டாக்டர் பட்டம் வாங்கலையோ, டாக்டர் பட்டம்!

உலகம், தமிழ், ஆராய்ச்சி என நம்மை ஈர்க்கும் சில வார்த்தைகளால் நிரப்பப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரை சொல்லிக்கொண்டு என சொல்லிக்கொண்டு ஒரு அலைபேசி அழைப்பு. வருடா வருடம் கார் பைக்குக்கு இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து போன் அழைப்பு வருகிறதோ இல்லையோ வருடத்துக்கு ஒரு முறை இதுபோன்று உலகத்தை தமிழால் ஆள்வதைப் போல பிரமாண்டப் பெயரை வைத்துக்கொண்டு அந்த பல்கலைக்கழகத்தில் இருந்து பேசுகிறேன் என்ற தொந்திரவு அதிகரித்து வருகிறது.

ஒருமுறை கேட்டாலே குரலை நினைவு வைத்துக்கொள்ளக் கூடிய திறனை பெற்றிருப்பதால் போன் அழைப்பில் குரலை கேட்டவுடனேயே ‘சென்ற வருடம் பேசினீர்கள் தானே?’ என்றேன். ‘ஆமாம் மேடம், எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள்? சூப்பர் மேடம்’ என்ற புகழ்மாலையுடன் அஸ்திரத்தை எய்ய ஆரம்பித்தார்.

‘திறமையானவர்களுக்கு டாக்டரேட் பட்டம் கொடுக்கிறோம் மேடம்… நானும் சில வருடங்களா தொடர்ச்சியா கேட்டு வருகிறேன்… நீங்கள் தான்…’ என்று இழுத்தார்.

‘நான் தான் ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டேனே…’

‘அதில்லை மேடம், இப்போ ரேட் குறைச்சிருக்கோம்… இருபதாயிரம் தான்…’

சுர்ரென கோபம் தலைக்கு ஏற ‘நான்தான் காசு கொடுத்து டாக்டரேட் வாங்க விரும்பவில்லை என்று பலமுறை சொல்லிவிட்டேனே, பின் ஏன் தொந்திரவு செய்யறீங்க…’ என்று சற்றே குரலை உயர்த்தினேன்.

‘அதில்லை மேடம், உங்க கூட சேர்ந்து டாக்டரேட் வாங்கப் போறவங்க சினிமா துறை பிரபலம் ஒருவர், தொழில்துறை சார்ந்த பிரபலம் ஒருவர்… உண்மையில் திறமையானவர்களுக்கு மட்டும்தான் டாக்டரேட் தருகிறோம்…’ அரைத்த மாவையே அவர் அரைத்துக்கொண்டிருந்தார்.

நான் மெளனமாக இருக்க எதிர்முனை சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தது.

‘இது உங்கள் பிசினஸை வேற லெவலுக்குக் கொண்டு செல்லும் மேடம்…’

‘போதும் சார், உண்மையில் என் திறமைக்கும் எங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கும் கிடைத்த விருதுகளை வைக்கவே இடம் இல்லாமல் ஷெல்ஃபில் குவித்து வைத்திருக்கிறேன்… இனி ஒரு முறை டாக்டரேட் பட்டம் கொடுப்பது சம்மந்தமாக என்னிடம் பேசாதீர்கள்… எத்தனை முறை கேட்டாலும் என் பதில் இதுதான்…’

‘சரி மேடம், ஒரே ஒரு தகவலுடன் முடித்துக்கொள்கிறேன். நான் ஒரு டிரஸ்ட் வைத்திருக்கிறேன். அதிலிருந்து நானே உங்கள் டாக்டரேட் பட்டத்துக்கான பணத்தை கொடுக்கிறேன். நீங்கள் விழா அன்று நேரில் வந்து கலந்துகொண்டு டாக்டரேட் வாங்கிச் சென்றால் போதும்…’

எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அதே அதிர்ச்சியுடன் ‘உங்கள் டிரஸ்ட்டில் இருந்தெல்லாம் எனக்கு ஏன் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்? அப்படியாவது நீங்கள் செலவு செய்து எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன? சொல்லுங்கள்…’ என படபடப்பாய் கேட்டவுடன், ‘சரி மேடம், உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா பரவாயில்லை’ என தனக்கு வசதியான பதிலைச் சொல்லி நான் கேட்ட கேள்விக்கான பதிலை சொல்லாமல் போன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

எத்தனை முறை இதுபோன்ற அழைப்புகளை ப்ளாக் செய்தாலும், திரும்பத் திரும்ப வெவ்வேறு எண்களில் இருந்து வருடத்துக்கு ஒருமுறை ‘டாக்டர் பட்டம் வாங்கலையோ டாக்டர் பட்டம்’ என கூவாத குறையாக விற்கிறார்கள்.

சில நிமிடங்களில் போனில் யார் யாருக்கெல்லாம் இந்த வருடம் டாக்டர் பட்டம் கொடுப்பதாகச் சொன்னாரோ அவர்களின் புகைப்படம் மற்றும் புரொஃபைல் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தது.

அந்த எண்ணை ப்ளாக் செய்தேன்.

பெயர், பணம், புகழ் இன்னபிற பலவீனங்களுக்கு அடிமையான பலவீனமானவர்களுக்கான தடத்தில் பயணம் செய்ய வேண்டியவர்கள், இடம் மாறி வந்து என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்து ப்ளாக் செய்த எண்ணை திரும்பவும் அன்-ப்ளாக் செய்தேன்.

‘இனி ஒரு முறை டாக்டரேட் பட்டம் கொடுப்பதாக போன் செய்தாலோ அல்லது வாட்ஸ் அப் செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்…’ என்று டைப் செய்துவிட்டு மீண்டும் அந்த எண்ணை ப்ளாக் செய்தேன்.

நம்மை சுற்றிதான் எத்தனை வலைகளும், அஸ்திரங்களும்? எதிலும் சிக்காமல் பயணிப்பதே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது.

இன்றில்லை, நேற்றில்லை ‘காசுக்கு விருது’, ‘பைசாவுக்கு பட்டம்’ எனும் கலாச்சாரம் பல வருடங்களாக நடந்துவரும் விஷயம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 20, 2022

 

(Visited 250 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon