சூசைட் மீடியாவாகும் சோஷியல் மீடியா!

சூசைட் மீடியாவாகும் சோஷியல் மீடியா!

‘சித்திரைச் செவ்வானம்’ – சமூக வலைதளங்களால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்துப் பெண்ணும் அவளது அப்பாவும் பற்றிய திரைப்படம். அதன் முடிவில் ‘இப்போது சோஷியல் மீடியாக்கள் சூசைட் மீடியாக்களாக உள்ளன…’ என்ற ரீதியில் கருத்துச் சொல்லி முடித்திருந்தார்கள்.

+2-வில் நல்ல மதிப்பெண். அப்பாவின் மீது பாசமும் மரியாதையும். குறிக்கோளுடன் படித்து முன்னேறும் இலட்சியவாதி. படித்து முடித்து ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம். இப்படிப்பட்ட நல்ல குணமுள்ள ஓர் இளம் பெண் ஹாஸ்டலில் தங்கி தேர்வுக்காக பயிற்சி வகுப்பில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாள். அதே பயிற்சி வகுப்பில் உடன் படிக்கும் மாணவர்கள் மூன்றுபேர் சேர்ந்து அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் எடுத்த குளியல் அறை வீடியோவை சோஷியல் மீடியாவில் போட்டு விடுவதாக மிரட்டி அவளை சீரழித்துவிடுவதாக மிரட்டல். சீரழிப்பு. தற்கொலையும் செய்துகொள்கிறாள்.

இந்த கேஸை நேர்மையான பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரிப்பதாகக் காட்டி இருக்கிறார்கள்.

இறந்த பெண்ணின் ஹாஸ்டல் அறைத் தோழியை தைரியமானவள் என்று காண்பிப்பதற்காக கராத்தே கற்றறிந்தவளாக, கியர் வைத்த பைக் ஓட்டுவதாக காண்பிக்கிறார்கள்.

அவள் தன் தோழியை சீரழித்தவர்களைக் காட்டிக்கொடுக்க, இறந்த பெண்ணின் அப்பா அந்த மூன்று மாணவர்களை கண்டுபிடித்து கொலை செய்துவிட்டு தானும் இறந்துவிடுவதாகக் கதை.

மேலும் இளைஞர்கள் சோஷியல் மீடியாவால் எப்படி சீரழிகிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக, பள்ளி இறுதியில் இருக்கும் இளம் பெண்கள் இன்ஸ்டாகிராமில் நட்பான பணக்கார வாலிபர்களுடன் நட்பு ரீதியில் வீட்டுக்குத் தெரியாமல் தனியாக காரில் செல்வதைப் போன்ற காட்சிகளையும் காண்பித்திருக்கிறார்கள்.

படம் பார்த்து பலமணி நேரம் ஆகியும் பதற்றம் குறையவில்லை. கொரோனா காலகட்டத்தில் என்னிடம் பேசிய பெற்றோர்களின் அழுகைக் குரல்கள்தான் நினைவுக்கு வந்தன.

என்னிடம் நேரடியாக எதுவும் சொல்ல மாட்டார்கள். ‘மொபைலில் இருந்து வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை முழுவதும் டெலிட் செய்துவிட வேண்டும்…’ என்பார்கள். இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு அவற்றைத் திரும்பவும் இன்ஸ்டால் செய்துகொள்ள முடியும் என்று சொல்லிவிட்டு கொஞ்சம் ஆறுதலாகப் பேசுவேன். அப்போதுதான் அழுகை வெடிக்க அவர்கள் உண்மையைச் சொல்வார்கள்.

ஆன்லைன் வகுப்புகளால் முழுக்க முழுக்க செல்போனில் இருக்கிறார்கள். 24 மணி நேரமும் கவனிக்க முடிவதில்லை. எப்போது நட்பாகிறார்கள் என்றே தெரிவதில்லை. இன்ஸ்டாகிராமில் எக்கச்செக்க ஆண் நண்பர்கள்.

வீட்டை விட்டு அவர்களுடன் ஓடிச் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமானவுடன் தான் கவுன்சிலிங் அதுஇது என முயற்சிகள் எடுக்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்ணைப் பெற்றவர்களின் அம்மாக்கள் போனிலேயே என்னிடம் கதறி அழுவார்கள். மனம் கேட்காமல் அவர்கள்து மகள்களை என்னிடம் பேசச் சொல்வேன்.

நிறைய பேசுவேன். அவர்களிடம் என்ன திறமை இருக்கிறது என கண்டுபிடித்து அதில் உயரிய இடத்துக்கு வர என்னால் ஆன ஆலோசனைகளை சொல்வேன். ஓவியம் வரையும் ஆர்வமுள்ள ஒரு பெண்ணுக்கு என் தினப்படி கட்டுரைகளை அனுப்பி அதற்குப் பொருத்தமான ஓவியங்கள் வரையச் சொல்லி ஊக்கப்படுத்தி இருக்கிறேன்.

என் நோக்கம் என்னவென்றால் கட்டுரைகளைப் படிக்கும்போது நல்ல கருத்துகள் உள்ளே செல்லும், இரண்டாவது அதற்குப் பொருத்தமான படங்கள் வரையும்போது மனம் திசை திரும்பும் என்பதுதான். ஆனால் என்ன கொடுமை என்றால் அந்தப் பெண்களுக்கு தமிழ் படிக்கத் தெரியாது. அப்பா அம்மா படித்துக் காண்பித்தால் மட்டுமே அவர்களால் வரைய முடியும்.

நான் மருத்துவர் அல்ல. ஆனால் எங்கள் தாத்தா, பெரியப்பா, அப்பா இப்படி எங்கள் குடும்பத்துக்கு ஹோமியோபதி மருத்துவப் பின்னணி உண்டு. அந்தக் காலத்தில் என் தாத்தா ஹோமியோபதி மருத்துவர், பெரியப்பா ஹோமியோபதி மருந்து கடை வைத்திருந்தார். அப்பாவுக்கு குடும்பப் பின்னணி காரணமாக ஆழமான அனுபவ அறிவுண்டு.

ஒரே விஷயத்தில் முரட்டுப் பிடிவாதமாக / ஸ்ட்ரெஸ்ஸாக / வெறியாக இருப்பவர்களின் ஆக்ரோஷம் குறைவதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்துண்டு. ஏதேனும் நல்ல ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அந்த மருந்தை வாங்கிக் கொடுக்க ஆலோசனை சொல்லி இருக்கிறேன்.

நான் ஜோதிடர் அல்ல. ஆனால், ஜோதிடத்துக்கு சாஃப்ட்வேர் தயாரித்துள்ளோம். என் தாத்தா நல்ல ஜோதிடர். அப்பாவுக்கும் ஜோதிடம் தெரியும். நாங்களே ஜோதிடத்துக்காக 4 ஆண்டுகள் ஆராய்சிகள் செய்து 1996-லேயே எங்கள் காம்கேர் வாயிலாக சாஃப்ட்வேர் தயாரித்துள்ளோம். அந்த ஆர்வத்தில் அந்தக் குழந்தைகளின் விவரங்களைப் பெற்று ஜோதிடம் பார்த்து அவர்கள் என்ன துறையில் வருவார்கள் என்றெல்லாம் பார்த்துச் சொல்லி இருக்கிறேன்.

இப்படி திறமை, மருத்துவம், ஜோதிடம் என 360 டிகிரியில் ஆராய்ந்து, எல்லா கோணங்களிலும் என்னால் ஆன ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன்.

கொரோனா காலகட்டத்தில் ஆன் லைன் வகுப்புகளால் மனதளவில் பாதிக்கப்பட்டது பெற்றோர்கள்தான்.

என்னவோ தெரியவில்லை. என்னிடம் ஆலோசனைப் பெற்ற அந்தக் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என தெரிந்துகொள்ள அவர்களின் பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப் செய்து நலன் விசாரித்தேன். அவர்கள் கல்லூரி முதலாம் ஆண்டில் நல்லபடியாக படித்துக்கொண்டிருப்பதாக பதில் அனுப்பி நன்றியும் சொல்லி இருந்தார்கள்.

சுபம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜூன் 13, 2022 | திங்கள்

(Visited 908 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon