மாற்றுத் திறனாளி காகம்!
இந்த புகைப்படத்தில் இருக்கும் காகத்துக்கு அலகில் கீழ்பாகம் இல்லை. உடைந்து விட்டிருக்கிறது. அதுபோல அதன் ஒரு காலில் நகங்கள் இருக்கும் பகுதியும் இல்லை. உடைந்து விட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
சமீபமாகத்தான் எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு வருகைத் தருகிறது. உற்று நோக்கினால்தான் அது ஒரு மாற்றுத்திறனாளி என்று தெரியும்.
இதனால் நாங்கள் போடும் அரிசி, சாதம் இதர டிபன் வகைகளை அலகால் கொத்தி எடுக்க முடியாது. ஆனாலும் முயற்சி செய்யும். அருகில் இருக்கும் மற்ற காகங்கள் தங்கள் அலகால் எடுத்து இதன் வாயில் ஊட்டும். இவற்றுக்குள் இருக்கும் நேசம் நம்மை சிலிர்க்க வைக்கும்.
இந்த காகத்துக்காகவே நாங்கள் பிஸ்கட்டை நமுக்க வைத்து (அப்போதுதான் இலகுவாக விழுங்க முடியும் என்பதால்) பந்தைப் போடுவது போல வீசுவோம். அந்த மாற்றுத்திறனாளி காகம் லபக் லபக் என தனக்கிருக்கும் மேல் பாக அலகால் உள்வாங்கி விழுங்கும்.
நம் உடம்பும், மனதும் நம் சூழல் எப்படி அமைகிறதோ அதற்கேற்ப தன்னை கட்டமைத்துக்கொள்ளும் என்ற விதி மனிதர்களாகிய நமக்கு மட்டும் அல்ல, இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களும்தான். இல்லாவிட்டால் உடைந்த கல்லுக்குள் கிடைக்கும் சிறு இடைவெளியிலும் செடிகள் முளைப்பது சாத்தியமா?
எனவே, எந்த சூழலிலும் எப்பேற்பட்ட கஷ்டகாலத்திலும் நம் மனதை மட்டும் விட்டுவிடக் கூடாது, எதையும் கடந்து வந்துவிட முடியும்.
சந்தோஷம் நிலைக்கட்டும், மகிழ்ச்சி பரவட்டும்!
புகைப்படக் குறிப்பு: வெள்ளைக் கலர் அலகுள்ள காகத்தை ஜூம் செய்து பார்த்தால் அதன் கால் பகுதியையும், அலகும் துல்லியமாகத் தெரியும்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 16, 2022 | சனிக்கிழமை