நம்மை நாமே அதீதமாகக் கொண்டாடுவதால் தான்!
நம் தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, இயங்கும் துறையானாலும் சரி நின்று யோசித்துப் பார்த்தால்தான் ஏற்றமும், இறக்கமும், புகழும், அவமானமும், வலிகளும். எவ்வளவு சாதனை என மலைப்பதும், எத்தனை சோதனை என அழுவதும் நம்மை ‘நாமே’ மிகவும் பிரமிப்பாக நினைத்துக்கொண்டு யோசிப்பதால் மட்டுமே.
எல்லாவற்றையும் Part of the Life என கருதினால் கொண்டாட்டத்துக்கும் அழுகைக்கும் வாய்ப்பே இல்லை.
எங்கள் நிறுவனத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றும் பொறியாளர்கள் அடிக்கடி வியந்து கேட்கும் ஒரு கேள்வி என்னவென்றால், ‘ஒரு ப்ராஜெக்ட் முடிந்ததும் ரெஸ்ட் எடுத்துவிட்டு அந்த வெற்றியை கொண்டாடிவிட்டு அடுத்ததை எடுக்கலாம் அல்லவா… எப்பவும் தொடர்ச்சியாக பிசியாக இருப்பது போரடிக்கவில்லையா?’
இந்தக் கேள்வியில் அக்கறையும் இருக்கலாம். ஆச்சர்யமும் இருக்கலாம். ஏன் என்றால் அவர்களுக்கெல்லாம் ஒரு ப்ராஜெக்ட் முடிந்ததும் ஒரு வாரம், பத்து நாட்கள் ஃப்ரீ டைம் கிடைக்கும். அந்த நேரத்தில் நான் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளுக்கு அஸ்திவாரம் போட்டுக்கொண்டிருப்பேன். இதே லாஜிக்தான் ஏதேனும் ப்ராஜெக்ட் தோல்வி அடைந்திருந்தாலும்.
இப்படியாக போய்க்கொண்டே இருந்தது உரையாடல்.
என்ன இது…. எதற்காக இத்தனை சீரியஸான கருத்து இப்போது என நினைக்கிறீர்களா?
அலைபேசி வாயிலாக ஒரு சிறிய நேர்காணல். நிருபர் வழக்கமான கேள்வி ஒன்றை எழுப்பினார். ‘பிசினஸில் நீங்கள் சந்தித்த வலிகரமான சூழல்கள் குறித்து சொல்ல முடியுமா?’
வழக்கமான கேள்வி என்றாலும் ‘வலிகரமான’ என்ற வார்த்தைப் பிரயோகம் வித்தியாசமாக இருந்தது. அதற்கு நான் சொன்ன பதில் தான் உரையாடலாக முதல் நான்கு பத்திகளில்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 15, 2022 | புதன் கிழமை