளிர் தினம் சிறப்பிதழுக்காக எழுதிய  கட்டுரை

மகளிர் தினத்தை ஒட்டி அவள் விகடனில் #StopExploitingWomen என்ற கான்செப்ட்டில் ஏழு ஆளுமைகளிடம் உழைப்புச் சுரண்டல், ஊதியப் பாகுபாடு, பாலியல் தொல்லை என வெவ்வேறு தலைப்புகளில் கருத்து கேட்டிருந்தார்கள்.

என்னிடம் பணி இடத்திலும் கோலம் போடுதல், உணவு பரிமாறுவது, டீ காபி கொடுப்பது என வீட்டு வேலை சார்ந்த பணிகளை (Office House Work) செய்ய நிர்பந்திக்கும் பணிச் சூழலை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கேட்டிருந்தார்கள்.

இதெல்லாம் ஒரு பிரச்சனையா என ஒருசிலர் நினைக்கலாம். இதுவும் பிரச்சனை என்பதால்தான் Office House Work பற்றி என் கருத்தையும் அவள் விகடனில் (மார்ச் 15, 2022) வெளியிட்டிருந்தார்கள்.

இதற்காக நான் தயாரித்த முழுமையான கட்டுரையின் சாராம்சம்:

நியூ வெர்ஷன் பெண்கள்!

விதிவிலக்குகளை கருத்தில் கொள்ளாமல் பொதுவாக பெரும்பாலான இடங்களில் நடக்கும் விஷயங்களை எடுத்துக்கொண்டு அலசுவோமா?

ஒரு அம்மா. எழுபதை நெருங்கும் வயது. வீட்டில் சமையல் அறை சாவி அவர் கையில்தான். விருப்பப்பட்டு வைத்திருக்கவில்லை. யாரும் அதை வாங்கி சுமக்க விரும்பவில்லை என்பதே உண்மை. அவர் சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் உள்ளவர். டிஜிட்டல் யுகத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு மொபைலில் பத்திரிகைகள் வாசிப்பார். ஃபேஸ்புக் படிப்பார். அவருடைய பிறந்த நாளுக்கு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஐடி துறையில் இருக்கும் அவர் மகன் எளிதாக காய்கறி நறுக்கும் சாதனம் ஒன்றையும் பட்டுப் புடவை ஒன்றையும் என்று வாங்கிக் கொடுத்தபோது அவர் என்ன சொன்னார் தெரியுமா?

‘என்னை சமையல் அறையை தாண்ட விட மாட்டேன் என்கிறாயே… நான் ஈஸியா வேகமாக சமைத்துப்போடத்தானே காய்கறி நறுக்கும் மிஷினை வாங்கிக்கொடுத்திருக்கே… பட்டுப் புடவை எதற்கு? அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்… இருக்கிற புடவைகளை கட்டிக்கொள்ளவே இங்கே சந்தர்ப்பம் குறைவு… ஒரு கிண்டிலோ ஐபேடோ வாங்கிக்கொடுத்தால் எத்தனை புத்தகங்கள் வாசிப்பேன். கிண்டிலில் கண் வலிக்காதாமே…’ என அறிவார்த்தமாக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த அவர் மகனோ ‘கிழவிக்கு ஆசையைப் பார், கிண்டில் வேணுமாமே கிண்டில்… பட்டுப் புடவையே வாங்கிக்கொடுத்தால் கூட திருப்தி கிடையாது…’ என முனகிக்கொண்டு நகர அந்த அம்மா கண்களில் வரும் கண்ணீரை மறைத்தபடி அழுவது தெரியாமல் இருக்க வெங்காயத்தை உரிக்கத் தொடங்கினாள்.

இப்படித்தான் பெண்களுக்கு எத்தனை வயதானாலும் அவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை தவிர்க்கவே முடிவதில்லை.

வீடுகளில் மட்டுமல்ல, பணி இடங்களிலும்தான்.

