‘தி இந்து’ தமிழ்: என் குழந்தைப் பருவம் (July 21, 2022)

‘தி இந்து’ தமிழ் ஜூலை 21, 2022

என் குழந்தைப் பருவம்!

சாக்லெட்டுகளுக்கெல்லாம் மயங்காத குழந்தை!

நான் பிறந்தது கும்பகோணத்தில். அப்போது என் அப்பாவும் அம்மாவும் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் தொலைபேசி துறையில் பணி. அப்பா பெயர் கிருஷ்ணமூர்த்தி. அம்மா பெயர் பத்மாவதி. குழந்தையாக இருக்கும்போது அக்கம்பக்கத்தினர் என்னை தூக்கி வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்களாம். நான் வர மாட்டேன் என்பதால் சாக்லெட்டுகளை நீட்டி ஆசை காட்டி அழைப்பார்களாம். ஆனால் நான் எப்படி அழைத்தாலும் எதற்கும் மசிய மாட்டேனாம். இன்று என் பெற்றோர் பெருமையாய் சொல்லிக்கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு இதுவாகத்தான் இருக்க வேண்டும் என அடிக்கடி நான் நினைத்துக்கொள்வதுண்டு.

ஒன்றாம் வகுப்பில் ராஜமரியாதை!

ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது டீச்சரின் நாற்காலிக்கு அருகில் முதல் மாணவியாக நான் அமர்ந்திருப்பேன். ஒரு நாள் எப்படியோ நாற்காலிக்கு அடியில் சென்று உட்கார்ந்து விட்டேன். அதை கவனித்த டீச்சர் ஸ்கேலினால் மென்மையாக அடித்து வெளியில் கொண்டு வர நான் அழ ஆரம்பித்தேன். அடி என்னவோ செல்லமாக தட்டிக்கொடுப்பதைப் போல்தான். ஆனால் எல்லோர் முன்னிலையிலும் கடிந்துகொண்டதுதான் என்னவோ போல ஆனது. பள்ளி முடிந்து என்னை அழைத்துச் செல்ல வந்திருந்த அப்பா நான் அழுவதை கவனித்துப் பதறினார். நான் சிணுங்கலாய் சொன்ன விஷயத்தை புரிந்துகொண்டு என் வகுப்பாசிரியையிடம் என்னை தூக்கிக்கொண்டு சென்றார். என்ன பேசினார் என்று தெரியவில்லை. ஆனால் அப்பாவும் டீச்சரும் சிரித்துப் பேசிக்கொண்டார்கள். அடுத்த நாளில் இருந்து எனக்கு வகுப்பில் ராஜமரியாதைத்தான்.

அடிதடி சண்டையானாலும் இரவில் கரிசனம்!

எனக்கு ஒரு தங்கை, ஸ்ரீவித்யா. ஒரு தம்பி, ஸ்வாமிநாதன். பகலில் தங்கை தம்பியுடன் வாய் சண்டை, கை சண்டை என வந்தாலும் இரவு அவர்கள் தூங்கும்போது பாவமாக இருக்கும். அவர்களுக்கு போர்வை விலகும்போதெல்லாம் நன்றாக இழுத்துப் போர்த்திவிடுவேன். என் மீது தவறில்லை என்றாலும் சண்டை போட்டதுக்காக தூங்கிக்கொண்டிருக்கும் அவர்களைப் பார்த்து சாரி சொல்லுவேன். இதையெல்லாம் நானும் அறியாத குழந்தையாக இருக்கும் போதே செய்திருக்கிறேன் என்பார்கள்.

எனக்கு பத்து வயதிருக்கும். ஒருநாள் என் தங்கை தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது கீழே விழுந்து முட்டிக் காலில் சிராய்த்து ரத்தம் வந்தது. அப்பா அம்மாவிடம் சொன்னால் விளையாட வெளியில் விட மாட்டார்கள் என்பதால் ‘சொல்ல வேண்டாம்’ என சொல்லி நானே காயத்தில் தேங்காய் எண்ணெய் தடவித் தடவி அந்த காயத்தை ஆற்றினேன்.

அப்பாவுடன் ஆஃபீஸர் வகுப்பில்!

தொலைபேசி துறையில் ஆஃபீஸர் ப்ரமோஷன் தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு ஒரு வயதான என்னை சைக்கிளின் முன்பக்க பேபி சீட்டில் அமர வைத்து அழைத்துச் செல்வாராம் அப்பா. ஒரு வயதில் ஆஃபீஸர் வகுப்புக்குச் சென்ற குழந்தை நானாகத்தான் இருக்கும். கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து உட்கார வைத்தால் அதை கிழிக்காமல் அழகு பார்த்துக்கொண்டிருப்பேனாம். வகுப்புக்கு வந்திருக்கும் அனைவரும் என்னை அதிசயமாக வியந்து பார்ப்பார்களாம்.

அப்போதே அப்பாம்மா, அம்மாப்பா!

‘உனக்கு யாரைப் பிடிக்கும் அப்பாவையா, அம்மாவையா?’ என்ற கேள்வியை கடந்து வராதவர்களே இருக்க மாட்டார்கள். மழலையே மாறாமல் பேச்சே முழுமையாக வராத போதே இந்தக் கேள்விக்கு ‘அப்பாம்மா’ என்று பதில் சொல்வேனாம். அப்பா அம்மா இருவரில் யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டேனாம். இதே கேள்வியை சற்று மாற்றி ‘உனக்கு யாரைப் பிடிக்கும் அம்மாவையா, அப்பாவையா?’ என்று கேட்டால் ‘அம்மாப்பா’ என்பேனாம்.

என் தம்பி தங்கையையும் யாரும் எதுவும் சொல்ல விட மாட்டேனாம். அந்த அளவுக்கு குடும்ப உறுப்பினர்கள் மீது ‘பொஸசிவ்னெஸ்’!

ஆளுக்கொரு நோட்டு, பஞ்சாயத்தில் தீர்ப்பு!

என் அப்பா அம்மா இருவருக்கும் தொலைபேசி துறையில் பணி என்பதால் 24 மணி நேர பணி சுழற்சி. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் காலை மாலை அல்லது இரவு என மாறி மாறி ஷிஃப்ட் இருக்கும். யாரேனும் ஒருவர் வீட்டில் இருப்பார்கள். ஆனாலும் சில நாட்களில் இருவருக்கும் ஒரே நேரத்தில் வேலை இருக்கும். அப்போது எங்களுக்குள் மனஸ்தாபம் வந்தாலும் சண்டை போட்டுக்கொள்ளக் கூடாது என்பதால் அவர்கள் ஆளுக்கொரு நோட்டு பேனா கொடுப்பார்கள். அப்போதெல்லாம் பேனாவினால் எழுதுவது பெருமை. காரணம் பத்தாம் வகுப்பில்தான் பேனாவினால் எழுத அனுமதி.

எங்களுக்குள் மனஸ்தாபம் வந்தால் அதை அவரவர்கள் நோட்டில் எழுதிவைத்துவிட வேண்டும். அப்பா அம்மா வீட்டுக்கு வந்ததும் பஞ்சாயத்து ஆரம்பமாகும். தீர்ப்பு கொடுப்பார்கள். திட்டோ அடியோ இருக்காது. யார் மீது தவறு அதிகம் இருக்கிறதோ அவர்களிடம்  ‘இனிமேல் இப்படி செய்யக் கூடாது’ என்பதுதான் அதிகபட்ச கடுமையான அறிவுரையாக இருக்கும்.

வீட்டிலேயே லாக் புக் (Log Book)!

அலுவலகங்களில் பணியாளர்கள் அன்றாடம் அவர்கள் செய்யும் பணிகளை எழுதிவைக்க Log Book இருக்குமல்லவா? அதைப்போல் எங்கள் வீட்டிலும் ஆளுக்கொரு Log Book உண்டு.

அந்த நோட்டில்தான் அப்பா அம்மா வீட்டில் இல்லாதபோது வீட்டுக்கு யாரேனும் வந்தாலோ அல்லது ஏதேனும் அவர்களிடம் சொல்ல வேண்டிய நிகழ்வுகள் ஏதேனும் நடந்தாலோ எழுதி வைப்போம்.

அப்போதெல்லாம் வீட்டு வாசலில் பிச்சை கேட்டு வருபவர்கள் அதிகம். இத்தனை மணிக்கு ஆண் பிச்சைக்காரர் ஒருவர் வந்தார், இத்தனை மணிக்கு ஒரு பாட்டி பிச்சை கேட்டு வந்தார் என்றெல்லாம்கூட எழுதி வைப்போம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இதனால் எங்களுக்குள் ஒளி மறைவே இருக்காது. எல்லா விஷயங்களையும் மறக்காமல், மறைக்காமல் பேசிக்கொள்வோம். அப்பா அம்மாவிடம் எதையும் தைரியமாக பேசலாம். எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையே எங்களுக்குள் தன்னம்பிக்கையை ஆழமாக விதைத்தது.

அப்பா அம்மா வீட்டில் இல்லாதபோது!

ஒரு முறை அப்பா அம்மா இருவருமே அலுவலகம் சென்றுவிட்ட நாளன்று ஒரு பிச்சைக்காரர் குடும்ப சகிதமாக வந்தார். நாங்கள் மூவரும்தான் வீட்டில் இருந்தோம். திண்ணையில் உட்கார்ந்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தோம். திண்ணையைத் தாண்டி கேட்டுக்கு வெளியே பிச்சைக்காரர்கள். அப்போது அவர்களுக்கு நாங்கள் தனியாக இருக்கிறோம் என்பது தெரியாமல் இருப்பதற்காக என் தங்கை என்னிடம் காதில் ரகசியம் ஏதோ சொல்ல நானும் என் தம்பியும் வீட்டுக்குள் சென்று ‘அப்பா, அம்மா யாரோ பிச்சை கேட்டு வந்திருக்கா, என்ன செய்யறது….’ என்று நான் சப்தமாக கேட்டேன். என் தம்பி அடிக்குரலில் (அப்பா பேசுவதைப் போல் இருக்க வேண்டுமே அதற்காக) ‘எதுவும் போடுவதற்கு இல்லை…’ என சொன்னான். நான் வெளியே வந்து ‘சாப்பாடு எதுவும் போடுவதற்கு இல்லையாம்… நாளைக்கு வாங்க…’ என்று நயமாக பதில் சொல்லி அனுப்பினேன். இதெல்லாம் நாங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு எங்கள் பெற்றோர் சொல்லிக்கொடுத்த சூட்சுமங்கள்.

அப்பாவுக்கு இரவு நேர ஷிஃப்ட் என்றால்!

அப்பாவுக்கு இரவு நேர ஷிஃப்ட் என்றால் அம்மா இரவு தூங்கும்போது தலைமாட்டில் மிளகாய்பொடி, துடைப்பம், கத்தரிக்கோல் போன்றவற்றை பாதுகாப்புக்காக வைத்துக் கொள்வார். காரணம் அப்போதெல்லாம் பெரும்பாலும் ஓட்டு வீடு என்பதாலும், அம்மா வசிக்கும் இடங்களில் தோட்டம் இல்லாமல் இருக்காது என்பதாலும் பூரான், தேள் ஏன் பாம்பு கூட வீட்டுக்குள் வரும். நாங்கள் பயப்படக் கூடாது என்பதற்காக பாதுகாப்பாய் எங்களை அணைத்துக்கொண்டு தூங்குவார். பின்னாளில் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருப்பதற்கு இந்த நுணுக்கமெல்லாம் உதவின.

கதைபோல நாட்டு நடப்புகளை சொல்லும் பெற்றோர்!

நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் செய்திகளாக இல்லாமல் கதைகளாக எங்களுக்கு சொல்வார்கள் எங்கள் பெற்றோர். ஒருமுறை எங்கள் அம்மாவுடன் பணிபுரிந்தவரின் குடும்பத்தில் ஓர் இளம் பெண் வீட்டி விட்டு சொல்லிக்கொள்ளாமல் போய் விட்டதை கதை போல சொன்னார்கள். கதை மூலம் நிகழ்வைச் சொல்லி, வீட்டை விட்டு சென்றால் எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டும், என்னவெல்லாம் நடக்கும் என்பதை எல்லாம் அறிவுரையாக இல்லாமல் அனுபவமாக சக ஜீவனிடம் பகிர்ந்துகொள்ளும் நயத்துடன் பேசியது இன்றளவும் நினைவில் உள்ளது. இதுபோன்ற உரையாடல்கள் மூலம் வளர்ந்தவர்கள் நாங்கள் என்பதால்தான் எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமாக இல்லாமல் அதன் அடி ஆழம் வரை சிந்திக்க முடிகிறது.

எங்கள் அம்மா வழி கொள்ளு பாட்டி! 

சஞ்சீவியம்மாள்.  என் அம்மாவின் அப்பாவின் அம்மா, அம்மாவின் பாட்டி, எங்கள் கொள்ளு பாட்டி. எங்கள் கொள்ளு பாட்டி குறித்து என் அம்மா சொல்லும் விஷயங்கள் பிரமிப்பைத் தரும். ஆனால் நாங்கள் இவரை பார்த்ததில்லை.

எங்கள் கொள்ளுபாட்டி சிறுமியாக இருந்தபோது, அன்னிபெசன்ட் அம்மையார் அரசியல் பயணமாக பாண்டிச்சேரியை கடக்கும்போது அவர் தன் வயதினருடன் நின்றுகொண்டு கொடி அசைத்து வரவேற்பு அளித்த கதையை எல்லாம் என் அம்மா சுவாரஸ்யமாக சொல்வார்.

மகாகவி பாரதியாரின் வீடு எங்கள் கொள்ளுபாட்டியின் வீட்டில் இருந்து மூன்றாவது வீடோ நான்காவது வீடோ. அவரை போலீஸ் கைது செய்ய வரும்போது பாரதியார் அக்கம் பக்கத்து வீட்டில் ஒளிந்து கொள்ளும்போது எங்கள் கொள்ளுபாட்டியின் வீட்டிலும் மறைந்து கொண்டு கொல்லைப்புறம் வழியாக தப்பித்து செல்வாராம்.

இப்படி நம் நாட்டு விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் எல்லாம் எங்கள் குடும்பத்துக்கு அருகாமையில் வசித்தது எங்களுக்கெல்லாம் மிகப் பெருமையாக இருக்கும்.

பிரமாண்டமான எங்கள் அப்பா வழி உறவுகள்!

