ஃபேண்டசி நம்பிக்கைகள்!
‘நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா… இப்படிச் செய்யுங்கள்’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ பார்த்தேன். வெற்றிலையை நன்கு சுத்தமாக்கி, மஞ்சளை கரைத்து வைத்துக்கொண்டு தீக்குச்சியினால் மஞ்சளைத் தொட்டு தொட்டு வெற்றிலையில் விரும்பியதை சுருக்கமாக எழுதி சுவாமி முன் வைத்து வேண்டிக்கொண்டு அந்த வெற்றிலையை சுருட்டி நம் பையில் வைத்துக்கொண்டு சென்றால் நினைத்த காரியம் நடக்கும் என்று சொல்லிக்கொண்டே போனார்கள்.
நாம் சரஸ்வதி பூஜை, விநாயகர் பூஜை, பொங்கல் போன்ற பண்டிகையின் போதெல்லாம் பூஜை செய்வதற்கு முன் வெற்றிலையின் மேல் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து முதலில் அதற்கு வேண்டிக்கொண்டு பூஜை செய்த பிறகுதான் மற்ற பூஜை எல்லாம் செய்வோம். இதுதான் நாம் காலம் காலமாக நாம் செய்துவரும் பாரம்பர்யமான பழக்கம், வழக்கம், நம்பிக்கை எல்லாமே.
தெரியாதவர்களுக்காக ஒரு தகவல். வெற்றிலை மீது மஞ்சளை கூம்பாக பிடித்து வைப்பதை மஞ்சள் பிள்ளையார் என்பார்கள்.
இதையேத்தான் கொஞ்சம் மாற்றி ஃபேண்டசியாக்கி வெற்றிலையில் மஞ்சளால் விரும்பியதை எழுதி வைத்துக்கொண்டால் நல்லது நடக்கும் என்கிறார்கள்.
பாரம்பர்யமாக நினைத்து பக்தி செய்தால் என்ன? ஃபேண்டசியாக மாற்றி பக்தி செய்தால் என்ன? ஏதோ ஒரு நம்பிக்கையை வைத்துக்கொண்டு செயல்பட்டால் நல்லது நடக்காமலா போய்விடும்?
வாழ்க்கையே நம்பிக்கைத்தானே?
– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 1, 2022 | வெள்ளி