அலுவலகங்களில் விழா தினங்கள் அன்று கோலம் போட வேண்டுமா கூப்பிடு பெண்களை, டீ, காபி, ஜூஸ் கொடுக்க வேண்டுமா கூப்பிடு பெண் பணியார்களை என்று இந்த 21-ம் நூற்றாண்டிலும் பெண்களுக்கு பணி இடங்களிலும் வீட்டு வேலைகள் சார்ந்த பணிகளே பொறுப்புகளாக ஒப்படைக்கப்படுகின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது.

இந்த சூழலை அப்படியே வீட்டுப்பக்கம் திருப்புவோமா? வீடுகளில் பண்டிகை தினங்கள், விஷேசம், விருந்து, உறவுகள் பலர் கூடும் குடும்ப நிகழ்வுகளில் சமைப்பது, சாப்பாடு பரிமாறுவது, சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்வது, பாத்திரங்கள் தேய்ப்பது என சமையல் அறை வேலைகள் பெண்கள் செய்துகொண்டிருக்க, ஆண்கள் சாப்பிட்டுவிட்டு ஜாலியாக கூட்டம் கூட்டமாய் நின்றுகொண்டு சிரித்துக்கொண்டும் அரட்டை அடித்துக்கொண்டும், டிவி பார்த்துக் கொண்டும், ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டும் நேரத்தைக் கடத்துவார்கள்.

சமையல் அறையில் இருந்து பெண்கள் அவ்வப்பொழுது டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் சினிமாவையோ அல்லது நிகழ்ச்சியையோ எட்டிப் பார்ப்பார்கள்.

‘ஓரிடத்தில் உட்கார்ந்து சினிமா பார்த்து எத்தனை வருடங்கள் ஆயிற்று’ என்ற பெண்களின் அங்கலாய்ப்புகள் அப்பட்டமாக்குகிறதல்லவா அவர்கள் மீது சுமத்தப்படும் சுமைகளை.

சரி வீட்டில்தான் இப்படி, அலுவலகம் வந்தாலாவது நிம்மதியாக இருக்கலாம் என்றால் அங்கேயும் பண்டிகைக் நாட்களில் ரங்கோலிப் போட சீக்கிரம் அலுவலகம் வரச்சொல்லி பொறுப்புகள் சுமத்தப்பட்டால் என்ன செய்வது?

இப்படித்தான் பெண்களின் உழைப்பின் மீதான சுரண்டல்கள் சின்ன சின்னதாக ஆரம்பித்து எல்லா நிலைகளிலும் தொடர்கின்றன.

ஸ்வகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்கு 20, 21 வயதுதான் இருக்கும். காலை ஏழு ஏழரைக்கெல்லாம் அவர்கள் ஹோட்டல்களில் காத்திருந்து பார்சலைப் பெற்றுக்கொண்டு பைக்குகளில் பறப்பதை பார்க்கும்போது சற்றே பாவமாக இருக்கும். பார்சலுக்கு சொந்தக்காரர் எங்கேயோ சூடான உணவுக்காக காத்திருப்பதைப் பொறுக்காமல் நேரத்துக்கு உணவை கொண்டு சேர்க்க பரபரக்கும் இந்த இளைஞர்களா வீட்டில் காலை நீட்டிக்கொண்டு அம்மாவிடம் சாப்பாடு தட்டை இருக்கும் இடம் கொண்டுதரச் சொல்லி பாடாய்படுத்துகிறார்கள்?

போலவே, ஹோட்டல்களிலும், திருமண வைபவங்களிலும் இருநூறு முன்னூறு நபர்களுக்கு சமைப்பதுகூட ஆண்கள்தான். பெரிய பெரிய பாத்திரங்களை அவர்களால்தான் கையாள முடியும், அதனால்தான் அவர்கள் சமையல் வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற லாஜிக்கெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அதே நபர்கள் வீடுகளில் சமைப்பதையும் பரிமாறுவதையும் சாப்பிட்ட இடத்தையும், பாத்திரங்களையும் சுத்தம் செய்வதையும் ஏன் குறைவாக எடை போடுகிறார்கள் அல்லது அவை பெண்கள் வேலை என ஏன் முத்திரை குத்துகிறார்கள்.

இதன் பின்னணியில் ஓர் உளவியல் உள்ளது. ஆண்களின் உலகம் வெளி, பெண்களின் உலகம் உள் என சமூகம் கட்டமைத்த வேலியினால், ஒரே தன்மையிலான வேலையை உள்ளே செய்வதையும் வெளியே செய்வதையும் வித்தியாசப்படுத்துகிறார்கள்.

வெளியே செய்வதை தங்கள் புரொஃபஷனாகவும், உள்ளே செய்வதை கிண்டலாகவும் பார்க்கிறார்கள்.

செய்வது என்னவோ சமையல்தான், ஆனால் கல்யாணத்துக்கு சமைத்தால் அது கேட்டரிங் பிசினஸ், வீட்டில் சமைத்தால் பெண்களுக்கான வேலையை செய்வதைப் போன்ற குற்ற உணர்வு அல்லது கேலியான சிந்தனை.

மனித மனங்களில்தான் எத்தனை விசித்திரங்கள்.

விசித்திரத்தை சித்திரமாக்கும் வித்தை பெண்கள் கைகளில்தான் உள்ளது. பெண்கள் நினைத்தால் எதையும் மாற்ற முடியும். வீட்டு வேலை செய்ய ஒரு ஆண் முன் வந்தால் ‘ஆம்பிள சிங்கம்டா நீ, பொம்பள மாதிரி வீட்டு வேலைகள் செய்துகொண்டு…’ என்றும், ஆண்கள் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினால் ‘பொம்பள மாதிரி அழுதுகொண்டு…’ என்றும் யார் சொல்கிறார்கள்? வேறு யார்? வீட்டில் உள்ள முந்தைய தலைமுறை பெண்கள்தான். அவர்கள் தலைமுறையில் விதைத்ததை அடுத்தடுத்த தலைமுறையினர்களிடமும் விடாமல் தொடர்கிறார்கள்.

சின்னச் சின்ன மாற்றங்கள், பெரிய பெரிய வெற்றிகளை உண்டாக்கும். ஓர் உதாரணம் சொல்கிறேன்.

பொதுவாக நான் ஃபேஸ்புக்கில் எழுதும் பதிவுகளில் என் அப்பா சமைப்பது குறித்தும் அம்மா புத்தகம் வாசிப்பது குறித்தும் அதிகம் இடம்பெறும்.

குறிப்பாக, என் அப்பா திருவாதிரைக் களியும், சாம்பாரும் செய்வதையும், என் சகோதரியின் 11 வயது மகன் புளியோதரை செய்வதையும் ஒரே கட்டுரையாக எழுதி அதற்குப் பொருத்தமான இரண்டு புகைப்படங்களையும் வெளிப்படுத்தி இருந்த பதிவுக்கு நல்ல வரவேற்பு.

போலவே, அம்மா கம்ப்யூட்டரில் பத்திரிகைகள் வாசிப்பது, மொபைலில் ஃபேஸ்புக் பார்ப்பது, கூகுளில் ஏதேனும் தேடுவது, யு-டியூபில் வீடியோ பார்ப்பது போன்றவற்றை எழுதி அதற்குப் பொருத்தமான புகைப்படங்களைப் பகிர்வேன்.

அதற்காக என் அப்பா பத்திரிகைகளையும் புத்தகங்களையும் வாசிக்க மாட்டார், சமையல் வேலை மட்டுமே செய்வார் என்றோ, அம்மா எப்போதும் புத்தகம் வாசித்துக்கொண்டே இருப்பார், சமையலறைக்கே வரமாட்டார் என்றோ அர்த்தம் கிடையாது.

இருவருமே இரண்டையுமே சரிசமமாக செய்யக் கூடியவர்கள். இருவருமே 40 ஆண்டுகாலம் தொலைபேசித் துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என் எழுத்து மூலம், ஆண்களும் சமைக்கலாம், வீட்டுப் பொறுப்பை பகிர்ந்துகொள்ளலாம் என்பதையும் பெண்களும் காலையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கம்ப்யூட்டரில் ரிலாக்ஸ்டாக பத்திரிகைகள் வாசிக்கலாம் என்பதையும் இயல்பாக மக்கள் மனதில் பதிய வைப்பதற்கான விதையைத் தூவிக்கொண்டே வருவதுதான் என் நோக்கம்.

இப்படி செய்யலாம், அப்படி செய்யலாம் என அறிவுரை சொல்வதைவிட இப்படி சின்னச் சின்ன செயல்பாடுகள் செய்வதன் மூலம் பெரிய மாற்றங்களுக்கு வித்திடலாம். எதை அதிகம் படிக்கிறார்களோ, எது அதிகம் கண்களில் தென்படுகிறதோ அதுவே பெரும்பாலானோர் பின்பற்றும் பொதுவிதியாக விரைவில் மாறக்கூடும் என்பது என் உறுதியான நிலைப்பாடு.

ஆண்கள் வீட்டு வேலை செய்தால், என்னவோ அவர்கள் செய்யக்கூடாததை செய்துவிட்டதைப் போலவோ அல்லது பெரிதாக சாதனை செய்துவிட்டதைப் போலவோ அல்லது செயற்கரிய செயல் செய்து தியாகம் செய்துவிட்டதைப் போலவோ நினைத்து அவர்களைக் கொண்டாட வேண்டாம். பெண்கள் அந்த வேலைகளை செய்தால் எப்படி இயல்பாகக் கடந்து செல்கிறோமோ அப்படியே ஆண்கள் செய்தாலும் கடந்து செல்வோம்.

அலுவலகங்களில் விசேஷ தினங்களில் பெண்களுக்கு வீட்டு வேலைகள் சார்ந்த பணிகளை பொறுப்புகளாக கொடுத்தால் உறுதியாக மறுக்கலாம். அதற்கு மாற்றாக அலுவலக கேபின்கள், நோட்டீஸ் போர்டுகள், நுழைவாசல் என எங்கெல்லாம் கிரியேட்டிவாக அவர்கள் திறமையை வெளிப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் போட்டோஷாப்பில் டிஸைன் செய்து ஒட்டுவது, பவர்பாயிண்ட்டில் அனிமேஷன் செய்து வித்தியாசமாக பிரசன்டேஷன்களை ஓட விடுவது என அவர்களுக்கானப் பொறுப்பை மடைமாற்றம் செய்யும் அளவுக்கு திறமைகளை வேறுவிதத்தில் வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ளலாம்.

தொழில்நுட்பத்துக்கு மட்டும் அல்ல, நமக்கும் தேவை அப்டேட்டட் வெர்ஷன்கள். ஆம். பெண்கள் தங்கள் வெர்ஷனை அப்டேட் செய்து கொண்டால் மட்டுமே எல்லா சூழலிலும் தனித்துவத்துடன் செயல்பட முடியும்.

எதுவுமே செய்யத் தெரியவில்லை என்றால் அவர்கள் மீது சுமத்தப்படும் வீட்டு வேலைகள் சார்ந்த பணிகளை செய்யும்போது உடன் பணியாற்றும் ஆண்களின் உதவியை தாங்களாகவே கேட்டுப் பெறலாம். அப்போது இருசாராரும் சேர்ந்து செய்வதற்கான வாய்ப்பும் சூழலும் உண்டாகும். உதவி கேட்பது போல வேலையை பகிர்ந்து செய்ய வைக்கும் சூட்சுமம்தான் இது. வேறொன்றுமில்லை.

பெண்கள் மனது வைத்தால், ஒற்றுமையாக செயல்பட்டால் எப்படிப்பட்ட சூழலையும் மாற்ற முடியும்.

பெண்களைப் போற்றுவோம், கொண்டாடுவோம் பெண்கள் உழைப்பை!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மார்ச் 8, 2022

(Visited 317 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon