காலம் காட்டும் புகைப்படம்!
ஒரு புகைப்படம். இரண்டு அக்காக்களுக்கு நடுவே ஒரு தம்பி. தம்பி ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறான். அக்காக்கள் இரண்டு பேரும் அந்த நாற்காலியின் இரண்டு பக்கங்களிலும்.
இரண்டு அக்காக்களுக்கும் 6,4 வயதிருக்கும். தம்பிக்கு 3 வயதிருக்கும்.
இது ஒரு ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படம். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் எடுத்தது என புகைப்படத்தில் சிறியதாக பென்சிலால் எழுதியிருந்த தேதி சொல்லியது.
இதுவே இன்று இதே வயதில் மூன்று குழந்தைகளை ஸ்டுடியோவில் எடுத்திருந்தால் எப்படி எடுத்திருப்பார்கள் என கற்பனை செய்தேன்.
இரண்டு அக்காக்களையும் இரண்டு நற்காலியில் உட்கார வைத்து தம்பியை பின்னால் நிற்கச் செய்து (உயரம் போதவில்லை எனில் ஒரு ஸ்டூல் போட்டாவது நிற்க வைத்து) இரண்டு அக்காக்களின் தோள்களிலும் கையை போட்டபடி ஸ்டைலாக போஸ் கொடுக்க வைத்திருப்பார்கள்.
இப்போதெல்லாம் யார் ஸ்டுடியோவில் போட்டோ எடுக்கிறார்கள் என நினைப்பது புரிகிறது. ஸ்டுடியோ என்றல்ல திருமண வைபவங்களில், நிகழ்ச்சிகளில் குட்டீஸ்களை புகைப்படம் எடுக்கும்போது என்றுகூட வைத்துக் கொள்ளலாம். இங்கு பேசுபொருள் ஸ்டியோ
அல்ல. புகைப்படம்தான்.
முதலில் நான் பார்த்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில் இருக்கும் குழந்தைகள் போஸ் கொடுத்திருப்பதற்கும், இரண்டாவதில் நான் கற்பனை செய்த புகைப்படத்திற்குமான வித்தியாசம்தான் தலைமுறை இடைவெளி!
இதில் எந்தத் தலைமுறையினரையும் குற்றம் சொல்லவில்லை. புகைப்படங்கள் வெறும் உருவங்களை மட்டும் படம்பிடிப்பதில்லை, அந்தந்தத் தலைமுறையையும் சேர்த்தே படம் பிடித்துக்காட்டுகின்றன என்பதை சொல்லவே இந்தப் பதிவு!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 6, 2022 | புதன்