எங்கள் அப்பாவுக்கு 4 சகோதரிகள் ஜெயலஷ்மி, ராஜலஷ்மி, சரஸ்வதி, விசாலாட்சி. 2 சகோதரர்கள் குருமூர்த்தி, ராமமூர்த்தி. அனைவரும் கூட்டுக் குடும்பமாக மாயவரத்தை (மயிலாடுதுறை) அடுத்த மூங்கில் தோட்டத்துக்கு அருகே உள்ள முளப்பாக்கம் என்ற கிராமத்தில் சொந்த வீட்டில் வசித்து வந்தனர். எல்லோருமே எங்களிடம் மிக பாசமாக அன்பாக இருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் முதன் முதலில் வேலைக்குச் செல்லும் மருமகள் என் அம்மா என்பதால் அம்மாவும் ஸ்பெஷல்தான் எங்கள் தாத்தா பாட்டி வீட்டில். அதிர்ந்தே பேசாத அன்பின் தங்கங்கள் என் தாத்தா பாட்டியும், பெரியப்பாக்களும், அத்தைகளும்.

திருமணம் ஆன புதிதில் என் அப்பா அம்மா இருவரும் மாயவரத்தில் பணி புரிந்ததால் அங்கிருந்து இருவரும் சைக்கிளில்தான் ஆஃபீஸுக்கு செல்வார்களாம். இருவருக்கும் வெவ்வேறு நேர ஷிஃப்டாக இருக்கும்போது அம்மா அலுவலகத்தில் இருந்து மூங்கில் தோட்டம் வரை பஸ்ஸில் வந்து அங்கிருந்து கிட்டத்தட்ட 1-1/2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் முளப்பாக்கம் கிராமத்துக்கு நடந்தே வருவாராம்.

என் அப்பா படிக்கும் நாட்களில் முளப்பாக்கத்தில் இருந்தே மாயவரத்துக்கு பள்ளிக்கு நடந்தேதான் செல்வாராம். இதையெல்லாம் கேட்கும்போது எங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

அப்பா வழி தாத்தா ஹோமியோபதி மருத்துவர்       

எங்கள் அப்பாவின் அப்பா, எங்கள் தாத்தா பெயர் வெங்கட்ராம ஐயர். இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர். சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் எல்லாம் அறிந்தவர். எங்கள் தாத்தா மருத்துவர் மட்டுமல்ல. நல்ல ஜோதிடரும் கூட. ஆருடம் கூட சொல்வார். இவருக்கு தோட்ட வேலை, கட்டிட வேலை, தச்சு வேலை என எல்லா வேலைகளும் தெரியும். மிக நேர்த்தியாகவும் செய்வார். நாங்கள் பார்த்த நாளில் இருந்து, ஏன் என் அப்பாவின் நினைவு தெரிந்த நாளில் இருந்தே எங்கள் தாத்தா தாடி வைத்துக்கொண்டிருப்பார் என்பதால் நாங்கள் ‘தாத்தா’ என்றழைக்க மாட்டோம். ‘தாடி தாத்தா’ என்றே அழைப்போம். அந்த அளவுக்கு அவரது தாடி மிகப் பிரசித்தம்.

சர்க்கரை உருண்டை மாத்திரை!

எங்கள் அப்பாவின் பெரிய அண்ணா, எங்கள் பெரியப்பா பெயர் குருமூர்த்தி. இவர் மாயவரத்தில் (மயிலாடுதுறை) ‘மூர்த்தி ஹோமியோ ஃபார்மசி’ என்ற பெயரில் ஹோமியோபதி மருந்துக்கடை வைத்திருந்தார். சக மாணவ மாணவிகள் எல்லோரும் காய்ச்சல் இருமல் வந்தால் அலோபதி மருத்துவரிடம் செல்லும்போது நாங்கள் சர்க்கரை உருண்டை போல இருக்கும் ஹோமியோபதி மாத்திரைகள் சாப்பிடுவது ரொம்ப பெருமையாக இருக்கும்.

லேசா, லேசா!

அம்மாவுக்கு மதிய ஷிஃப்ட் என்றால், அப்பா இரவுக்கு டிபன் செய்து வைத்துவிட்டு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு என்னையும் என் தங்கை தம்பியையும் சைக்கிளின் பின் சீட்டில் அமர வைத்துக்கொண்டு கோயிலுக்கு அழைத்துச் செல்வார். அப்போது எனக்கு சைக்கிள் ஓட்டும் அப்பாவைப் பார்த்து பாவமாக இருக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு ஓட்டுவதுபோல் தோன்றும். அதனால் என் தங்கையிடமும் தம்பியிடமும் ‘லேசா ஒக்காந்துக்கோங்கோ… அப்பா சைக்கிள் மிதிக்க கஷ்டப்படறா… லேசா உட்கார்ந்தால் தான் வெயிட் குறையும், அப்பாவால் ஈசியா சைக்கிள் மிதிக்க முடியும்…’ என்று வெகுளியாய் சொல்லி இருக்கிறேன். லேசாக உட்கார்ந்தால் கனம் தெரியாது என்றெண்ணிய என் வெகுளித்தனத்தைப் பற்றி வெகுநாட்கள் அப்பா பெருமையாக உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சொல்லி மகிழ்ந்தார்.

தஞ்சையில் தானம் செய்த பல்!

காசிக்குப் போனால் விரும்பிய ஏதேனும் ஒன்றை விட்டு வர வேண்டும் என்பார்கள். தஞ்சாவூருக்கு அப்படி ஒரு ஐதீகம் இல்லை என்றாலும் நான் ஒரு பல்லை தானம் செய்துவிட்டு வந்தேன்.

எனக்கு நான்கு வயது இருக்கும்போது தஞ்சாவூர் சிவகங்கை கார்டனுக்கு சுற்றிப்பார்க்கச் சென்றோம். அப்போது சிறுவர்களுக்கான ரயில் தண்டவாளத்தில் தடுக்கி விழுந்தேன். வாயில் முன்பக்கம் இருக்கும் இரண்டு பல்லில் ஒன்று முக்கால்பாகத்துக்கும் மேல் உடைந்து எங்கோ சிதறி விழுந்தது. ஏற்கெனவே விழுந்து முளைத்த பல் அது. மருத்துவரிடம் காண்பித்தபோது பாதி பல்லை எடுத்து வந்திருந்தால் கட்டி இருக்கலாம் என்று சொன்னார். உடைந்த பல்லின் சிறுபகுதி மட்டும் அப்படியே வெளியே தெரியாமல் ஈறுக்குள் இருந்தது. இப்போது அதை ஒன்றும் செய்ய வேண்டாம். குழந்தை வளர்ந்து பெரியவளான பிறகு பார்த்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் சொன்னதால் அப்படியே விட்டு விட்டார்கள். கல்லூரி சேரும் வரை அப்படியேத்தான் இருந்தது.

எட்டு வயதில் விழுந்து முளைத்து உடைந்து பாதி தொங்கலில் ஈறுக்குள் மறைந்திருந்த பல் முதுகலை படிக்கும்போது முதலாம் ஆண்டில் தானாகவே முளைத்தது. பெரிதாகவும் முளைக்கவில்லை. சிறியதாகவும் முளைக்கவில்லை. மிகச் சரியான அளவுக்கு ஏற்கெனவே உடையாமல் இருந்த ஒரு முன்னம்பல்லின் உயரத்துக்கு வளர்ந்து நின்றது.

இது மருத்துவ உலகின் அதிசயம் என்றார்கள். இது எப்படி சாத்தியமானது என என் உள்ளுணர்வுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை என் இளைமைக்காலம் குறித்து எழுதும்போது சொல்கிறேன்.

அப்பா புகைப்படத்துக்கு மாலை போட்டு மன்னிப்பு!

அப்பா இனிப்புப் பிரியர். அம்மா இனிப்பு காரம் இரண்டும் பேலன்ஸ்டாக சாப்பிடுவார். எனவே வீட்டில் எப்போதும் ஏதேனும் ஓர் இனிப்பு, ஒரு கார தின்பண்டம் இருந்துகொண்டே இருக்கும். பள்ளி விட்டு வந்ததும் எங்கள் மாலைநேர டிபனே அவைதான். தீபாவளி பண்டிகையின் போதெல்லாம் முறுக்கு, நாடா, மிக்ஸர், அல்வா, மைசூர் பாகு என வீட்டிலேயே தயார் செய்வார்கள் அப்பா அம்மா இருவரும் சேர்ந்து.

அப்பா அம்மா வீட்டில் இல்லாதபோது நாங்களே ஏதேனும் தின்பண்டம் எடுத்து சாப்பிட ஆசையாக இருந்தால் எடுத்து கொள்வோம். ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் எனக்கு அவர்களிடம் கேட்காமல் எடுத்து சாப்பிட்டு விட்டால் ‘அப்பா அம்மாவிடம் கேட்காமல் எடுத்துக்கொண்டு விட்டோமே’ என ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டு சுவாமிக்கு வைத்திருக்கும் பூவையோ, மாலையையோ எடுத்து அப்பாவின் போட்டோவுக்கு போட்டு ‘சாரிப்பா’ என மன்னிப்பு கேட்டு பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவது போல் போடுவேன். அப்போதுதான் மனம் கொஞ்சம் நிம்மதியாகும். உயிரோடு இருப்பவர்களுக்கு மாலை பூவெல்லாம் வைக்கக் கூடாது என அறிந்திராத என் ஐந்து ஆறு வயதிருக்கும்போது நடந்த விஷய(ம)ங்கள்.

அப்பாவைத் தவிர அனைவருக்கும் வந்த அம்மை!

நாங்கள் மூவரும் சிறுவர் சிறுமியாக இருந்த காலகட்டத்தில் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்டோம். வீட்டுக்கு வந்த அடுத்த வாரத்தில் அம்மாவுக்கு அம்மை போட்டது. அடுத்து என் தம்பி, தங்கை எனத் தொடங்கி எனக்கும் போட்டது. அப்பாவைத் தவிர நாங்கள் அனைவரும் படுத்தப் படுக்கை.

அதே நேரத்தில், என் அப்பாவின் முதல் அண்ணா சிறுநீரகப் பிரச்சனையினால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எங்களை கவனித்துக்கொள்வதற்காக அப்பா விடுப்பு எடுத்திருந்தார்.

தினமும் மருத்துவமனை சென்று எங்கள் பெரியப்பாவை கவனித்துவிட்டு வீட்டுக்கு வந்து குளித்து விட்டு எங்களுக்குப் பத்திய சமையல் செய்து சாப்பிட வைத்து, வேப்பிலை படுக்கை தயார் செய்து, இளநீர் வாங்கிக்கொடுத்து, வீட்டில் டேப் ரெகார்டரில் சுவாமி சுலோகம் போட்டு வீட்டையே கோயிலாக மாற்றி எங்களுக்காக பிரார்த்தனைகள் செய்து எங்கள் அனைவரையும் உள்ளங்கைகளில் வைத்துத் தாங்கினார்.

இப்படியாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் எங்கள் பெரியப்பாவும் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார். இவருடைய ஈமச் சடங்குகளுக்கான வேலைகளும் சேர்ந்துகொண்டு அப்பாவை உண்டு இல்லை என செய்தது. மன தைரியத்துடன் அனைத்தையும் அப்பாவினால் சமாளித்து மீள முடிந்தது என்றால் அதை இப்போது நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது எங்களுக்கு.

பாட்டு டீச்சர் வீட்டில் இருந்து விடுதலை!

எனக்கு பத்து வயதிருக்கும்போது எங்கள் மூவருக்கும் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள ஒரு பாட்டு டீச்சரிடம் வகுப்பில் சேர்த்து விட்டார்கள் என் பெற்றோர். தினமும் அப்பாதான் கொண்டுவிட்டு அழைத்து வருவார். அந்த பாட்டு டீச்சர் எங்களுக்கு பாட்டு கற்றுக்கொடுப்பதுடன் அவர்கள் வீட்டு வேலைகளை எல்லாம் செய்யச் சொல்வார். குறிப்பாக அவருடைய துணிமணியை மடித்து வைக்கச் சொல்வதுதான் எங்களுக்கு அருவருப்பாக இருக்கும். அவருடைய புடவையை நாங்கள் மூவரும் சேர்ந்து கஷ்டப்பட்டு மடிப்போம். உள்ளாடைகளை மடிக்கும்போதுதான் கோவம் கோவமாக வரும். பிறகு எங்கள் பெற்றோரிடம் சொல்லி அந்த பாட்டு வகுப்பில் இருந்து விடுதலை ஆனோம். பிடிக்கவில்லை என்றால் தைரியமாக சொல்வதற்கு அத்தனை சுதந்திரம் கொடுத்திருந்தார்கள் என் பெற்றோர்.

ஸ்டேஜ் ஃபியர்!

ஏழாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் கர்நாடக இசைப் போட்டியில் கலந்துகொண்டேன். எனக்கு முன் அமர்ந்திருந்த பெண்ணின் பெயரை அழைக்கும்வரை அரங்கில் இருந்தேன். அதன்பிறகு நான் வரிசையில் இருந்து கழன்று வீட்டுக்கு ஓடிவராத குறையாக வந்து சேர்ந்தேன். அந்த அளவுக்கு Stage Fear.

என் சிறுவயதில் உள்ளுக்குள் தைரியமானப் பெண்ணாக இருந்தாலும்  பொதுவெளியில் பயந்த சுபாவம்தான்.  ஆனாலும், இளம் வயதில் தைரியத்தை உள்ளுக்குள் உரம்போட்டு வளர்த்தேன். என்னைச் சுற்றி நடக்கின்ற விஷயங்கள் அத்தனையையும் கூர்ந்து கவனித்து ஒவ்வொன்றையும் அணு அணுவாக உள்வாங்கிக்கொண்டே வந்தேன். Inner Strength – ஐ வலுவாக்கிக்கொண்டே வந்தேன்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள் வலிமை (Inner Strength), வெளி வலிமை (Outer Strength) என இரண்டு வகையான வலிமைகள் இருக்கும். உள் வலிமையின் சக்தியை ஆழமாக வளர்த்துக்கொண்டால் வெளிவலிமை தானாகவே வலுபெறும். உள் வலிமை வெளி வலிமை இரண்டும் ஏதேனும் ஒரு புள்ளியில் சங்கமிக்கும். அந்தப் புள்ளியில் அவரவர்களுக்குள் இருக்கும் பயங்கள், சங்கோஜங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் விலகும்.

எனக்கும் ஒருநாள் உள் வலிமை வெளி வலிமை இரண்டும் ஒரு புள்ளியில் சங்கமித்தன. ஆம். நான் வளர்ந்த பிறகு!

அட்டை போட்டு அதிரடி!

என் பெற்றோர் எங்களுக்கு நிறைய புத்தகங்கள் வாசிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். நாங்கள் படிப்பதற்காகவே பாலமித்ரா, ரத்னபாலா, அம்புலிமாமா, கோகுலம் போன்ற புத்தகங்களை வாங்கித் தருவார்கள். மேலும் அலுவலக லைப்ரரியில் இருந்து அவர்கள் படிப்பதற்காக குமுதம், விகடன், கல்கண்டு போன்ற இதழ்களையும் எடுத்து வருவார்கள். ஒரு முறை என் அம்மா, ‘எல்லா புத்தகங்களையும் அட்டைப் போட்டு நீட்டா வச்சுக்கணும். புத்தகங்களும் சுவாமி போலதான்…’ என்று சொல்ல நான் அதை வேதவாக்காக்கிக் கொண்டேன். சிரமேற்கொண்டு அதை செயல்படுத்தினேன்.

அப்பா பள்ளி நோட்டு புத்தகங்களுக்கு போடுவதற்காக வாங்கி வைத்திருந்த பிரவுன் பேப்பரை எடுத்து அட்டை போட்டு முடித்தேன். அம்மாவிடம் பாராட்டுக் கிடைக்கும் என்று அம்மா அலுவலகத்தில் இருந்து வரும் வரை நிலைகொள்ளாமல் காத்திருந்தேன். அம்மா அலுவலகத்தில் இருந்து வந்ததும் சஸ்பென்ஸாக கண்களை மூடிக்கொள்ளச் சொல்லி அவற்றைக் காண்பித்தேன்.

அம்மாவின் முகத்தில் அதிர்ச்சி. பின்னே இருக்காதா? நான் அட்டைப் போட்டு வைத்திருந்தவை குமுதம், விகடன், கல்கி, கல்கண்டு என வீட்டில் இருந்த பத்திரிகைகளுக்கு அல்லவா?

அம்மா அதிர்ச்சி குறையாமல், ‘குமுதம், விகடனுக்கு எல்லாமா அட்டை போடச் சொன்னேன்? பாடப் புத்தகங்களுக்குதானே சொன்னேன். மற்றபடி எல்லா பத்திரிகைகளையும் ஓரம் மடங்காமல் கிழிக்காமல் வைத்துக்கொண்டால் போதும்’ என்றாரே பார்க்கலாம்!

எனக்கு கொஞ்சம் வெட்கமாகிப் போனது.

எங்களின் தீபாவளி பொங்கல்!

என் பெற்றோருக்கு தீபாவளி, பொங்கல் தினங்களின்போதும் வேலை நாள்தான். சனி ஞாயிறு என குறிப்பிட்ட நாட்களில் வார விடுப்பும் இருக்காது. வாரத்தில் எப்போது வேண்டுமானாலும் வார விடுப்பு வரும். அதனால் ஞாயிறு எல்லோரையும்போல் விடுமுறை வீடாக இருக்காது. எல்லா நாட்களையும்போல் அதுவும் ஒரு நாள். அவ்வளவே. மாதத்தில் எப்போதேனும் இருவருக்கும் சேர்ந்து வார விடுப்பு வரும். அந்த நாட்களில்தான் எங்களுக்கு தீபாவளி பொங்கல் போல செம ஜாலியாக இருப்போம்.

அம்மி, கல்லுரலில் அரைக்க போட்டா போட்டி!

நாங்கள் ஐந்தாவது ஆறாவது படித்துக்கொண்டிருந்த காலகட்டங்களில் எங்கள் வீட்டில் மிக்ஸி கிரைண்டர் கிடையாது. அம்மி, கல்லுரல்தான் அரைக்க, பொடிக்க எல்லாவற்றுக்கும். அதில் அரைப்பதற்கு நாங்கள் மூவரும் போட்டிப் போடுவோம். குறிப்பாக எங்கள் பள்ளி விடுமுறை நாட்களில் இதற்காகவே சண்டை கூட வரும். இந்த வாரம் உனக்கு, அடுத்த வாரம் உனக்கு என அந்த வேலையை பங்கு பிரித்து தருவார்கள் என் பெற்றோர். அம்மி, கல்லுரல் குழவியை பிடிக்கக் கூட பிஞ்சுக் கைகளில் தெம்பிருக்காது. ஆனால் அரைக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் வானம் முட்ட என்பார்கள். ஆசைக்காகவும் கை வலிக்கும் வரையிலும் அம்மியில் நான்கைந்து இழு இழுத்துவிட்டு ‘இந்தாம்மா’ என கொடுத்துவிடுவது தனி கதை. எல்லோர் வீடுகளிலும் வீட்டு வேலை செய்யத் தெரிவதில்லை, வேலை செய்ய வருவதில்லை என புலம்பிக் கொண்டிருந்த நாட்களில் நாங்கள் வேலை செய்யப் போட்டிப் போடுவது வேடிக்கையாக இருக்கும் என்பார்கள்.

சிவாஜி கணேசன் ஸ்பெஷல்!

அப்பா அம்மா இருவருமே சிவாஜி கணேசன் ரசிகர்கள் என்பதால் அடிக்கடி சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களுக்கு தியேட்டருக்கு அழைத்துச் செல்வார்கள். நாங்களும் சிவாஜி ரசிகர்கள் ஆனோம். சிவாஜியைத் தவிர வேறு யாரின் நடிப்பையும் ரசிக்கும் மனம் வரவே இல்லை. அந்த நாட்களில் யாரேனும் சிவாஜியின் நடிப்பை ‘ஓவர் ஆக்டிங்’ என சொன்னால் கோபம் வரும் அளவுக்கு சிவாஜியைப் பிடிக்கும்.

‘இதுக்கா இத்தனை அதகளம்?’

சைதாபேட்டை மசூதி தெருவில் ஓர் ஒண்டுக் குடித்தனம். அதில் நான்கு குடித்தனக்காரர்கள் இருந்து வந்தார்கள். அதில் ஒரு குடித்தனத்தில் என் பெரியம்மா, என் அம்மாவின் அக்கா வசித்து வந்தார். அவருக்கு ஆண் பெண் என இரண்டு குழந்தைகள். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு என் பெரியம்மா ஈபியில் வேலை கிடைத்து சேர, என் அம்மாவுக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தது. அம்மாவுக்கு 24 மணி நேர பணி சுழற்சி என்பதால் இரவு ஷிஃப்ட் வாங்கிக்கொண்டு பகலில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வார். அப்போது என் அம்மாவுக்கு திருமணம் ஆகவில்லை. அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஐந்தாறு வயதிருக்கும் போதுதான் என் அம்மாவுக்குத் திருமணம் ஆனது. சிறு வயதில் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டதால் அவர்கள் இருவருக்கும் என் அம்மா மீது ஈர்ப்பு அதிகம்.

இப்படியாக வாழ்க்கை சென்றுகொண்டிருக்க எனக்கு ஏழு வயதிருக்கும் போது அப்பா அம்மா இருவரும் சீர்காழியில் பணி செய்து வந்ததால் அங்கு வசித்து வந்தோம். ஒரு திருமண நிகழ்ச்சிக்காக அம்மாவுடன் நானும் என் தங்கையும் தம்பியும் சென்னை வந்தோம். அப்பாவுக்கு டிபார்ட்மென்ட் தேர்வு இருந்ததால் அதை முடித்துக்கொண்டு மறுநாள் வருவதாக ஏற்பாடு. நாங்கள் சைதாப்பேட்டை பெரியம்மாவின் வீட்டில் தங்கினோம்.

ஒருநாள் என் அம்மாவும் என் பெரியம்மாவின் மகனும், மகளும் ‘டாக்டர் வீட்டுக்குப் போகிறோம். சீக்கிரம் வந்துடுவோம். படுத்து தூங்கிடுங்கோ. பெரியம்மாவை படுத்தக் கூடாது’ என்று சொல்லி விட்டு செல்ல நான் வாசல் திண்ணையிலேயே அமர்ந்து கொண்டேன். அவர்கள் செல்லும் பாதையை பார்த்தபடி நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தேன். ஒன்பது ஒன்பதரை மணி ஆனதால் என் தங்கையும் தம்பியும் தூங்கி விட்டார்கள். என் பெரியம்மா ‘உள்ளே வாம்மா’ என்று அழைக்க, நானோ ‘அம்மா வரட்டும் அப்போதான் உள்ளே வருவேன்’ என சொல்லி படியில் சென்று அமர்ந்து கொண்டு அவர்கள் வரும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

பெரியம்மா திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டு தெரு வெளிச்சத்தில் பூ தொடுக்க ஆரம்பித்தார். நான் அவரிடம் ‘பெரிமா, அம்மா டாக்டர் வீட்டுக்குத்தானே போயிருக்கா…’ என்று ஏக்கமாக கேட்க  ‘ஆமாம். வந்துடுவா’ என சொல்லிவிட்டு பூ தொடுப்பதில் கவனமானார். நானோ சந்தேகமாக விடாப்பிடியாக என் கேள்விக்கணையைத் தொடர்ந்தேன். ‘பெரிமா, நான் அழவே மாட்டேன். சொல்லு… அம்மா டாக்டர் வீட்டுக்குத்தானே போயிருக்கா…’ என்று பாவமாக கேட்க ‘அழ மாட்டியே…’ என கேட்டார். ‘ம்ஹூம் அழவே மாட்டேன் சொல்லு…’ என்று பிடிவாதமாக கேட்க என் பெரியம்மா வார்த்தையை விட்டுவிட்டார்.  ‘சினிமாவுக்குப் போயிருக்கா… வருவதற்கு 12, 1 மணி ஆகும்… நீ வா தூங்கலாம்’ என்று சொன்னதுதான் தாமதம். என் கண்களில் கண்ணீர். உதட்டைப் பிதுக்கி கண்களைக் கசக்கி மாலை மாலையாய் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தேன். என் பெரியம்மா எத்தனையோ சமாதானம் செய்தும் நான் அழுகையை நிறுத்தவே இல்லை. படுத்துக்கொண்டும் அழுதுகொண்டே இருந்தேன்.

அந்த குடித்தனத்தில் இருக்கும் மற்ற குடித்தனக்காரர்களும் என்னை சமாதானப்படுத்தினார்கள். எதற்கும் அடங்காமல் அழுதுகொண்டே இருந்தேன். மூக்கும், கண்களும், முகமும் சிவக்க சிவக்க அழுதேன். மூக்கு ஜலதோஷத்தினால் அடைத்துக் கொண்டது. விக்ஸை தடவி விட்டார் என் பெரியம்மா. கொஞ்சம் மிரட்டினாள். அழுகை அதிகமானதே தவிர குறையவே இல்லை.

என் அழுகைக்கு மற்றொரு காரணமும் உண்டு. சிறு வயதில் அப்பாவை விட்டு பிரிந்திருக்க மாட்டேன். ஒரு நாள் இரண்டு நாள் அலுவலக வேலையாக வெளியூர் சென்றாலும் இரவு தூங்கும் போது அழுவேன். அம்மாதான் சமாதானப்படுத்துவார். அப்போதைக்கு சமாதானம் ஆவதைப் போல் இருந்துவிட்டு அம்மா தூங்கியவுடன் யாருக்கும் தெரியாமல் அழுவேன்.

அப்பாவை விட்டுப் பிரிந்திருந்தது, அம்மா என்னை ஏமாற்றிவிட்டு சினிமாவுக்கு சென்றது எல்லாமாக சேர்ந்துகொண்டு என்னை வாட்டி எடுத்தது.

லேசாக கண் அயர்ந்திருப்பேன் என நினைக்கிறேன். சினிமாவுக்கு சென்றவர்கள் பூனை மாதிரி சத்தமே இல்லாமல் நைஸாக வீட்டுக்குள் வந்தார்கள். நான் கண் விழித்துக்கொண்டு கத்தினேன் ‘ஏன் பொய் சொல்லிட்டுப் போன…’. அம்மா எத்தனையோ சமாதானம் செய்தும் அடங்கவே இல்லை. அம்மா பக்கத்தில் படுத்துக்கொண்டு ‘என்ன சினிமா’ என்றேன். ‘அண்ணன் ஒரு கோயில்’ என்றார்.  ‘கதையை சொல்லு’ என்றேன். அம்மா மூன்று மணி நேர சினிமாவை 10 நிமிடங்களில் சொல்லி முடித்துவிட எனக்கு வந்ததே கோபம். ‘சினிமா இவ்வளவுதானா… முழு கதையையும் சொல்லு’ என்று கோபமாக சொல்ல ‘ராத்திரி மெல்ல பேசு’ என அம்மா அதட்ட, ‘நீ ஏன் ஏமாத்திட்டு சினிமாக்கு போன’ என்று நான் சீற மாறி மாறி இப்படி பேசிக்கொண்டே இரவு கழிந்தது. இத்தனை அதகளத்திலும் என் தங்கையும் தம்பியும் எழுந்திருக்கவில்லை.

காலை எழுந்ததும் திரும்பவும் என் கோபம் விடாமல் தொடர, அந்த ஒண்டு குடித்தனத்தின் பின்பக்கம் ஒரு மாமி இருப்பார். நல்ல வாட்ட சாட்டமாக, நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு இட்டுக்கொண்டு, வாயில் வெற்றிலைப் பாக்கு போட்டுக்கொண்டு சத்தமாக பேசிக்கொண்டு… இப்படியான கெட் அப்பில் இருக்கும் அவர்தான் அந்தக் குடித்தனக்கார குடும்பங்களில் குழந்தைகள் அடம் பிடித்தால் பயம்காட்ட பயன்படுவார்.

அவரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு என்னை அலாக்காகத் தூக்கிக்கொண்டு கொல்லைப்புறத்தில் உள்ள கிணற்றடிக்குச் சென்றார். கிணற்றில் போட்டு விடுவேன் என மிரட்டினார். இப்போது பயத்தில் கைகாலை உதறி அழ ஆரம்பித்தேன். கிணற்றின் நடுவே என்னை அவரது இரண்டு கைகளாலும் குழந்தைகளை தாங்கிப் பிடிப்பார்களே அதுபோல பத்திரமாகப் பிடித்துக்கொண்டு கண்களை உருட்டி ‘கிணற்றில் போடட்டுமா… அழுகையை நிறுத்தறியா’ என மிரட்டிய காட்சிகள் என் நினைவில் இருந்து அகலவே இல்லை.

