அம்மன் அந்தம்மாவானக் கதை!
சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோரின் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றிருந்தேன்.
நர்ஸ் ஒவ்வொரு நபரின் பெயரைச் சொல்லி பரிசோதனை அறைக்கு அழைக்கும்போதும் நான் நர்ஸின் முகபாவனையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் ஒரு பெயரை அழைக்கும்போது மட்டும் நர்ஸை பார்க்காமல் அழைக்கப்பட்ட நபரின் முகத்தைப் பார்த்தேன்.
அவர் பெயர்: அப்துல் கலாம்!
அவர் எப்படி இருக்கிறார், எப்படி பேசுகிறார், எப்படி முகபாவனை செய்கிறார் என்றெல்லாம் என் மனம் தன்னிச்சையாக அலச ஆரம்பித்தது.
ஒருமுறை பழைய வாஷிங் மெஷினை போட்டுவிட்டு புதிது வாங்கச் சென்றிருந்தபோது எங்களுக்கு உதவிய கடைப் பணியாளர் மிகப் பணிவாக கனிவாக அணுகினார். நான் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொன்னார். வேலை முடிந்ததும் அவர் பெயரைக் கேட்டறிந்தேன்.
அவர் பெயர்: காந்தி!
அந்தப் பெயரும் நீண்ட நேரம் என்னை அவருடைய நடை உடை பாவனை மற்றும் செயல்பாடுகளின் மீது பெரிய தாக்கத்தை உண்டு செய்தது.
அது சரி, என்னுடைய பெயர் எப்படிப்பட்டத் தாக்கத்தை உண்டு செய்யும் என பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஏதேனும் ஒரு ப்ராஜெக்ட்டுக்காக என்னை சந்திக்க வருபவர்கள் அல்லது கிளியிண்ட் நிறுவனத்தில் யாரேனும் புதியவர்கள் அறிமுகமாகி எதேச்சையாக என்னை சந்தித்து அவர்கள் ப்ராஜெக்ட் குறித்து பேசும்போதும் ‘அந்த புவனேஸ்வரி அம்மனே நேரில் எங்கள் ப்ராஜெக்ட்டுக்கு உதவ வந்ததைப் போல் உள்ளது’ என என்னிடம் நேரடியாகவோ அல்லது நான் சென்ற பிறகு கிளையிண்ட் நிறுவனத்தில் உள்ளவர்களிடமோ சொல்வார்கள்.
அதற்கெல்லாம் நான் மிகவும் சந்தோஷப்பட்டுவிட மாட்டேன். ஏன் என்றால் அவர்கள் வெகுவிரைவிலேயே தங்கள் கணிப்பில் மாற்றம் செய்துகொள்வார்கள் என எனக்குத்தான் தெரியுமே!
எல்லா விஷயங்களிலும் என்னுடைய கொள்கைப் பிடிப்பை விட்டுவிடாமல் இருப்பதாலும், நேர்மைக்குப் புறம்பான விஷயங்களுக்கு சமசரம் செய்துகொள்ளாமல் இருப்பதாலும் அவர்களுக்கு ஒத்துவராத விஷயங்களை நான் ஏற்றுக்கொள்ள முடியாத சூழல்களில் அம்மனாக உருவகம் செய்தவர்கள் என்னை ’பத்ரகாளி’ என கருதுவார்களோ என்று நினைத்ததுண்டு.
எங்கள் நிறுவனத்தின் ஆரம்ப காலகட்டங்களில் எங்கள் ஆடிட்டராக இருந்தவருக்கு எங்கள் நிறுவனம்தான் முதல் கிளையிண்ட் என்பதால் அவர் என்னை அம்மனாகவே கருதி மதித்து வந்தார். ‘புவனேஸ்வரி அம்மனே சொல்லியாச்சு, பிறகென்ன?’ என்று அடிக்கடி சொல்லவும் செய்வார். சில வருடங்கள் கழித்து அவர் தன் உறவினர் ஒருவருக்கு எங்கள் நிறுவனத்தில் பணி புரிந்ததைப் போல சர்டிஃபிகேட் கேட்டதற்கு நான் மறுத்ததால் ‘அந்தம்மாவோடு பெரிய ரோதனையாப் போச்சு, கொஞ்சம் கூட வளைஞ்சு கொடுக்க மாட்டேங்கிறாங்க…’ என்று புலம்பியதை அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர் சொல்லி கேள்விப்பட்டேன்.
இப்படி ‘அம்மனாக’ தெரிந்தவர் ‘அந்தம்மாவாக’ மாறிப்போன நிகழ்வுகள் ஏராளம்.
ஆனாலும், என்னாலும்கூட ஒவ்வொரு முறையும் நபர்களின் பெயர்களை கேட்கும்போது அந்தந்தப் பெயர்களுக்குரிய சம்மந்தப்பட்ட ஒரிஜினல் நபர்களுடன் ஒப்பிடாமல் இருக்க முடிவதில்லை.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 21, 2022 | வியாழன்