பேராசை!
முன்பெல்லாம் வீட்டு கொள்ளைப்புறத்தில் போட்டு வைத்திருக்கும் இரும்பு குழாய்கள், வேண்டாத சாமான்கள், உணர்த்தி இருக்கும் புடவைகள் போன்றவைதான் திருட்டு போகும். வீட்டுக்குள் வந்து திருடிச் செல்லும் பொருட்களும் சாதாரண சாமான்களாகவே இருக்கும். திருட்டு தொழில் செய்பவர்கள் கொலை செய்ய மாட்டார்கள். கொலையாளிகள் திருட மாட்டார்கள் என்று ஒரு தொழில் நெறிமுறைகளைக் கூட நம் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம்.
குறிப்பாக சொல்லப் போனால் வறுமையினால்தான் திருட்டுத் தொழில் செய்பவர்கள் பெருகி இருந்தார்கள்.
ஆனால் இன்று…
ஐடியில் மாதம் லட்சம் சம்பாதிக்கும் நபர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன் சுமை அதிகமாகி பெற்ற குழந்தைகள் கழுத்தையே அறுத்துக் கொன்று தானும் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் துர்பாக்கிய நிலை. இருபது இருபத்தைந்து வருடங்களாக வீட்டு கார் டிரைவராகவும் தோட்டக்காரராகவும் பணி புரிந்தும் நன்றி துளியும் இல்லாமல் தன்னை நம்பி வேலைக்கு வைத்திருக்கும் வீட்டில் இருந்தே ஐம்பது பவுன் நூறு பவுன் என்ற கணக்கில் நகைகள் கோடிகளில் பணம் என அத்தனையையும் சுருட்டிக்கொண்டு ஓடும் கேவலமான நிலை.
சூதாடினால் பணத்தையும் நிம்மதியையும் கெளரவத்தையும் இழந்துவிடுவோம் என்பதை நன்கறிந்தும் சூதாடுகிறார்கள். திருடினால் மாட்டிக்கொள்வோம் தண்டனை உண்டு எனத் தெரிந்தும் பெரிய அளவில் திருடுகிறார்கள்.
காரணம் ஒன்றே ஒன்று தான். பேராசை.
இருக்கும் வசதிகள் வாழ்க்கைக்கு போதுமானதாக இருந்தாலும் இன்னும் இன்னும் இன்னும் என்ற அடங்காத ஆசைகள்தான் திருட்டு, கொலை, ஆன்லைன் சூதாட்டம் என மனதை திசை திருப்புகின்றன.
வறுமையினால் தேவைக்காக மோசடிகளில் ஈடுபட்ட சமூகம் இன்று பேராசையினால் சீரழிகிறது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 6, 2022 | திங்கள்