துஷ்டரைக் கண்டால் மட்டும் அல்ல!
நாம் சந்திக்கும் நபர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவரைப் பார்த்ததும் அப்பாவாக அம்மாவாக நினைக்கத் தோன்றுவதும், தோன்றாததும் அவரவர் இயல்பு. அப்படியே தோன்றினாலும் அப்பா, அம்மா என்று அழைத்துத்தான் அந்த பாசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை.
ஃபேஸ்புக்கில் வயதில் மூத்த ஒருசிலர் என் பதிவுகள் குறித்து இன்பாக்ஸுக்கு சாட்டில் வலிய வந்து பாராட்டுவார்கள். அப்போது அவர்கள் என் பதிவு பற்றி ஊறுகாய்போல சொல்லிவிட்டு, மெயின் உணவாக சில விஷயங்களை தாங்கள் எதிர்பார்ப்பதை சொல்லும்போது எரிச்சலாக இருக்கும்.
என்னவோ ஒண்ணும் தெரியாத பாப்பாவுக்கு சாக்லெட் கொடுத்து ஏமாற்றுவதைப் போல நினைத்துக் கொள்ளும் அவர்களின் அறியாமை மேலும் மேலும் அவர்கள் மீதான மரியாதையை குறைக்கவே செய்யும்.
எல்லோரையும் என் மகளைப் போல கருதுவேன், அந்த சின்னப் பெண் என்னை அப்பான்னு தான் கூப்பிடுவாங்க, இந்த மேடமும் என்னை அப்பான்னுதான் கூப்பிடுவாங்க, காலேஜில் படிக்கிற அந்த பெண்ணும் என்ன அப்பான்னுதான் கூப்பிடுவாங்க அப்படி இப்படி என்று எல்லோருமே தன்னை அப்பா என்று கூப்பிடுவதால் நீயும் அப்படி கூப்பிடு என்று மறைமுகமாக வலியுறுத்தும் ஆயுதம் அது.
நான் வேண்டுமென்றே அழுத்தமாக ‘அப்படியா சார்?’ என்பேன்.
என்னிடம் ஏன் குறிப்பாக வலிய வந்து தன் எதிர்பார்ப்பை சொல்கிறார் என யோசித்துப் பார்த்தால் எல்லோரையுமே நான் சார், மேடம் என்றே அழைக்கிறேன்.
முகமே தெரியாத முன்னே பின்னே பார்க்காத பழகாத நபர்களை அப்படித்தானே அழைக்க முடியும்.
யார் யார் என்ன உறவோ அதுபடி அழைப்பதுதான் பல ஏமாற்றங்களில் இருந்து நம்மை பாதுக்காத்துக் கொள்ளும் கேடயம்.
பின்னாளில் ஏதேனும் பிரச்சனை வந்தால், நான் அண்ணன் போல பழகினேன், தம்பி போல நினைச்சு பேசினேன், அக்கா போல நினைத்துப் பாசமா பழகினேன் இப்படி நடந்துகொண்டுவிட்டாரே என்று சொல்லி சொல்லி வருத்தப்படாமல் இருக்க வேண்டுமானால் யார் யாரை எந்த வரையறைக்குள் வைக்க வேண்டுமோ அந்த வரையறைக்குள் வைப்போமே!
நானும் நாசூக்காக அவர்களிடம் அவர்களுக்குப் புரியும் விதத்தில் என் இயல்பை சொல்லி விடுவேன். அதையும் மீறி தொடர்ச்சியாக அவர்கள் அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் ஒரே ஆயுதம் ‘ப்ளாக்’ தான். வேறென்ன செய்ய?
துஷ்டரைக் கண்டால் தூர விலக வேண்டும் என்பார்கள். துஷ்டரைக் கண்டால் மட்டும் அல்ல, தன்னை அதீதமாக நினைத்துக்கொண்டு அதுபோல அதீதமாகப் பிறரும் தன்னைக் கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களிடம் இருந்தும் தூர விலக வேண்டும்!
– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 30, 2022 | வியாழன்