பொதுவாக நான் மிக மிக அமைதியான பெண். தொட்டால் சிணுங்கியும் கூட. வெகு சீக்கிரம் காயப்பட்டுவிடுவேன். சமாதானம் ஆக நேரம் ஆகும்.

தினம் தினம் விஸ்வரூப தரிசனம்!

மிக மென்மையான சுபாவம். அதிக நட்புகள் இல்லை. ஒதுங்கி நின்று கவனிக்கும் சிறுமியாக இருந்த என்னைப் பற்றி ஒருமுறை என் உடன் படிக்கும் மாணவியின் அம்மா ‘இப்படி வளர்க்காதீங்க பெண்ணை, பின்னாளில் ரொம்ப கஷ்டப்படுவா…’ என்று சொன்னபோது அம்மா சொன்ன ஒரு விஷயம் இன்றளவும் எனக்கு நினைவில் உள்ளது.

‘குழந்தைகள் வளர வளர அவங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு பாதை உருவாகும், அதை கண்டுபிடிச்சு அதில் அவங்க ஜமாய்ச்சுடுவாங்க. இப்பவே அவங்களை செதுக்கறேன், வளைக்கிறேன் அப்படின்னு ரொம்ப படுத்த வேண்டாம்… ஒரு குழந்தை ஜனிக்கும்போதே அதற்குத் தேவையான எல்லா விஷயத்தையும் சேர்த்துத்தான் கொண்டு வரும்…’

அம்மாவின் விஸ்வரூபம் அப்போது எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்கு சப்போர்ட்டாக பேசுவது மட்டும் புரிந்தது. இப்போது ஒவ்வொரு நாளும் விஸ்வரூப தரிசனம்தான்!

சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தவருக்கு ரத்த காயம்!

என் பத்து வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்தார் அப்பா. ஒவ்வொரு நாளும் அப்பாவுக்குத்தான் உடம்பில் ரத்த காயம் உண்டாகும். கற்றுக்கொண்ட எனக்கு ஒரு சிறு சிராய்ப்பு கூட இருக்காது. அத்தனை பாதுகாப்பாய் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுப்பார் அப்பா.

ஒருமுறை அப்பா என்னை மாயவரத்தில் இருந்து முளப்பாக்கம் என்ற கிராமத்துக்கு சைக்கிளில் அழைத்துச் சென்றார். சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவு இருக்கும். அப்பா தனி சைக்கிளில். நான் தனி சைக்கிளில். தாத்தா பாட்டி பெரியப்பாக்கள் அனைவரும் அந்த கிராமத்தில் தான் வசித்து வந்தனர். நான் சைக்கிள் ஓட்டி வந்ததை பார்த்த என் பாட்டி திருஷ்டி சுத்திப் போட்டு ‘இனிமேல் சாயங்கால வேளையில் இப்படி குழந்தையை சைக்கிள் ஓட்டி வரச் சொல்லாதே… ஒரு சமயம் போல இருக்காது. எல்லோர் கண்ணும் ஒன்றுபோல் இருக்காது…’ என்று சொன்னது இன்னமும் நினைவிருக்கிறது. அந்த கிராமத்தில் நான் சைக்கிள் ஓட்டி வந்ததை பலரும் வேடிக்கைப் பார்த்தனர். பாட்டி சொன்னது பலித்தது. வீட்டுக்கு வருவதற்குள் இரண்டு முறை தூரத்தில் வந்த பஸ்ஸைப் பார்த்து பயந்து கீழே விழுந்தேன். முட்டிக்காலில் சிராய்த்து ரத்தம் வந்தது. சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட பிறகு ஏற்பட்ட முதல் சிராய்ப்பு.

பின்னாளில் 18, 19 வயதில் கியர் வைத்த பைக் ஓட்டக் கற்றுக்கொடுத்தபோது ஒருமுறை ஆக்ஸிலேட்டர் அதிகமாகி தந்திக் கம்பத்தில் மோதியபோதும் பைக்குக்குத்தான் சேதாரம். எனக்கு ஒரு துளி அடி கிடையாது. ஆனால் கீழே விழுந்தது அவமானமாகிப் போய் போர்வைக்குள் சுருண்டு படுத்துக்கொண்டு என்னை அறியாமல் தூங்கிப் போன கதையெல்லாம் நடந்ததுண்டு.

பின்னால் சுற்றும் பள்ளி மாணவர்கள்!

ஏழாவது எட்டாவது படிக்கும்போது எங்கள் பள்ளிக்கு அருகிலேயே ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளியும் இருந்தது. எங்கள் பள்ளி விடும் நேரம் அந்த மாணவர்கள் கும்பலாக எங்கள் பள்ளி வாசலில் நின்று கொண்டு பெண்களை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருப்பார்கள். அப்போதெல்லாம் ஈவ் டீஸிங்கும் அதிகமிருந்தன. இதையெல்லாம் ஏன் பள்ளி நிர்வாகம் தட்டிக் கேட்கவில்லை என தெரியவில்லை.

பெரும்பாலும் அப்பாதான் எங்களை பள்ளி விட்டதும் சைக்கிளில் வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வார். மிக அரிதாகவே நாங்கள் நடந்து வர வேண்டி இருக்கும். பள்ளி முடிந்து அப்பா வந்து எங்களை அழைத்துச் செல்லும் வரை எனக்கு உள்ளுக்குள் உதறல்தான். ஒரு மாதிரி பயம் கவ்விக்கொள்ளும். கலவரமாக இருக்கும். ஆனால் அப்பா ஒரு நாளும் தாமதமாக வரவே மாட்டார்.

ஒருநாள் எங்கள் தெருவில் இருக்கும் மாணவிகளுடன் சேர்ந்து நடந்து வர வேண்டிய சூழல். நான் ஒருசில மாணவிகளுடன் சேர்ந்து நடந்து வந்துகொண்டிருந்தேன். அதுபோல கும்பல் கும்பலாக மாணவிகள் பலர் தங்கள் தோழிகளுடன் நடந்து வந்துகொண்டிருந்தனர்.

எல்லோர் பின்னாலேயும் மாணவர்கள் சைக்கிளில் மெதுவாக தள்ளிக்கொண்டும், ஓட்டிக்கொண்டும் ‘ஹோ’ என சப்தமிட்டபடி பெண்களை கேலியும் கிண்டலும் செய்து சிரித்தபடி வந்துகொண்டிருந்தார்கள்.

அந்த நொடி எனக்கு மிக அவமானமாக இருந்தது. பெண்ணாய் பிறந்ததுக்கு அவமானப்பட்ட தினம் அன்று. ஆனால் பின்னாளில் ஆண் பிள்ளைகள் அப்படி நடந்து கொள்வதற்கு அவர்கள்தான் வெட்கப்பட வேண்டும் என்றும், அவமானப்பட வேண்டும் என்றும் புரிந்தது.

என்னுடன் வந்துகொண்டிருந்த சக மாணவிகள் ‘இதெல்லாம் வழக்கமா தினமும் நடக்கிற விஷயம். என்னவோ புதுசு போல ஃபீல் பண்ணறா’ என்று எனக்கு சமாதானம் சொல்லும் விதமாய் தங்களுக்குள் சிரித்தனர்.

அவர்கள் வருத்தப்படாமல் சிரித்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் மீதும் கோபம் கோபமாக வந்தது.

வீட்டுக்கருகில் இருந்த தோழி!

அப்போது எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் என்னுடன் படிக்கும் ஒரு மாணவியின் வீடு இருந்தது. அவள் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவாள். அதனாலேயே, எனக்கிருந்த ஒரே நெருங்கியத் தோழி அவள்தான் என்றும் சொல்லலாம். நான் சுபாவத்திலேயே அமைதியாக இருப்பதால் அவள் என்னை விட என் அப்பா அம்மா தங்கை தம்பியிடம்தான் நிறைய பேசுவாள். நான் பேசவில்லை என்றாலும் தொந்திரவு செய்ய மாட்டாள். இதனாலேயே அவளை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அப்படி ஒருநாள் பேசும்போது மாணவிகளின்  பின்னால் சுற்றும் மாணவர்களைப் பற்றி சொல்லி வருத்தப்பட்டபோது அவள்  மிக கேஷூவலாக சொன்ன விஷயம் இன்னும் என்னால் மறக்கவே முடியவில்லை.

‘புவனா, பசங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க… இதுக்கெல்லாம் வருத்தப்படக் கூடாது… ஜாலியா எடுத்துக்கணும்…’

அவள் மிக ஜாலியான பெண். தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் திரைப்படத்தை அடித்துப் பிடித்து கூட்ட நெரிசலில் முட்டி மோதி முதல் நாள் முதல் ஷோவை அக்கம் பக்க வீட்டுப் பெண்களுடன் சென்று பார்த்துவிடுவாள். அதை பெருமையாக வந்து எங்களிடம் சொல்வாள். ஒரு தீபாவளி அன்று கூட்டத்தில் தியேட்டர் கும்பலில் அவள் தாவணி கிழிந்து விட்டதாகவும், ஆனால்தான் என்ன தலைவர் படத்த முதல் ஷோவில் பார்த்துட்டோம்ல என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.

அவள் குடியிருக்கும் வீட்டில் வீட்டின் உரிமையாளருக்கு மூன்று ஆண் பிள்ளைகள். அவர்கள் டீன் ஏஜ் பருவத்தினர். அவர்களை அவள் ‘அண்ணா, அண்ணா’ என அழைப்பாள். சைக்கிள் பின் சீட்டில் எல்லாம் உட்கார்ந்து கொண்டு செல்வாள். அதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் எனக்கெல்லாம் அவள் அதிசயப் பிறவி போல் தோன்றும்.

சாதாரண நாட்களில் சினிமாவுக்குச் சென்றால் என்னையும் அழைப்பாள். ஆனால் என் அப்பா அம்மாவே போகச் சொன்னாலும் நான் போக மாட்டேன். தியேட்டர், கோயில், கடை என எங்கு சென்றாலும் அப்பா அம்மாவுடன் தான் செல்வோம்.

அவள் அப்பா சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு நாங்கள் எட்டாவது படிக்கின்ற போது இறந்துவிட்டார். அதில் இருந்து அவள் மீது எனக்கு ஒரு சாஃப்ட் கார்னர். மனதுக்குள் கூட அவள் மீது கோபப்படவே மாட்டேன்.

ஆனாலும், என்னவோ ஆண் பிள்ளைகள் என்றால் பெண்கள் பின்னால் சுற்றியே ஆக வேண்டும் என்று சட்டம் இருப்பதைப் போல அவள் பேசியது மட்டும் எனக்கு ஒருமாதிரி அவமான உணர்வையே உண்டு செய்தது.

என் அப்பா அம்மா தான்  எங்களுடன் பேசிப் பேசி அந்த உணர்வில் இருந்து என்னை வெளிக்கொண்டு வந்தார்கள். யார் எப்படி இருந்தாலும் நாம் சரியாக இருக்க வேண்டும் என்று கற்றுத் தந்தார்கள். எங்களை ஒழுக்கமாக வளர்த்தார்கள். ஆண், பெண் பேதமின்றி என் தம்பிக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ அத்தனையும் எனக்கும், என் தங்கைக்கும் கிடைக்குமாறு பார்த்துக்கொண்டார்கள். அதே சமயம் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக இருக்கவும் கற்றுக்கொடுத்தார்கள்.

ஜாக்கிரதை, ஜாக்கிரதை!

எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும்போது எங்கள் அப்பா அம்மா எங்களிடம் தேர்வுத் தாளில் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பிக்காதீர்கள் என அறிவுரை சொன்னார்கள்.  அதற்கு நாங்கள் ‘ஏன்?’ என எதிர்கேள்வி கேட்டோம்.  அதற்கு அவர்கள், ‘தேர்வுத் தாளை திருத்துபவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும் இருப்பார்கள். அவர்களில் யாருக்கேனும் பிள்ளையார் சுழியைப் பார்த்து கோபம் வந்தால் மதிப்பெண் குறைய வாய்ப்புண்டு. இவ்வளவு ஏன் ஃபெயில் ஆக்கக் கூட வாய்ப்புண்டு’ என சொல்லவும்  உடனடியாக நாங்கள்  ‘அதற்காக நாம் ஏன் பயப்பட வேண்டும், நாமெல்லாம் கோழைகளா?’ என்றோம்.

அதற்கு என் பெற்றோர், ‘இப்போது நீங்கள் நன்றாக படிக்கும் வயது. ஏதேனும் காரணத்தால் படிப்பில் பின் தங்கி விட்டால் உங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும். யாருக்கும் பயனில்லா வாழ்க்கையாகிவிடும். இதுவே இப்போது கொஞ்சம் புரிந்து கொண்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் படித்து பெரியவர்கள் ஆன பிறகு உங்கள் அறிவாற்றலால் பலருக்கும் எல்லா விஷயங்களையும் புரிய வைக்க முடியும். புரிய வைக்க முடியாவிட்டாலும் உங்கள் அளவில் உங்களைச் சுற்றி நல்ல ஆரோக்கியமான சூழலை உருவாக்கிக்கொள்ள முடியும்…’ என்றனர்

இந்த பதிலுக்குப் பின்னால் எத்தனை பாதுகாப்புணர்வு, எத்தனை சூட்சுமம், எத்தனை கவலைகள், எத்தனை ஜாக்கிரதையுணர்வு… தங்கள் குழந்தைகளை பொத்திப் பொத்திப் பாதுக்காக்க எப்படியெல்லாம் போராடி இருக்கிறார்கள். அன்றல்ல, இன்றல்ல, இனிவரும் காலங்களிலும் பிள்ளை வளர்ப்பு என்பது சவாலாகத்தான் இருக்கும்போல!

மரவாடியில் கண்டெடுத்த ரூபாய் நோட்டுகள்!

அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். நானும் என் தங்கையும் தம்பியும் சேர்ந்தேதான் பள்ளிக்குச் செல்வோம். தெருவில் உள்ள அத்தனை பேரும் நாங்கள் ஒரே நேர்கோட்டில் வரிசையாக ஒழுக்கமாக நடந்து செல்லும் அழகை வியந்து எங்கள் பெற்றோரிடம் பேசுவார்கள். அப்பா பள்ளிக்குக் கொண்டு விட முடியாத பணி நாட்களில் நாங்கள் எங்கள் தெரு முனையில் இருக்கும் மரவாடி வழியாக நடந்து பள்ளிக்குச் செல்வோம். காரணம் டிராஃபிக் இருக்காது, பத்திரமாக பள்ளிக்குச் செல்லலாம் என்பதால் என் பெற்றோர் மரவாடி உரிமையாளர்களிடம் அனுமதி வாங்கி வைத்திருந்தனர்.

அப்படி ஒருநாள் மரவாடியைக் கடக்கும்போது ஐந்து ரூபாய் நோட்டு ஒன்று வழியில் கிடந்தது. நாங்கள் மூவரும் அதைப் பார்த்தோம். பிறகு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். பேசிக்கொள்ளவில்லை. அந்த ரூபாய் நோட்டை எடுக்கவும் இல்லை. வெகு இயல்பாய் அதைக் கடந்து சென்றோம். அந்த நோட்டை எடுத்து மரவாடி உரிமையாளர்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த வயதில் தோன்றவில்லை.

நமக்கு உரிமை இல்லாததை யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் எடுக்கக் கூடாது என்று எங்கள் பெற்றோர் சொல்லிக் கொடுத்ததை நூறு சதவிகிதம் பின்பற்றினோம்.

பைண்டிங் செய்வது எங்கள் சம்மர் கோர்ஸ்!

என் அம்மா நிறைய படிப்பார். அது இது என்றில்லாமல் எது கிடைத்தாலும் படிப்பார். மளிகை சாமான் கட்டி வரும் செய்தித்தாளைக்கூட விடமாட்டார், படித்துவிடுவார். சாப்பிடும்போதும் ஒரு கையில் ஏதேனும் ஒரு புத்தகம் இருக்கும். வாசித்துக்கொண்டே சாப்பிடுவார்.

இத்தனைக்கும் என் அம்மாவும் அப்பாவும் அந்த காலத்திலேயே இரவு பகல் என 24 மணிநேர சுழற்சி வேலையில் இருந்ததால்  மழை, பனி, புயல், வெள்ளம், தீபாவளி பொங்கல் எதுவாக இருந்தாலும் அலுவலகம் செல்ல வேண்டிய பொறுப்பான பதவியில் இருவருமே இருந்ததால் எந்தக் காரணத்தைச் சொல்லியும் விடுப்பு எடுத்து வீட்டில் தங்க முடியாது.

இப்படி இருவரின் உழைப்பையும் பார்த்து வளர்ந்ததால் எங்களுக்கு உழைப்பு என்பது வாழ்க்கையோடு விரும்பி இணைந்த ஒரு விஷயமாகவே மாறிப்போனது.

இவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் என் அம்மா படிப்பதை மட்டும் என்றுமே விட்டதில்லை. தேடித்தேடிப் படிப்பதில் அவரை மிஞ்ச முடியாது. தான் படித்ததில் பிடித்ததை கட் செய்து வைப்பார்.

விடுமுறை தினங்களில் அப்பாவுடன் அமர்ந்து அவற்றை எங்கள் கைகளால் பைண்டிங் செய்வதே அந்த நாளில் எங்கள் ‘சம்மர் கோர்ஸ்’. ஊசி, நூல், அட்டை, கம் சகிதமாக அப்பாவுடன் உட்காருந்து கதை பேசியபடி பைண்டிங் செய்வது செம ஜாலியாக இருக்கும்.

அப்பாவின் கதையை பேசியபடி!

அப்பா தன் இளமை காலத்தில் ‘விக்டரி கிங்’ என்ற புனைப் பெயரில் கதை, கவிதைகள் எழுதுவாராம். அது என்ன விக்டரி கிங்? அப்பாவின் பெயர் V. Krishnamurthy. அலுவலகத்தில் VK என சுருக்கமாக அழைப்பார்கள். VK என்ற இரண்டு எழுத்துக்கும் Victory King என புனைப்பெயர் வைத்துக்கொண்டாராம்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு படு சுவாரஸ்யமாக எங்கள் விடுமுறை தினங்கள் கடந்து செல்லும்.

காலையில் ஒன்பது மணிக்கு சாதம், குழப்பு, கூட்டு கறி என முழு சாப்பாடு சாப்பிட்டு விடுவோம். விடுமுறை தினங்களில் மதியம் சாப்பிட கொஞ்சம் படுத்துவோம். அதனால் அப்பா சாதத்தில் நெய்யையும், சூடாக ரசத்தையும் விட்டு மையப் பிசைந்து கைகளில் உருண்டை உருண்டையாக கொடுப்பார். அப்பாவைச் சுற்றி அமர்ந்து கொண்டு சாப்பிடுவோம். நெய் வாசனை, அப்பாவின் அன்பு எல்லாமாக சேர்ந்துகொண்டு அற்புதமாக இருக்கும் ரச சாதம். அப்பாவுக்கு அலுவலக தினம் என்றால் அம்மா கொடுப்பார்.

நூலகங்களில் உள்ளதைப் போன்ற புத்தக அலமாரி!

என் அம்மாவின் புத்தகங்களை சேகரிப்பதற்காக, சுவர் உயர மர பீரோ ஒன்றை செய்து சர்ப்ரைஸாக பரிசளித்தார் என் அப்பா. அதுபோன்ற அலமாரிகளை பொதுவாக நூலகங்களில் மட்டுமே பார்க்கமுடியும். அதில் மேல் பக்கத்தில் கதவு வைத்த சிறு சிறு ஷெல்ஃபுகள் இருக்கும். கீழ் பக்கத்தில் புத்தகங்களை நிறுத்தி அடுக்கி வைக்கும்படியான ஷெல்ஃபுகள் இருக்கும். அதை பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும். அண்ணாந்து பார்த்து அதிசயிக்காத நாட்களே இல்லை. எல்லோரும் வீடுகளில் நாய், பூனை என ஆசையுடன் வளர்ப்பதைப் போல நாங்கள் ஆசையாய் வளர்த்தது அந்த சுவர் உயர பீரோவை என சொல்லலாம். அதை பார்க்கப் பார்க்க அத்தனை பாசமாய் இருக்கத் தோன்றும்.

கோகுலம், ரத்னபாலா, அம்புலிமாமா, பாலமித்ரா போன்றவை எங்களை வளர்த்த புத்தகங்கள். இன்றும் அம்மா சேகரித்து எங்கள் கைகளால் பைண்டிங் செய்த சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை போன்றவை எங்கள் வீட்டு லைப்ரரியில் உள்ளன.

எழுத்தாளர், ஓவியர், கார்ட்டூனிஸ்ட்!

புத்தகங்களுடனேயே வளர்ந்ததால் எங்களுக்குள் இருந்த கிரியேடிவிடியும் வளர்ந்தது. வாசிப்பு கற்பனையின் உச்சத்தை எங்களுக்கு காட்டியது. எழுத்து, கார்ட்டூன், ஓவியம் என ஆளுக்கொரு துறையில் சிறப்புடன் இருக்கிறோம்.

நாங்களே எங்கள் கைகளால் பைண்டிங் செய்யும் புத்தகங்களில் உள்ள ஓவியங்களையும், எழுத்தையும், பெருந்தலைவர்களையும், விஞ்ஞானிகளின் சாதனைகளையும், அறிஞர்களின் சுயசரிதைகளையும் பார்க்கும்போதும் படிக்கும்போதும் அதுபோல நம் புகைப்படமும், நம் திறமை பற்றிய குறிப்புகளும், நம் சாதனைகளும் பத்திரிகைகளில் வெளிவர வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். நம் பெயரில் கண்டுபிடிப்புகள் ஏதேனும் வர வேண்டும் என்றும் கனவெல்லாம் கண்டிருக்கிறேன். அதுவே பின்னாளில் என் வயதில் பிறர் வியக்கும் பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் அசால்ட்டாக செய்ய முடிந்ததுக்கு அடிப்படைக் காரணம் என்றும் சொல்லலாம்.

உண்மையைச் சொல்லட்டுமா? சொந்தமாக ஐடி நிறுவனம் தொடங்கி, எங்கள் நிறுவன பிராண்டில் சாஃப்ட்வேர்களும் அனிமேஷன்களும் புத்தகங்களும் ஆப்களும் வெளிவருவதற்கும், என் பெயரையே காம்கேர் கே. புவனேஸ்வரி என்று ஐகானாக மாற்றியதற்கும் அடிநாதமாக அமைந்தது எதுவென்றால் சிறு வயதில் எனக்குள் ஏற்பட்ட வாசிப்பு பழக்கமே.

முதல் கதையே ‘செய்யும் தொழிலே தெய்வம்’!

‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பதற்கு ஏற்ப ‘என் திறமை எழுத்து’என்பதை 10 வயதில் கோகுலத்தில் வெளியான ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற கதை நிரூபித்தது.  அதன் பின்னர் அந்தத் திறமையை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட நான் அதையே என் மூச்சாகக் கொண்டு என் படிப்புடன் இணைத்து என் திறமையையும் வளர்க்கத் தொடங்கினேன்.

பள்ளி கல்லூரி முடிப்பதற்குள் அந்தந்த வயதுக்கேற்ப கதை கவிதை கட்டுரைகள் எழுதி அவை சாவி, கல்கி, கலைமகள், சுபமங்களா, விஜயபாரதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் வெளியானதுடன் விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுத் தந்தன.

என் தங்கை ஸ்ரீவி என்ற பெயரில் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தாள். என் தம்பி மயிலாடுதுறை ஸ்வாமி என்ற பெயரில் கார்ட்டூன்கள் வரைய ஆரம்பித்தான். அனைத்தும் விகடன், சாவி போன்ற முன்னணி பத்திரிகைகளில் வெளியாகி நல்ல பெயரையும் புகழையும் உருவாக்கிக் கொடுத்தன.

திறமை கொடுக்கும் பரவச உணர்வு!

ஒவ்வொரு முறை கதை கவிதை கட்டுரை பத்திரிகைகளில் வெளியாகும்போது பள்ளியில் நான் ஒரு ஹீரோயின் அந்தஸ்த்தை பெறுவதைப் போல இருக்கும். எல்லோரும் என்னையே பார்ப்பதைப் போலவும், என் எழுத்தைப் பற்றி பேசுவதைப் போலவும் நானே நினைத்துக் கொள்வேன். சுருங்கச் சொன்னால் ஒரு மாதிரி பெருமையாக இருக்கும்.

என் படைப்பு பிரசுரமாகும் பத்திரிகை வெளிவரும் நாளுக்கு முதல்நாள் எனக்கு தூக்கமே வராது. அக்கம் பக்கம் எல்லோரும் என்னை பாராட்டுவதைப் போலவும்,  ‘ஆஹா சூப்பரா இருக்கே, எனக்கெல்லாம் எழுத வராதுப்பா’ என சக மாணவிகள் பேசிக்கொள்வதைப் போலவும், ஆசிரியர்கள் எல்லோர் முன்னிலையிலும் என் கதையை வாசித்துக் காட்டுவதைப் போலவும், ப்ரேயரில் என்னை மேடைக்கு வரச் செய்து கை தட்டச் சொல்வதைப் போலவும் கனவுபோல தோன்றும். ஆனால் நடப்பது என்ன தெரியுமா?

கதை பிரசுரமான பத்திரிகையை அப்பா வாங்கி வந்து கொடுப்பார். நானும் பெற்றோரும் உடன் பிறந்தோரும் படிப்போம். அவ்வளவுதான். அந்தக் கதை வந்திருப்பதாக என் பெற்றோர் அவர்கள் அலுவலகத்தில் சொல்வதால் அவர்களுக்குத் தெரியும். மற்றபடி அக்கம் பக்கம், ஆசிரியர்கள், சக மாணவிகள் இப்படி யாருமே அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாதது பெருத்த ஏமாற்றமாக இருக்கும். விரக்தியில் சிடுசிடுவென எல்லோரிடமும் எரிந்து விழுவேன்.

என் அப்பா அம்மாவும் எங்களுடன் இது குறித்தெல்லாம் நிறைய பேசுவார்கள். ஒரு விஷயம் குறித்தே தொடர்ச்சியாக அதீதமாக நினைத்துக்கொண்டிருந்தால் ஒருவேளை அது நடக்கவில்லை என்றால் மிகவும் சோர்ந்துவிடுவோம். எனவே அந்தந்த காலகட்டத்தில் என்னென்ன நடக்கிறதோ அந்த சூழலுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். அதே சமயம் நமக்கான உறுதியான கொள்கைகளுடன் நேர்மையாகப் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள்.

ஆனாலும் ஒவ்வொரு முறை என் படைப்பு பிரசுரமாகும் தினத்துக்கு முதல்நாள் எனக்கு தூக்கமே வராது. என்ன இருந்தாலும் சின்னக் குழந்தை தானே. ஒரு பக்கம் அப்பா அம்மாவின் அறிவுரைகளை கேட்டுக் கொண்டாலும், மறுபக்கம் இளம் மனம் அங்கீகாரத்தையும் பாராட்டையும் எதிர்பார்த்து ஏங்கும்.

பின்னாளில் எல்லா விஷயங்களிலும், நம்முடைய வெற்றிகளுக்கு பிறர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்கின்ற என் மனநிலையை மாற்றி, எனக்குள் நானே அந்த மகிழ்ச்சியை கொண்டு வந்தேன். எனக்குள் என்னுடைய செயல்பாடுகள் பூரணத்துவத்தை ஏற்படுத்துவதை உணர ஆரம்பித்தேன். புறத்தில் இருந்து வருகின்ற மகிழ்ச்சியைவிட அகத்தில் நிறைவடையும் உன்னத மனோநிலையை மிக சிறிய வயதிலேயே பெற்றேன்.

எங்கள் பெயரில் ரப்பர் ஸ்டாம்ப்!

என் திறமை எழுத்து என்றால் என் தங்கைக்கு ஓவியம், தம்பிக்கு கார்ட்டூன். அப்போது என் அப்பா, எங்கள் பெயருக்காகவும் வீட்டு முகவரிக்காகவும் ரப்பர் ஸ்டாம்ப் செய்து கொடுத்து நாங்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பும் படைப்புகளில் ரப்பர் ஸ்டாம்ப்பினால் பெயரையும் முகவரியையும் அச்சடித்து அனுப்பும் வழக்கத்தை உண்டாகினார்.

பிரம்ம முகூர்த்த விழிப்பு!

என் சக மாணவிகள் பரிட்சைக்கு இரவு 2 மணி வரை படிப்போம் என்பார்கள். ஆனால் எனக்கோ சாதாரண நாட்களில் இரவு 8.30 மணிக்கே தூக்கம் கண்களை சுழற்றும். பரிட்சை என்றால் கேட்கவே வேண்டாம் 8 மணிக்கே தூக்கம் வந்துவிடும்.

பொதுவாகவே நான் விடியற்காலை இரண்டு மணி மூன்று மணி என எழுந்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். நான் மட்டும் அல்ல என் தங்கை தம்பிக்கும் இதே பழக்கம்தான். மூவருமே வாய் விட்டு படிப்போம். அதனால் படிக்கும்போது ஒருவருக்கொருவர் கிளாஷ் ஆகும். ‘மெதுவா படி’ என ஒருவருக்கொருவர் திட்டிக் கொள்வோம். கொஞ்சம் சண்டையும் வரும். அதனால் ஒருவர் படுக்கையில் உட்கார்ந்து படித்தால் ஒருவர் சமையல் அறையிலும், மற்றொருவர் வாசல் திண்ணையிலும் படிக்க வேண்டும் என உடன்பாடு ஏற்படுத்திக்கொடுத்தனர் என் பெற்றோர்.

இரவே டிகாஷன் போட்டு வைத்துவிடுவார் அப்பா. அப்போதெல்லாம் ஃப்ரிட்ஜ் கிடையாது என்பதால் ஆளுக்கொரு டம்ளரில் பாலையும் எடுத்து வைத்துவிடுவார். நாங்கள் காலையில் எழுந்ததும் சூடாக காஃபி குடித்துவிட்டு தெம்பாக படிக்க ஆரம்பிப்போம்.

நினைவு தெரிந்த நாளில் இருந்து தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து 5 மணிவரை எழுதுவேன். அதன்பின்னர் 1 மணிநேரம் தூங்கி எழுந்து படிப்புக்கு நேரம் ஒதுக்குவேன். பள்ளிக்காலத்தில் இருந்து ஆரம்பித்த இந்தப் பழக்கம்  கல்லூரி முடிக்கும்வரை என் தினசரி வழக்கமாகிப் போனது.

வீட்டுக்கு வெளியே நான் மிக மிக அமைதியான பெண். வாயைத் திறந்து பேசுவதற்கே காசு கொடுக்க வேண்டும். இதனால் என் நட்பு வட்டமும் மிகச் சிறியது. ஆனால் வீட்டுக்குள்தான் அட்டகாசங்கள் எல்லாம். அப்பா அம்மாவிடம் தான் என் கோபம், விருப்பு, வெறுப்பு, சண்டை எல்லாமே. வீட்டுக்கு வெளியே நடக்கும் அத்தனை விஷயங்களையும் இம்மி பிசகாமல் அவர்களுடன்தான் பகிர்ந்துகொள்வேன். இப்படி வெளியே அதிகம் பேசாததாலோ என்னவோ எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். அத்தனையும் உள்ளுக்குள் சென்று உள் வலிமையை செதுக்கியது. அவை எழுத்தாகவும் வடிவமானது.

அன்றாடம் பள்ளியில் கிடைக்கும் அனுபவங்களை கற்பனை கலந்து சுவையாக எழுதுவேன். இறுதியில் அது கதையாகவோ, கட்டுரையாகவோ அல்லது கவிதையாகவோ ஏதேனும் ஒரு வடிவில் வந்துநிற்கும். பின்னர் அதை சுயமுகவரியிட்ட கவருடன் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பேன். பெரும்பாலும் திரும்பி வரும். திரும்பி வருகின்ற படைப்புகளை மேம்படுத்தி சளைக்காமல் மறுபடியும் அனுப்புவேன். இதுவே என் சுவாரஸ்யமான ரொட்டீனாக இருந்தது.

போஸ்ட் பாக்ஸ் கொடுத்த சுகானுபவம்!

தினமும் பள்ளியில் இருந்து திரும்பும்போது போஸ்ட் பாக்ஸில் ஏதேனும் வந்திருக்கிறதா என பார்ப்பது ஒரு சுகமான அனுபவமாக அமைந்தது. ஒன்று படைப்புகள் திரும்ப வந்திருக்கும் அல்லது படைப்புகள் பத்திரிகையில் அச்சில் வந்திருக்கும். இரண்டில் ஒன்று நிச்சயம். அதுவே என் சுவாரஸ்யம். பொழுதுபோக்கு. அன்றாடப் பணிகளுள் ஒன்று.

டேப் ரெகார்டரில் நாடகங்கள்!

பள்ளி நாட்களில் எங்கள் பொழுதுபோக்குகளில் ஒன்று டேப்ரெகார்டரில் நாடகங்கள் ரெகார்ட் செய்வது. விடுமுறை தினங்களில் நானும் என் தங்கையும் தம்பியும் சேர்ந்து நாடகங்களுக்கான கதைகள் எழுதி ஆளுக்கொரு கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து அபிநயத்துடன் பேசி நடித்து ரெகார்ட் செய்வோம். எங்கள் மூவருக்குமே கர்நாடக இசையில் பயிற்சி உண்டு என்பதால் வீட்டில் ஹார்மோனியப் பெட்டி இருந்தது. இடையிடையே பாடல்கள் சேர்க்க முடிந்தது. தம்பிக்கு மோர்சிங், மிருதங்கம் என கூடுதலாக இசைப் பயிற்சி இருந்ததால் இடை இடையே மியூசிக் சேர்ப்பதில் பிரச்சனை இல்லை. ஆக மொத்தம் நாங்கள் தயாரிக்கும் நாடகங்கள் நிஜமாகவே பயிற்சி பெற்ற வானொலிக் கலைஞர்கள் முறையாக தயாரிக்கும் நாடகங்கள் போலவே அமைந்தன.

பல ஊர்கள், பலதரபட்ட அனுபவங்கள்!

எங்கள் பெற்றோரின் பணி இட மாற்றல் காரணமாக நிறைய ஊர்களில் வசிக்கும் வாய்ப்பு. கோயம்புத்தூர், பல்லடம், விருதாச்சலம், கடலூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், பெங்களூர், திருச்சி, சென்னை என அந்தப் பட்டியல் கொஞ்சம் பெருசுதான். நிறைய ஊர்கள், வித்தியாசமான சூழல்கள், பலதரப்பட்ட மனிதர்கள், விதவிதமான நல்ல அனுபவங்கள் அத்தனையும் என்னை நித்தம் புதுப்பித்துக்கொண்டே இருந்தன என்று சொல்லலாம்.

கற்பனை வளமும் ஆக்க சக்தியும் சதா என்னுள் தளும்பிக்கொண்டே இருப்பதற்கு அவையெல்லாம்கூட ஒரு காரணம்.  பல ஊர்களில் வசித்ததாலோ என்னவோ எனக்கு ஒரு குறிப்பிட்ட ஊர் மீது தனியாக பாசம் இருந்ததே இல்லை. எந்த ஊரில் வசிக்கிறோமோ அந்த ஊர் எனக்குப் பிடித்துப் போகிறது. இந்த ஊர்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றெல்லாம் எந்த ஊரையும் சொல்ல முடிவதில்லை. ஓடிக்கொண்டிருக்கும் நதி தான் செல்லும் இடங்களை எல்லாம் புனிதப்படுத்திக்கொண்டு ஓடுவதைப் போல நாங்கள் பயணித்த வசித்த ஊர்களை எல்லாம் எங்களுக்குப் பிடித்துப் போனது.

என் நட்பு வட்டம்!

நான் அமைதியாக இருப்பதாலோ என்னவோ கொஞ்சம் வெகுளித்தனம் அதிகமாகவே இருக்கும். அதை  பால் வடியும் முகம் அப்பட்டமாகக் காட்டிக்கொடுக்கும். எனக்கு பெரிய அளவில் நட்பு வட்டம் கிடையாது. உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேனே. சக மாணவிகள் அவர்களின் வயதுக்கேற்ப ஜோக் அடித்து பேசிக்கொண்டிருப்பார்கள். நான் சென்றால் ஏதோ சைகை மொழியில் கண்களால் பேசி தாங்கள் பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தை அப்படியே பாதியில் நிறுத்திவிடுவார்கள். பொதுவான சப்ஜெக்ட் எடுத்து பேசுவார்கள். அவர்களைப் பொருத்தவரை நான் குழந்தை. வெகுளி. அப்பாவி.

கோபம் கூட வருமே!

நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்த சமயம், அதே பள்ளியில் என் தங்கையும் தம்பியும் நான்காவதும், மூன்றாவதும்.

என் அப்பாதான் தினமும் எங்களை பள்ளிவிடும் நேரம் வந்து எங்களை வீட்டுக்கு சைக்கிளில் அழைத்துச் செல்வார். முன்னால் என் தம்பி. பின்னால் நானும் என் தங்கையும். இத்தனைக்கும் வீடு பள்ளிக்கு அருகில்தான் என்றாலும் மிகவும் பாதுகாப்பாக வளர்த்தனர் என் பெற்றோர்.

ஒரு வாரம் அப்பா அலுவலக வேலையாக வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், எங்களை பத்திரமாக வீட்டுக்கு வரச்சொல்லிப் பழக்கினார்.

முதல்நாள் நாங்கள் மூவரும் பள்ளி விட்டதும் சாலை ஓரமாக நடந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தோம். என் தம்பியின் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன் தெருமுனையில் ‘கேங்காக’ நின்றுகொண்டு என் தம்பியை வம்பிழுத்தான். கேலியாக பேசினான். கொஞ்சம் கையையும் நீட்டினான்.

சுபாவத்திலேயே அமைதியான எனக்கு அன்று அந்த நிகழ்வு பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது. அடுத்த நாளும் அப்படியே செய்தான் அந்த மாணவன். நாங்கள் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிச் சென்றோம்.

மூன்றாம் நாள் எனக்கு வந்ததே கோபம். அந்த சிறுவனின் கையை இழுத்து முதுகில் நான்கு அடி கொடுத்தேன். எனக்கோ ஆச்சர்யம். ‘நானா அடித்தேன்’ என வியப்பாக இருந்தது அந்த மாணவனும் அவன் நண்பர்களும் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை. ஓடி விட்டார்கள்.

ஆனாலும் எனக்குள் உதறல்தான். பிறகு வீட்டுக்கு வந்து அப்பா அம்மா அலுவலகத்தில் இருந்து வரும் வரை பயத்துடனேயே இருந்தேன். பயத்தில் ஜுரமே வந்துவிட்டது. அவர்கள் வந்ததும் நடந்ததை ஒப்பித்தவுடன்தான் நிம்மதியானது.

அடுத்தடுத்த நாட்கள் அந்த சிறுவர்கள் எந்த பிரச்சனையும் செய்யவில்லை. இப்போது அந்த சிறுவன் என் தம்பியின் நண்பன்.

நமக்குத் தேவையான அளவுக்கு உடல் வலிமையும், மன வலிமையும் இயற்கையாகவே நமக்குள் பொதிந்துவைக்கப்பட்டிருக்கும். எல்லா நேரங்களிலும் அவற்றை வெளிப்படுத்தத் தேவை இருக்காது. தேவையானபோது  அவை தானாகவே நமக்குள் இருந்து பீறிட்டு வெளிவரும். இப்படித்தான் இயற்கை நம்மை தகவமைத்துக்கொள்ளும் வகையில் படைத்துள்ளது என்பதை பின்னாளில் நான் உணர்வதற்கு இந்த சம்பவமும் ஒரு காரணம்.

உங்க அண்ணாவா?

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பணிநிமித்தம் அடிக்கடி இடமாற்றம் இருக்கும். எங்களை பள்ளியில் பத்திரமாகக் கொண்டுவிட்டு அழைத்து வருவதற்கு வசதியாக வீட்டுக்கு அருகில் இருக்கும் நல்ல பள்ளியில் சேர்ப்பார்கள். பெரும்பாலும் நான் படித்தது அரசுப் பள்ளிகளில்தான்.

இப்படி தினமும் அழைக்க வரும் அப்பாவைப் பார்த்து என்னுடன் படிக்கும் நண்பர்கள் ‘இவர் உன் அண்ணாவா?’ என கேட்பார்கள். ‘இல்லையே, எங்கப்பா’ என்பேன். அப்பா இளமையாக இருப்பது என மகாப் பெருமை.

அரசுப் பள்ளியில் Self Service Purcahse!

நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்தபோது அந்த அரசுப் பள்ளியில் Self Service Purchase என்ற புதுமையான ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

பள்ளியில் சாக்லெட், கமர்கட், கடலை மிட்டாய், பேப்பர், பேனா, பென்சில் போன்றவற்றை விற்பனை செய்யும் அங்காடி ஒன்றைத் திறந்தார்கள். பொருட்களின் விலையை அதன் அடியிலேயே ஒட்டியிருப்பார்கள்.

அங்கு ஒரு உண்டியலையும், நோட்டையும் வைத்திருப்பார்கள்.

மாணவிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப பொருட்களை தாங்களாகவே எடுத்துக்கொண்டு அதற்கான விலையை உண்டியலில் போட்டு விட வேண்டும். என்ன பொருளை எத்தனை எடுக்கிறார்கள் என்பதை மட்டும் அந்த நோட்டில் குறித்துவிட வேண்டும்.

மாணவிகளிடம் சுய கட்டுப்பாட்டையும், சுய ஒழுக்கத்தையும் கொண்டு வரவேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இத்தனைக்கும் அப்போதெல்லாம் சிசிடிவி கேமிராவெல்லாம் கிடையாது. அந்த அங்காடியில் வருவோர் போவோரை கண்காணிக்கவும் விற்பனைப் பணியாளர்கள் யாரையும் நியமிக்கவும் இல்லை.

அந்த வயதில் அந்தத் திட்டத்தின் பயன் அத்தனை வியப்பாக இல்லை. ஆனால் அந்தத் திட்டம் எந்த அளவுக்கு மாணவ மாணவிகள் நேர்மையாக இருப்பதற்கு கற்றுக்கொடுத்தது என்பதை இன்றும் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

அழகான கையெழுத்துக் கற்றுக் கொடுத்த ஆங்கிலம்!

சிறு வயதில் இருந்தே என் கையெழுத்து மிக அழகாக இருக்கும். அதனால் ஆறாவது படிக்கும்போதில் இருந்தே என் அப்பா தன் அலுவலகத்துக்குத் தேவையான கடிதங்களை, ஆவணங்களை ஆங்கிலத்தில் சொல்ல சொல்ல நான் எழுதித் தருவேன். அப்பாவின் ஆங்கில புலமை எனக்குள்ளும் இறங்கியது இப்படித்தான். இலக்கணப் பிழை இன்றி ஆங்கிலத்தில் வாக்கியங்கள் அமைப்பது எனக்கு மற்றவர்களைவிட கைவந்த கலையானது.

பூ ஒன்று புயலானது!

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே பிரைவேட்டாக இந்தி கற்றுக்கொண்டிருந்தேன். ஒருநாள் எனக்கு வகுப்பெடுக்கும் இந்தி மாஸ்டர் வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றி குறைவாகப் பேச மாணவர்களும் கைத்தட்டி சிரித்தனர்.

வங்கியில் பணத்தை எண்ணும் ஆண் கேஷியர் லாவகமாக எண்ணுவதையும், பெண்கள் மெதுவாக எண்ணுவதையும் கிண்டல் செய்தார். மேலும் பெண்கள் வேலைக்குச் செல்வதே மாதம் ஒரு புடவை வாங்கவும், வருடம் புது நகை வாங்கவும்தான் என்றும் ஏதேதோ சொல்லிக்கொண்டே போனார்.

வாயைத் திறந்து பேசவே பயப்படும் மென்மையான சுபாவம் உள்ள அந்த வயதில் எனக்கு எங்கிருந்துதான் கோபம் வந்ததோ தெரியவில்லை.

‘பெண்கள் புடவை, நகைக்காக ஒன்றும் வேலைக்குச் செல்லவில்லை… அவர்களுக்கும் எய்ம் இருக்கிறது…’ என்று அந்த வயதுக்குரிய மொழியில் சற்றே குரலை உயர்த்திச் சொல்ல இந்தி மாஸ்டர் உட்பட மாணவர்கள் அத்தனைபேரின் கவனமும் என் மீதுதான்.

தைரியமாக சொல்லி விட்டேன், ஆனால் படபடப்பாக இருந்தது. நான் இப்படி சொன்னதால் என்னை ஆசிரியருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்றெல்லாம் பயந்தேன். ஆனால் அப்படியெல்லாம் பெரிதாக எதுவும் நடக்கவில்லை.

இந்தி பரிட்சையில் சாகசம்!

இந்தி பரிட்சையின் போது தேர்வு அறையில் அந்த நாட்களில் அவ்வளவு கண்டிப்பான மேற்பார்வை இருக்காது. எல்லோரும் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டே தேர்வு எழுதினார்கள். மேற்பார்வையாளர்களும் எதையும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நானோ காப்பி அடிப்பது குற்றம் என சொல்லிக்கொடுத்த பெற்றோர் பாடத்தை சிரமேற்கொண்டு செயல்படுத்தினேன். காப்பி அடிக்காமல் எனக்கு என்ன தெரியுமோ அதை மட்டும் எழுதினேன். இத்தனைக்கும் இந்தித் தேர்வுக்கு அப்படி ஒன்றும் பிரமாதமாக தயாராகவில்லை. சூப்பராகவும் தேர்வு எழுதவில்லை. ஆனால் காப்பி அடிக்கவில்லை. இதற்காக என்னை யாரும் என்னை கொண்டாடவில்லை. தலையில் தூக்கி வைத்துப் புகழவில்லை. ஆனால் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது. ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதைப் போல கம்பீரமாக இருந்தது. நேர்மையாக இருப்பது அத்தனை ஓர் உயரிய உணர்வை கொடுக்கும் என்ற தத்துவம் எல்லாம் அப்போது தோன்றவில்லை. ஆனால் நேர்மையாக இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று தோன்றியது.

அழகான ஏழாம் வகுப்பு டீச்சரின் ஆழமான வாழ்க்கைப் பாடம்!

ஏழாம் வகுப்புப் படிக்கும்போது ஒருநாள், எங்கள் அறிவியல் ஆசிரியர் ஒரு கேள்வியை எங்கள் முன் வைத்தார். அவர் மிக நேர்த்தியாக கம்பீரமாக புன்னகையுடன் அழகாக இருப்பார்.

“இன்று நான் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தபோது ஓர் இளைஞன் என்னை இடிப்பதுபோல மிக அருகில் வந்து ‘நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க’ என்று சொல்லி ஒன்றுமே நடக்காததுபோல நகர்ந்து சென்றான்” என்று சொல்லிவிட்டு “40 வயதான எனக்கே இந்த நிலை என்றால் உங்களுக்கும் இதே நிலை ஏற்படலாம்… அப்படி ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்…” என்ற கேள்வியைத்தான் எங்கள் முன் வைத்தார்.

ஒருசிலர் பதில் சொன்னார்கள். இறுதியில் அந்த ஆசிரியர் தான் செய்ததைச் சொன்னார். தைரியமாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

பிசியான தெரு வந்ததும் அந்த இளைஞனை சப்தமாக அழைத்தாராம். அவன் திரும்பிப் பார்ப்பதற்குள் அந்த சாலையில் சென்று கொண்டிந்தவர்கள் சலசலப்புடன் என்ன என்று வேடிக்கைப் பார்க்கத் தொடங்க அந்த இளைஞன் அந்த ஆசிரியர் அருகில் வந்து கொஞ்சமும் எதிர்பார்க்காதவாறு ‘சாரி டீச்சர்… தெரியாம பேசிட்டேன்’ என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்து சென்று விட்டானாம்.

இதுபோன்ற உண்மை சம்பவங்கள் வாழ்க்கை மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தின.

ஒரே நேரத்தில் Odd Man Out ஆகவும், Role Model ஆகவும்!

என்னுடைய பள்ளி நாட்களில் நிறைய சங்கடங்களை எதிர்கொண்டிருக்கிறேன். சக மாணவர்கள் மதிய நேரம் சாப்பிடும்போது ஒருவர் டிபன் பாக்ஸில் இருந்து அவர்களின் உணவை கைகளாலோ அல்லது அவர்கள் எச்சில் செய்து சாப்பிட்ட ஸ்பூனினாலோ எடுத்து அப்படியே மற்றவர்கள் சாப்பிடுவார்கள். ஒருவர் எச்சில் செய்ததை மற்றவர்கள் சாப்பிடக் கூடாது, நோய் தொற்று ஏற்படும் என்று எங்கள் வீட்டில் சொல்லிக்கொடுத்திருந்ததால் பள்ளியில் மதிய உணவு இடைவெளி வந்தாலே எனக்குள் ஒரு சிறு சங்கடம் ஒட்டிக்கொள்ளும். சக மாணவர்களுக்கு இதையெல்லாம் எப்படி புரிய வைப்பது அல்லது நான்  மட்டும் என்ன எடுத்துச் சொல்லி புரிய வைக்க பெரிய மனுஷியா என்ன? நானும் அந்த வயதில் சிறுமிதானே.

மற்றவர்கள் தாங்கள் சாப்பிடும்போது எச்சில் செய்ததை எனக்கு கொடுத்தாலும் வாங்க மாட்டேன். நானும் எச்சில் செய்து சாப்பிட்டதை அவர்களுக்குக் கொடுக்க மாட்டேன். நான் சாப்பிடுவதற்கு முன்னர் அவர்கள் டிபன் பாக்ஸ் மூடியில் எடுத்து கொடுத்துவிட்டே சாப்பிடுவேன்.

இப்படி செய்வது அவர்களுக்கு வினோதமாக இருந்தது. ஒருசிலர் நகைச்சுவையாக பேசுவதாக நினைத்து கிண்டலும் செய்திருக்கிறார்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும்.இதுபோன்ற நியாயமான விஷயங்களை கடைபிடித்ததால் (இன்றும் கடைபிடிக்கிறேன்) ஒரு கூட்டத்தில் பொருந்துவது என்பது சிக்கலான விஷயமாக இருந்தது.

அதனால் நானாகவே ஒதுங்கி தனியாக சாப்பிட ஆரம்பித்தேன். பத்து நிமிடங்களில் சாப்பிட்டு படிக்க உட்கார்ந்து விடுவேன். இதே சூழல்தான் கல்லூரி நாட்களிலும்.

அதுபோல எனக்கு நினைவு தெரிந்து பள்ளி நாட்களில் இருந்தே கர்சீஃப் பயன்படுத்துவேன். அதுவும் மாணவர்கள் மத்தியில் காட்சிப் பொருள். அவர்களுக்கு வியர்த்தால் என் கர்சீஃபை கேட்பார்கள். ஒருவர் பயன்படுத்தியதை பிறர் பயன்படுத்தக் கூடாது என்று அப்போதெல்லாம் பாடம் எடுக்கத் தெரியாது. ஆனால் ‘கொடுக்க முடியாது’ என்பதை மட்டும் எனக்குத் தெரிந்த மொழியில் சொல்லிவிடுவேன். ஒருநாள் பள்ளி ஆசிரியர் ஒருவரே என் கர்சீஃபை கேட்டு வாங்கி முகம் துடைத்துக்கொண்டு கொடுத்தார். அந்த அளவுக்குத்தான் விழிப்புணர்வு அந்த நாட்களில். அவர் தலை மறைந்ததும் அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டேன்.

அடுத்ததாக தண்ணீர் பாட்டில். நான் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டிலைத் தவிர வெளியில் எங்கும் தண்ணீர் குடிக்க மாட்டேன். சக மாணவர்களுக்கு அந்த தண்ணீர் பாட்டில் மீதே கண். தாகமாய் இருக்கிறது என கேட்டு வாங்கி குடிப்பார்கள். ஆனால் தூக்கிக்குடிக்க மாட்டார்கள். உதட்டில் வைத்து எச்சில் செய்தே சாப்பிடுவார்கள். நான் அந்த தண்ணீரை குடிக்க மாட்டேன். பல நாட்கள் நா வரட்சியோடு அழுதுகொண்டே வீட்டுக்கு வந்திருக்கிறேன்.

அதுபோல பிறந்தநாள் போன்ற விசேஷ தினங்களில் பிறந்தநாள் கேக்கை கத்தியால் வெட்டி, ஒரு கேக் பீஸை ஒருவர் மாற்றி ஒருவர் வாயில் எச்சில் செய்து சாப்பிடுவார்கள். அதுபோன்ற சூழலிலும் பெரும் சங்கடம் தான் எனக்கு. வேண்டாம் என மறுத்தால் அவர்களை அவமதிப்பதற்கு சமம். சாப்பிட்டால் உடல்நலனுக்குக் கேடு. என்ன செய்வது? அவர்கள் என்னிடம் கொடுப்பதை கைகளில் சிறிது விண்டு எடுத்துக்கொண்டு தூர எறிந்துவிடுவேன்.

பொதுவாகவே நான் பேசுவதைவிட கவனிப்பது அதிகம். இதனால் என் வயதுக்குறிய மாணவர்களுக்கு மத்தியில் என் நட்பு வட்டம் சுருங்கினாலும், என் ஆசிரியர்களின் கவனம் என் மீது விழத் தொடங்கியது. மேலும் சக மாணவ மாணவிகளின் பெற்றோர் மத்தியிலும் நான் அவர்கள் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகிப் போனேன்.

ஒரே நேரத்தில் Odd Man Out ஆகவும் Role Model ஆகவும் இருக்க முடியுமா என ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இருந்திருக்கிறேனே!

ஆனால் இன்று ‘கொரோனா’ உலகம் முழுவதும் சுத்தம் குறித்த விழிப்புணர்வை மிக அழகாக பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறதே.

பத்தாம் வகுப்பு கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடம்!

பத்தாம் வகுப்புப் படிக்கும்போது, பள்ளி ஆசிரியை ஒருவரின் சூழ்ச்சியினால் தமிழ், ஆங்கில மொழிப்பாடங்களைத் தவிர மற்ற 3 சப்ஜெக்ட்டுகளின் விடைத்தாளின் கடைசி மூன்று பக்கங்கள் குறுக்கே அடிக்கப்பட்டு, மாநிலத்தில் முதலாவதாக வர வேண்டும் என்ற என் கனவில் இடி விழுந்ததோடு, பள்ளியில்கூட முதலாவதாக வர இயலாமல் போனது. இத்தனைக்கும் வருடம் முழுவதும் நான்தான் வகுப்பில் முதல் ரேங்க்.

அன்று என் பெற்றோர் எடுத்த முடிவுதான் இந்த நிமிடம்வரை என்னை இயக்கும் தன்னம்பிக்கைக்கான வித்து.

இப்போதுபோல மதிப்பெண் மறுமதிப்பீட்டல் எல்லாம் அன்று அத்தனை சுலபமல்ல. ஆனால், எதற்கும் அஞ்சாமல் ரிசல்ட் வந்த அன்றே சென்னை வந்து பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் நடந்ததை உறுதி செய்துகொண்டோம். அந்த ஆசிரியை மீது புகார் கொடுக்க நீதித்துறையை அணுகினோம்.

நீதிபதி மிக நேர்மையாக  ‘இந்த கேஸில் பள்ளியின் முழு ஆதரவு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். எந்தப் பள்ளியும் தங்கள் பள்ளி ஆசிரியர் குறித்த வழக்கிற்காக உங்களுக்கு ஆதரவு கொடுத்து தேவையான ஆவணங்களைக் கொடுக்க மாட்டார்கள்… இது தற்காலிகப் பின்னடைவுதான்… +2 வில் நல்ல மதிப்பெண் எடுத்து வருங்காலத்தில் முன்னேற்றப் பாதையைத் தேடிச் செல்வது தான் புத்திசாலித்தனம்’ என அறிவுரை கூறி எங்களை ஊருக்கு அனுப்பி வைத்தார்.

வழக்கு போடவும் அது தொடர்பாக அலையவும் செலவு செய்யவும் நாங்கள் அப்படி ஒன்றும் பெரும் செல்வந்தர்கள் அல்ல. அப்பா அம்மா இருவரும் வேலைக்குச் சென்று என்னையும் என் தம்பி தங்கைகளையும் படிக்க வைத்து வளர்த்து ஆளாக்கும் நடுத்தர குடும்பப் பின்னணிதான். ஆனாலும் என் பெற்றோரின் துணிவுதான் எனக்குள் தன்னம்பிக்கையாக உருமாறி என்னை வழிநடத்துகிறது.

பதினைந்து வயதில் பத்தாம் வகுப்பில் ஏற்பட்ட இந்த அனுபவம் வாழ்க்கையில் எந்த நேரத்திலும் எதுவும் யாரால் வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உண்மையை எனக்குள் விதைத்தது.

‘நம்முடைய வெற்றிகளுக்கு நாம் மட்டுமே காரணம் அல்ல, நம் பெற்றோர், சகோதரன் சகோதரிகள் உட்பட ஒட்டுமொத்த குடும்பம், பள்ளிக்கூடம், ஆசிரியர்கள், நண்பர்கள், சமுதாயம் என எத்தனையோ காரணிகள் காரணமாக இருப்பதைப்போல நாம் சந்திக்கும் தோல்விகளுக்கும் மேலே சொன்ன காரணிகளில் எதுவோ ஒன்று காரணமாகலாம். அதனால் மனதை விட்டுவிடக் கூடாது’ என்று தன்னம்பிக்கை வார்த்தைகள் சொல்லி என்னை +1, +2 படிக்க வேறு பள்ளி மாற்றினார்கள். ஆனாலும் அந்த இரண்டு வருடங்களையும் மனச் சோர்வுடன்தான் கடந்து வந்தேன்.

டைப்ரைட்டிங் இயந்திரம்!

பத்தாம் வகுப்பு முடித்தபோது சக மாணவிகள் டைப்ரைட்டிங் வகுப்பும், ஷார்ட் ஹேண்டும் சேர்ந்தனர். ஒருநாள் அப்பா செகண்ட் ஹேண்டில் டைப் ரைட்டிங் மெஷின் வாங்கி வந்து சந்தனம் குங்குமம் பூ வைத்து பூஜை செய்து எங்களுக்குப் பரிசளித்தார். கூடவே டைப்ரைட்டிங் நோட்ஸும். வகுப்புக்குச் சென்று பயிற்சி எடுத்தவர்களைவிட மிக விரைவாகவும் சரியாகவும் டைப் செய்ய கற்றுக்கொண்டேன். அதற்கு ஒரு முக்கியக் காரணமும் உள்ளது.

கற்றுக்கொண்ட வித்தையை நேரடியாக பயன்படுத்த முடிகின்ற சூழல் ஏற்பட்டதே அதற்குக் காரணம்.

ஆம். அப்பாவுக்கு அலுவலக கடிதங்கள் மற்றும் டாக்குமெண்ட்டுகளை நான் டைப் ரைட்டிங் மெஷினில் டைப் செய்து கொடுக்க ஆரம்பித்தேன்.

இந்த டியூஷன் மாஸ்டர் வேண்டாம்!

+2 படித்த போது பயலாஜி, சுவாலஜி இரண்டு சப்ஜெக்ட்டுகளும் வேப்பங்காயை விட கசப்பாக இருந்தன. படிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன் என்று சொன்னால் அது பொய். அதிகமாகவே கஷ்டப்பட்டேன் அதுவே மெய். உயிரியலும் விலங்கியலும் சேர்ந்துகொண்டு இரட்டை நாயனம் வாசித்து என் உயிரை எடுத்தது. பார்டர் மார்க் வாங்கவே ததிங்கினதோம்.

அந்த இரண்டு சப்ஜெக்ட்டுகளுக்கு மட்டும் ஓர் ஆசிரியரிடம் டியூஷனுக்கு ஏற்பாடு செய்தார்கள். அவர் வீட்டைத் தாண்டித்தான் எங்கள் வீடு என்பதால் நித்தம் நாங்கள் யாருமே அவர் முகத்தில் விழிக்காமல் கடந்து சென்றுவிட முடியாது. நானோ எந்த ஒரு விஷயத்திலும் 100 சதவிகிதம் திருப்தி இல்லை என்றால் ஒத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ மாட்டேன். இவ்வளவு இக்கட்டையும் தெரிந்துகொண்டே அவரிடம் டியூஷனுக்கு ஏற்பாடு செய்தார் என் அப்பா என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அவருடைய மனோ தைரியத்தை.

அவர் தினமும் ஒரு டாப்பிக்கை மனப்பாடம் செய்யச் சொல்வார். பிறகு அதை அவரிடம் ஒப்பிக்கச் சொல்வார். இறுதியில் நோட்டில் எழுதிக் காண்பிக்க வேண்டும் என்பார். புரியும்படி சொல்லிக் கொடுக்க மாட்டார். அவருடைய டெக்னிக் மனப்பாடம் செய்ய வைப்பது.

ஆனால் எனக்கோ சப்ஜெக்ட்டே புரியாமல் மனப்பாடம் செய்வது அத்தனை கஷ்டமாக இருந்தது. அப்பாவிடம் ‘மனப்பாடம் செய்வதற்கு எனக்கு எதற்கு டியூஷன். நானே மனப்பாடம் செய்து கொள்வேனே… இனிமேல் டியூஷனுக்குப் போக மாட்டேன்’ என்று சொல்லி விட்டேன். அப்பாதான் பாவம், அந்த ஆசிரியரிடம் சென்று தகவல் சொல்லிவிட்டு வந்தார்.  ‘மகள் இனி டியூஷனுக்கு வர மாட்டாள்…’ என்று சொல்வது அத்தனை எளிதா என்ன? ஏன், எதற்கு என்று ஆயிரம் கேள்விக்கணைகளை எதிர்கொள்ள வேண்டும். அப்பாவோ பொய் சொல்ல மாட்டார். ‘மகளுக்கு நீங்கள் மனப்பாடம் செய்யச் சொல்வது பிடிக்கவில்லை’ என்று சொன்னால் அவர் என்ன குளுகுளுவென்று வழி அனுப்பி வைப்பாரா என்ன?

நம் உணர்வுகளை மதித்து அதற்காக கடினமான சூழல்களை எதிர்கொண்ட பெற்றோர் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமானது. அதற்காக அப்பா அம்மாவுடன் சண்டையே போட மாட்டேன் என்றெல்லாம் அர்த்தமில்லை. வெளி உலகில் உள்வாங்கும் அத்தனையையும் கொண்டு வந்து கொட்டுவது யாரிடம்? அப்பா அம்மாவிடம்தான்.

கை கொடுத்த தமிழ் மீடியம் புத்தகங்கள்!

அது சரி, பயாலஜி, சுவாலஜி என்ன ஆயிற்று என யோசிக்கிறீர்களா? சொல்கிறேன். எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தமிழ் மீடியம் படிக்கும் ஒரு மாணவி இருந்தாள். அவளிடம் பயாலாஜி, சுவாலஜி புத்தகங்களை வாங்கி, என்னுடைய புத்தகங்களில் உள்ள ஆங்கில பாடங்களுக்கு இணையான தமிழ் பாடங்களை ஒப்பிட்டு வார்த்தை வார்த்தையாக வரிவரியாக புரிந்துகொண்டேன். எல்லாவற்றையும் தெள்ளத் தெளிவாக ஏன் எதற்கு எப்படி என்ற அளவில் புரிந்து கொள்ள முடிந்தது.

அடுத்தடுத்து பள்ளியில் வைத்த தேர்வுகளில் அந்த இரண்டு சப்ஜெக்ட்டுகளிலும் 80 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற போது ஆசிரியர்களும், சக மாணவிகளும் ‘எங்கு டியூஷன் வைத்துள்ளாய்?’ என ஆச்சர்யமாகக் கேட்டார்கள். அந்த அளவுக்கு வேப்பங்காயாக இருந்த அந்த இரண்டு சப்ஜெக்ட்டுகளிலும் மதிப்பெண்களை அள்ளிக்குவிக்க ஆரம்பித்தேன்.

பள்ளி இறுதி பொதுத் தேர்விலும் அந்த இரண்டு சப்ஜெக்ட்டுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்றேன்.

+2 வில் இயற்பியல் ஆசிரியை சொல்லிக்கொடுத்த வாழ்வியல்!

நான் +2 படிக்கும்போது இயற்பியல் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் பெயர் கீதா. அவர் சாதாரண உயரம்தான். அவரது நடை, உடை, பாவனை  இவற்றில் பெரிய அலங்காரங்களோ, பிரத்யேக ஸ்டைலோ இருக்காது. ஆனால் அவரது உடல்மொழியில் ஒரு கம்பீரம் இருக்கும். பேச்சில் ஓர் ஆளுமை இருக்கும்.

அவரது முதல் வகுப்பிலேயே எங்களிடம் சொல்லிவிட்டார், ‘என் மீது பாசத்தைக் காண்பிக்க பூ, தின்பண்டங்கள், பரிசுப் பொருட்கள் இப்படி எதையும் எடுத்து வந்துகொடுக்கக் கூடாது.  ஏன் இவர் இப்படிச் சொன்னார் என அப்போது எனக்குப் புரியவில்லை.  பரிசுகள் கொடுத்து சாஃப்ட்கார்னரை ஏற்படுத்திக்கொண்டு அதன்மூலம் ப்ராக்டிகல் மதிப்பெண் பெறும் குறுக்குவழியைத் தடுக்கவே அப்படிச் சொல்லி இருக்கிறார் என்ற விஷயத்தை பின்னொருநாளில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

இவர் தனக்குக் குழந்தை பிறப்பதற்கு முதல்நாள்வரை பள்ளிக்கு வந்துகொண்டிருந்தார். குழந்தை பிறந்ததும் நாங்கள் அனைவரும் அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தோம். ஒரே மாதத்தில் மீண்டும் பள்ளிக்கு வந்துவிட்டார்.

அவர் எனக்கு இயற்பியலை மட்டும் கற்றுக்கொடுக்கவில்லை. தன்னம்பிக்கை, கம்பீரம், பெருந்தன்மை, வேலையின் மீதான ஈடுபாடு போன்ற அத்தனையையும் கற்றுக்கொடுத்தார்.

அம்மாவிடம் இருந்து ஆளுமையை கற்றோம்!

பெண்கள் அலுவலகங்களுக்குச் சென்று வேலைக்குச் செல்வது, அதுவும் இரவு பகல் என 24 மணி நேர பணி சுழற்சியில் இருப்பது என்பதெல்லாம் அந்த காலத்தில் மிக அரிது. எங்கள் அம்மா அந்த காலத்திலேயே எங்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தார்.

அலுவலக வேலையுடன் சேர்த்து தோட்ட வேலை, வீட்டு வேலை என எதையுமே விட்டுக் கொடுத்துக்கொள்ள மாட்டார். சாப்பாடுக்குத் தேவையான காய்கறிகள், பூஜைக்கு அவசியமான பூக்கள் என எதுவெல்லாம் நாங்கள் குடியிருக்கும் வீட்டில் சாத்தியமோ அதுவெல்லாம் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் அம்மாவின் கைவண்ணத்தில். சமையலுக்கு வேண்டிய பொடிவகைகள், வடாம் வகைகள், தின்பண்டங்கள் என அத்தனையும் வீட்டிலேயே தயார் செய்வார்.

உதிரும் தலைமுடியையும் விட்டு வைக்க மாட்டார். அவற்றை சேகரித்து விக்கெல்லாம் கூட தயார் செய்வார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

தீபாவளி, பொங்கல், மழை, வெயில், புயல் என எல்லா நாட்களும் வேலைக்குச் செல்ல வேண்டிய பொறுப்பான பணியில் சுறுசுறுப்பாக இயங்கிய எங்கள் அம்மாவிடம் இருந்து ஆளுமையை கற்றுக்கொண்டோம்.

அப்பாவிடம் இருந்து பாதுகாப்புணர்வைப் பெற்றோம்!

அந்த காலத்தில் ஆண்கள் சமையல் செய்தாலோ அல்லது துணி துவைத்தாலோ அவர்களை ‘பெண்டாட்டிதாசன்’ என கிண்டல் செய்வார்கள். அப்படித்தான் பத்திரிகைகளிலும் ஜோக்குகள் என்ற பெயரில் வெளியாகும். அந்த மாதிரியான சூழலில் சமையல் வேலை, பாத்திரங்கள் தேய்த்தல், துணி துவைத்தல், வீடு பெருக்குதல், எங்களை பள்ளிக்குத் தயார் செய்தல் என அத்தனை வேலைகளையும் முகம் சுளிக்காமல் ஈடுபாட்டுடன் கலைநயத்துடன் செய்த என் அப்பாவிடம் இருந்து பரந்த மனப்பான்மையையும், எந்த வேலையும் கேவலம் இல்லை, ஆணுக்கான வேலை, பெண்ணுக்கான வேலை என்ற பாகுபாடில்லை என்ற உயரிய பாடத்தைக் கற்றுக்கொண்டோம்.

எங்களை பள்ளிக்குக் கொண்டுவிட்டு அழைத்துக்கொண்டு வருதல், பாடம் சொல்லிக்கொடுத்தல் என எங்கள் அத்தனை தேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்ததோடு எங்கள் படைப்பாற்றலை கண்டுகொண்டு எங்களை ஊக்குவித்தல் என  எங்களை உள்ளங்கையில் வைத்துத் தாங்கிய அப்பாவிடம் இருந்து பாதுகாப்பு உணர்வை திகட்டத் திகட்டப் பெற்றுக்கொண்டோம்.

அப்பா ஒரு சர்வகலா வல்லவர். எலக்ட்ரிகல் வேலை, மர வேலை, என அனைத்தையும் செய்வார். எங்களுக்கும் அதையெல்லாம் கற்றுக்கொடுத்தார்.

சைக்கிள் ஓட்டக் கற்றுகொடுத்தபோது சைக்கிளில் செயின் அறுந்து போனால் அதை நாங்களே மாட்டி சரிசெய்வது முதற்கொண்டு சைக்கிளில் ஏற்படும் சின்ன சின்ன பழுதுகளை நாங்களே சரி செய்ய பழக்கினார்.

இருவருமே பணிக்குச் செல்வதால் எங்களை சுயசார்புடன் செயல்பட கற்றுக்கொடுத்தனர். எங்கள் வேலைகளை நாங்களே செய்யப் பழக்கினர். இதன் காரணமாய் அசாத்திய தன்னம்பிக்கை எங்களுக்கு அஸ்திவாரமானது. இன்றுவரை எங்களை சரிவர இயக்குவதும் அது ஒன்றே.

இளமைப் பருவத்தில் அடி எடுத்து வைத்தேன்!

+2 விற்கு பிறகு அப்போதுதான் நம் நாட்டில் கல்வித்துறையில் அறிமுகமாகியிருந்த கம்ப்யூட்டர் சயின்ஸை பிரிவில் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்த்தார்கள். என் பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரிக் காலம் திருச்சியில் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் ஆரம்பமானது!

(குழந்தைப் பருவம் முற்றும்)

‘தி இந்து’ தமிழில் வெளியான கட்டுரையை பத்திரிகை இணையதளத்தில் வாசிக்க!

(Visited 34 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon