உழைப்பால் உயர்ந்தவர்!

உழைப்பால் உயர்ந்தவர்!

ஞாயிறு மாலை. அழைப்பு மணி அடிக்க மாஸ்க் அணிந்து கொண்டு கதவைத் திறந்தேன். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் சிரித்த முகத்துடன் சைகையால் வணக்கம் வைத்த நபரின் முகத்தை ஒத்த பல முகங்கள் மனதுக்குள் வந்து சென்றன. ‘சாரி மேடம், மாஸ்க் போடலையே நான், பரவாயில்லையா?’ என கேட்டபோதுதான் அந்த முகமும் குரலும் ஒருங்கிணைந்து யார் என துல்லியமாய் புரிந்தது. எங்கள் வீட்டு வாசலில் ‘மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி’ என்று பிரிண்ட் எடுத்து ஒட்டி இருப்பதால்தான் அவர் மாஸ்க் அணிந்து வராததுக்கு பதற்றமடைந்திருக்கிறார். ‘பரவாயில்லை சார், நாங்கள் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்கிறோம், உள்ளே வாங்க…’ என்று அழைத்து சோஃபாவில் அமரச் சொன்னோம்.

‘கடை கல்லாவில் மட்டுமே பார்த்தறிந்த முகத்தை எதிர்பாராமல் வீட்டு வாசலில் பார்த்ததால் ஒரு க்ஷணம் வியப்பு. அவ்வளவே. கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் மளிகை சாமான் வாங்கும் மளிகைக் கடை உரிமையாளர். வந்தமர்ந்த வேகத்தில் பையில் இருந்து அழைப்பிதழ் எடுத்து என் அப்பா அம்மா பெயரை எழுதி எங்களைப் பார்த்து புன்னகைத்தவாறே ‘மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கோம்… நீங்க எல்லோரும் வந்து என் குழந்தைய வாழ்த்துங்க…’ என்றார்.

‘காபி சாப்பிடறீங்களா?’ என கேட்டதற்கு ‘அழைப்பிதழ் கொடுக்கப் போகும் இடங்களில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் என நிறைய காபி குடித்துவிட்டேன். ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் கொடுங்க போதும்’ என்றார்.

அவர் மகள் பி.ஈ முடித்துவிட்டு ஐடியில் வேலை பார்ப்பதும், மகன் பி.ஈ படித்துக்கொண்டிருப்பதும் ஏற்கெனவே நாங்கள் அறிந்த விஷயம்தான். மாப்பிள்ளை என்ன செய்கிறார் என்பதை கேட்டறிந்துகொண்டோம்.

பத்திரிகையைப் பார்த்ததும் ‘அட பொண்ணு பேர்ல தான் கடை வச்சிருக்கீங்களா… இவ்வளவுநாளா இது தெரியாம போச்சே…’ என்று வியந்தேன்.

‘ஆமாங்க…’

‘மகன் படிப்பை முடிச்சுட்டாறா?’

‘என் பொண்ணு கல்யாணம் முடிஞ்ச கையோட மகன் அமெரிக்கா கிளம்பறார்’

‘அப்படியா… என்ன வேலை’

‘மேல் படிப்புக்குத்தான்…’

அவரைப் பார்க்க எனக்கு மிகப் பெருமையாக இருந்தது. காரணம் இல்லாமல் இல்லை. எங்கள் காம்கேர் நிறுவனம் ஆரம்பித்த 1992-ம் ஆண்டு அவரும் அவருடைய மூன்று சகோதரர்களும் சேர்ந்து சிறிய மளிகைக்கடை வைத்திருந்தார்கள். அதன் பிறகு இரண்டு மூன்று வருடங்கள் கழித்துத்தான் ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்தன.

இப்போது அவர் மளிகைக்கடையை விரிவுபடுத்தி இருக்கிறார். அவரது சகோதர்கள் ஒவ்வொருவரும் சூப்பர் மார்க்கெட், செக்கு எண்ணெய் கடை, ஆவின் டீலர் என ஆளுக்கொரு பிசினஸ். இவை அனைத்தும் அருகருகேதான்.

கடைக்கு அருகிலேயேதான் அவர்கள் வீடு. எப்போது சென்றாலும் கடையில் பார்க்கலாம். கடை முதலாளி என்ற பந்தா கிடையாது. தேவைப்பட்டால் மூட்டைத் தூக்கவும் செல்லும் வெகு இயல்பான எளிமையான அணுகுமுறை. வேலை செய்யும் இளம் பெண்களும், ஆண்களும் ‘அண்ணே, அண்ணே’ என்றுதான் அழைக்கிறார்கள். சுறுசுறுப்பு. டென்ஷனே ஆகாத சுறுசுறுப்பு அதுதான் ஹைலைட். போனில் ஆர்டர் கொடுத்தால் வீடு தேடி சாமான்களை அனுப்பி வைப்பார்.

குரலை உயர்த்தி ‘அங்க என்ன பண்றீங்க… சீக்கிரம் கொண்டாங்க’ என்பதுதான் அவரது அதிகப்படியான தடித்த வார்த்தை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அவ்வப்பொழுது அவர் மனைவி கடைக்கு வந்து அவருக்கு உதவியாக இருப்பார்.

ஒரு முறை மகனின் மேற்படிப்புக்கு அமெரிக்காவில் எந்த பல்கலைக்கழகத்தில் சேர்க்கலாம் என எங்களிடம் விசாரித்தறிந்தார். அதன் பின்னர் அவரே முன்னெடுப்புகள் செய்து இதோ மகனை மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு அனுப்ப இருக்கிறார். மகள் படித்து முடித்து கடந்த மூன்று நான்கு வருடங்களாகவே ஐடியில் பணி புரிந்துகொண்டிருக்கிறார். இதோ இப்போது நல்லபடியாய் திருமணமும் செய்து வைக்கப் போகிறார். கல்யாணப் பத்திரிகையே பிரமாதமாக இருந்தது.

அன்று பார்த்தது போலவே அப்படியே இருக்கிறார். வயதே தெரியவில்லை. விடைபெற்றபோது அவர் முகத்தில்தான் எத்தனை பெருமிதம்.

உழைப்பால் உயர்ந்த மனிதர். உழைப்புக்கு உறுதுணையாய் மனைவி. அருமையான ஊழியர்கள். பெயர் சொல்லும் பிள்ளைகள்.

நாம் உழைப்பால் உயர்வது ஒருவகை பெருமிதம். உழைப்பால் உயர்ந்த மனிதர்களை காணும்போது உண்டாகும் பெருமிதம் மற்றொரு வகை.

உழைப்பால் உயரும் மனிதர்களை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் பாசிட்டிவ் எனர்ஜி அன்லிமிட்டடாக நிரம்பி வழியும்.

ஞாயிறு அன்றும் அப்படியே!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

மே 10, 2022 | செவ்வாய் | காலை 6 மணி

(Visited 10 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon