இப்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை கவனிக்கும்போது, சமுதாயத்தில் சவால்களாக இருக்கும் விஷயங்களில் முதலிடம் பிடிப்பது என்னவென்று யோசித்ததில் என் மனதில் முதலிடம் பிடித்த விஷயம் என்ன தெரியுமா?
குழந்தைகளை பாதுகாப்பாய் வளர்ப்பது!
நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஒரு அப்பா அம்மா, தங்கள் குழந்தைகளிடம் தேர்வுத் தாளில் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பிக்காதீர்கள் என அறிவுரை சொல்கிறார்கள். அவர்கள் ‘ஏன்?’ என கேட்கிறார்கள். அதற்கு அவர்கள், ‘தேர்வுத் தாளை திருத்துபவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும் இருப்பார்கள். அவர்களில் யாருக்கேனும் பிள்ளையார் சுழியைப் பார்த்து கோபம் வந்தால் மதிப்பெண் குறைய வாய்ப்புண்டு. இவ்வளவு ஏன் ஃபெயில் ஆக்கக் கூட வாய்ப்புண்டு’ என சொல்லவும் அந்தக் குழந்தைகள் ‘அதற்காக நாம் ஏன் பயப்பட வேண்டும், நாமெல்லாம் கோழைகளா?’
அப்போது அவர்களுக்கு பத்து பத்திரெண்டு வயதுதான் இருக்கும்.
அதற்கு அந்தப் பெற்றோர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
‘இப்போது நீங்கள் நன்றாக படிக்கும் வயது. ஏதேனும் காரணத்தால் படிப்பில் பின் தங்கி விட்டால் உங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும். யாருக்கும் பயனில்லா வாழ்க்கையாகிவிடும். இதுவே இப்போது கொஞ்சம் புரிந்து கொண்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் படித்து பெரியவர்கள் ஆன பிறகு உங்கள் அறிவாற்றலால் பலருக்கும் எல்லா விஷயங்களையும் புரிய வைக்க முடியும். புரிய வைக்க முடியாவிட்டாலும் உங்கள் அளவில் உங்களைச் சுற்றி நல்ல ஆரோக்கியமான சூழலை உருவாக்கிக்கொள்ள முடியும்…’
இந்த பதிலுக்குப் பின்னால் எத்தனை பாதுகாப்புணர்வு, எத்தனை சூட்சுமம், எத்தனை கவலைகள், எத்தனை ஜாக்கிரதையுணர்வு… தங்கள் குழந்தைகளை பொத்திப் பொத்திப் பாதுக்காக்க எப்படியெல்லாம் போராடி இருக்கிறார்கள் பெற்றோர்கள். அந்த பெற்றோர் வேறு யாருமில்லை, என் அப்பாம்மாவேதான்!
எல்லா காலங்களிலும் பிள்ளை வளர்ப்பு என்பது சவாலாகத்தான் உள்ளது!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 21, 2022 | வியாழன்