பெருமிதமும் கர்வமும்!
இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் ஒரு டாக்டர் குறித்து எழுதி இருந்தேன் தெரியுமா? (பதிவின் லிங்க் முதல் கமெண்ட்டில்!) அவரை சந்திக்க அப்பாவுடன் சென்றிருந்தேன். அவர் குறித்து நான் எழுதி இருந்த பதிவை அவரிடம் காட்டவில்லை. சொல்லவுமில்லை. இத்தனைக்கும் அவர் ஒவ்வொரு பேஷண்ட்டுக்கும் பொறுமையாக நிறைய நேரம் செலவழித்து / ஒதுக்கும் நேரத்தை முழுமையாக அர்ப்பணிக்கக் கூடியவர்தான்.
அவர் குறித்து நான் எழுதி இருந்தப் பதிவை காட்டி இருந்தாலோ அல்லது சொல்லி இருந்தாலோ மகிழ்ந்திருப்பார்தான். ஆனால், என் பதிவை அவர் கவனத்துக்குக் கொண்டு செல்லவே இல்லை.
காரணம் இதுதான்: நான் காட்டி இருந்தால் என் மனதுக்குள் ‘பார் உன்னைப் பற்றி நான் எவ்வளவு உயர்வாய் எழுதி இருக்கிறேன்….’ என்ற சின்ன கர்வம் தோன்றி இருக்கும்.
அதன் பின்னர் அவர் நம்மிடம் தனிப்பட்ட முறையில் கவனிப்பைக் காட்ட வேண்டும் என்ற ‘சாதாரண’ மனித மனம் தலைதூக்கும். அப்படி அவர் நம்மீது தனி அக்கறை காட்டவில்லை என்றாலோ அல்லது கிளினிக்கில் முன்னுரிமை கொடுக்கவில்லை என்றாலோ அல்லது கூடுதலாக ஒரு புன்னகையை செலுத்தவில்லை என்றாலோ அல்லது வேறேதேனும் டென்ஷனில் சற்றே கடுமையாக பேசிவிட்டாலோ ‘பாரேன், இவரைப் பற்றி எல்லாம் பாராட்டி எழுதினோமே, கொஞ்சம் கூட நன்றி இல்லை…’ என்று ஏதோ நாம் பரோபகாரம் செய்துவிட்டதைப் போல நம் ‘குரங்கு’ மனம் எதிர்பார்க்கத் தொடங்கிவிடும். அதுமட்டுமா நம் பரோபகாரத்துக்கு (!) பிரதிபலனைக் கூட எதிர்பார்க்க ஆரம்பித்து நம்மை இயல்பாக இருக்க விடாது.
நாம் வெளியில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளாமல் / கட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பொதுவாக நம் மனிதமனம் அப்படித்தான் நினைக்க வைக்கும்.
அதுவே, நம் எழுத்து அவர் கவனத்துக்கு தானாகவே சென்றிருந்தாலோ அல்லது வேறு யாரேனும் எடுத்துச் சொல்லி இருந்தலோ அது வேறு விஷயம்.
ஆகவேதான், நான் எழுதுவது, பார்ப்பது, செய்வது, சொல்வது அனைத்தும் என் சந்தோஷத்துக்காக… என் மன அமைதிக்காக.
சில என்னை உற்சாகப்படுத்தும், சில என்னை அமைதிப்படுத்தும், சில என்னை அழ வைக்கும், சில என்னை ஊக்கப்படுத்தும், சில என்னை ஆற்றுப்படுத்தும்.
எல்லாவற்றையும் ‘இதோ பார்… உன்னைத்தான் சொல்லி இருக்கிறேன்…’ என அவரவரிடம் காட்டி அவர்கள் பரவசப்படுவதில் நான் கர்வப்பட விரும்புவதில்லை.
என் மன ஆரோக்கியத்துக்காக நான் செய்யும் மிக ஆரோக்கியமான செயல்பாடு இது. அதனால்தான் எந்தப் பதிவிலும் யாரின் பெயரையும் குறிப்பிடுவதில்லை. அப்படி குறிப்பிட்டு எழுதினால் அவர்களிடம் முன் அனுமதி வாங்கியே பதிவிடுகிறேன்.
சின்ன சின்ன கர்வங்கள் கூட நம் மனதை சலனப்படுத்துவதை விரும்புவதில்லை. அமைதியாக வாழ்வதற்கு இதுவும் ஒரு வழி! முயற்சித்துப் பார்க்கலாம்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 11, 2022 | சனிக்கிழமை | காலை 6 மணி