‘எக்ஸ்ட்ரா’ பெருமை வேண்டாமே!
அப்போது எனக்கு 35 வயதிருக்கும். ஒரு கிளையின்ட் மீட்டிங். அவர் அலுவலகத்தில் நடந்தது. நாங்கள் இருவரும் பேசி முடித்த பிறகு மீட்டிங்கில் அவருடைய அலுவலகத்தில் இருந்து இரண்டு இன்ஜினியர்கள் கலந்துகொள்ள வேண்டி இருந்தது.
அவர் இருவரையும் கூப்பிட்டனுப்பினார். ஏற்கெனவே தயார் நிலையில் இருந்ததால் கையில் நோட்டுடன் வந்தனர். ஆனால் அவர்கள் அமரவில்லை. நான் அமருங்கள் என சொல்லியும் ‘பரவாயில்லை மேடம்’ என்று சொன்னார்களே தவிர அமரவில்லை. கிளையின்ட்டும் அவர்களை உட்காரச் சொல்லி வலியுறுத்தவில்லை. கிளையின்ட் டேபிளுக்கு முன் நான் அமர்ந்திருக்கும் நாற்காலி இருந்தது. அவர்கள் இருவரும் உட்கார நாற்காலிகள் அந்த அறையில் என் கைக்கு எட்டும் தொலைவில் இருந்தது.
நான் உடனே எழுந்து சென்று அந்த இரண்டு நாற்காலிகளையும் நகர்த்தினேன். ‘பரவாயில்லை அமருங்கள்’ என்று சொன்னதும் அவர்கள் உட்கார்ந்தனர்.
மீட்டிங் முடிந்த பிறகு நான் என் அலுவலகம் திரும்பி விட்டேன். அந்த கிளையின்ட்டிடம் இருந்து போன் அழைப்பு வந்தது.
‘மேடம் என்னை நினைத்தே எனக்கு கூச்சமாகி விட்டது. என்னால் உங்கள் அளவுக்கு அன்பாக என் ஸ்டாஃப்களிடம் நடந்து கொள்ளத் தெரியவில்லை…’
‘நான் என்ன அப்படி அன்பாக நடந்துகொண்டேன்…’
‘அவர்கள் இருவருக்கும் நீங்களே சேரை நகர்த்தி கனிவாகப் பேசி அமரச் செய்தீர்களே…’
மீண்டும் எனக்கு அங்கு நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது. நின்று கொண்டே பேசும் நபருக்கு கைக்கு எட்டும் தொலைவில் இருக்கும் நாற்காலியை நகர்த்திப் போடச் செய்தது அத்தனை கனிவான செயல் என்றால் உண்மையிலேயே சேவை மனப்பான்மையுடன் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படும் நபர்களை எல்லாம் இவர் என்ன சொல்வார் என நினைத்துக்கொண்டேன். மேலும், எந்த இடத்தில் கோபப்பட வேண்டுமோ அந்த இடத்தில் எனக்கு கோபமும் வரும் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.
இப்படி எந்தவித பாகுபாடும் இல்லாமலும் ஈகோ காண்பிக்காமலும் எல்லோரிடமும் சமமாக நடந்துகொள்ளவும், அதையே எங்கள் இயல்பாக்கிக் கொள்ளவும், அதற்காக ‘எக்ஸ்ட்ரா’ பெருமை எதுவும் கொள்ளாமல் இருக்கவும் கற்றுக் கொடுத்த என் அப்பா நேற்று (ஜூலை 12, 2022) தன் 77-ம் வயதில் அடி எடுத்து வைத்தார்.
நேற்று காலையில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் சென்றோம். ஏதேனும் அவசியத் தேவை என்றால் போன் செய்யச் சொல்லி விட்டு அப்பாவுக்காக நேற்று நிறுவனத்தை வீட்டில் இருந்தே இயக்கினேன். மாலை அம்மா பஜ்ஜி செய்தார். அப்பா தன் கையால் தேங்காய் பர்பி செய்தார். அதை வைத்தே அப்பாவுக்கு பிறந்த நாள் கேக் வடிவமைத்தேன். டிவியில் விஷ்ணு சகஸ்ரநாமம். நல்லெண்ணெய் விளக்கேற்றி பூஜை அறையில் பிள்ளையார் தலைமை தாங்க பிறந்தநாள் கொண்டாடினோம்.
சேவாலயாவில் இருந்து வாழ்த்துத் தகவல் வந்தது. கூடவே, சேவாலயா குழந்தைகளுடன் பிறந்தநாள் பிரார்த்தனை செய்து கொள்வதாகக் கூறினார்கள்.
சமூக வலைதளத்தில் வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புகைப்படக் குறிப்பு: புகைப்படத்தில் இருக்கும் 76 என்ற ‘கணித எண் கேக்’ அப்பா செய்த தேங்காய் பர்பியில் நான் வடிவமைத்து, பாதாம் பருப்பினால் டாப்பிங் செய்துள்ளேன்.
நன்றி
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 13, 2022 | புதன்