சின்னச் சின்ன சிந்தனைகள் (ஆகஸ்ட் 10 – ஆகஸ்ட் 14, 2022)

ஊருக்கும் உலகத்துக்கும் குரல் கொடுக்க!

நாம் சம்மந்தப்பட்டப் பணிகளில் ஏதேனும்  தவறு செய்பவர்களிடம் அதை சுட்டிக் காட்டி சரி செய்ய முயலும்போது சம்மந்தப்பட்ட தனிநபர் அல்லது நிறுவனங்களிடம் நாம் உறுதியாக பேசிப் போராடும்போது கிடைக்கின்ற பலன் என்ன தெரியுமா? நம் எதிரிகளின் எண்ணிக்கை அல்லது நம்மைப் பிடிக்காதவர்களின் எண்ணிக்கையில் ஒரு எண் கூடுவது மட்டுமே நடக்கிறது. என்னவோ நாம் தவறு செய்துவிட்டதைப் போல அவர்கள் முறைத்துக்கொண்டு பேசாமல் இருப்பதும், ஒதுங்கிச் செல்வதும் வினோதம்.

‘இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்றார் திருவள்ளுவர்.  நாம் நன்மையே செய்தாலும் அவர்கள் நாணப்படவெல்லாம் செய்வதில்லை. நம்மை இன்னும் அதிகமாக எப்படி துன்பப்பட வைக்கலாம் என்றே சிந்திக்கிறார்கள்.

கலிகாலம் இப்படித்தானே இருக்கும். அப்படித்தான் இருக்கிறது.

அதற்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு மன அழுத்தத்துடன் வாழ்வதைவிட சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு  திருத்தப்பட வேண்டிய தவறுகளை சுட்டிக் காட்டிவிட்டு கடந்து செல்வதற்கெல்லாம் அதீத பக்குவம் வேண்டும்.

தம் சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு தாமே குரல் கொடுக்கத் திராணியற்றவர்கள் எப்படி ஊருக்கும் உலகத்துக்கும் குரல் கொடுக்க முடியும்?

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஆகஸ்ட் 14, 2022 | ஞாயிறு

எப்படி இப்படி?

சென்ற வார பொதிகை நிகழ்ச்சியைப் பார்த்த ஒரு சிலர், அதிலும் குறிப்பாக முதன்முதலில் என் உரையை கேட்பவர்கள் ‘மிக மிக மென்மையாக பேசுகிறீர்கள்… உங்கள் துறையில் எவ்வளவு சாதித்துள்ளீர்கள்… ஆனாலும் அடக்கமாக… ’ என்றனர்.

1996-ம் ஆண்டு என் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தவர்களும் இதையேத்தான் சொன்னார்கள். ‘மிக மிக மென்மையாக பேசுகிறீர்கள்… இவ்வளவு படித்திருக்கிறீர்கள். ஆனாலும் அடக்கமாக….’

வெளியில் இருந்து பார்ப்பவர்களைப் பொறுத்தவரை அன்றும் இன்றும் ஒரே ஒரு வித்தியாசம்தான். அன்று என் படிப்பைப் பாராட்டினார்கள். இன்று சாதனையைப் பாராட்டுகிறார்கள். அவ்வளவுதான்.

எனக்குத் தெரிந்த வித்தியாசம் வேறு கோணத்தில். அன்று நான் என் சாதனையை நேர்காணல்களில் சொல்லி வந்தேன். இன்று மற்ற சாதனைப் பெண்களின் சாதனைகளை பாராட்டி வாழ்த்தும் இடத்துக்கு வந்துள்ளேன்.

மற்றபடி இயல்பில் எந்த மாற்றமும் இல்லாததால் நான் பேசும் பாங்கிலும் மாற்றம் இல்லாமல் அப்படியே உள்ளது. தட்ஸ் ஆல்.

இவ்வளவு கதை இப்போது எதற்கு என நினைக்கிறீர்களா?

காரணம் இல்லாமல் இல்லை.

இன்றிரவு (ஆகஸ்ட் 13, 2022, சனிக்கிழமை) 9.00 மணிக்கு நான் பங்கேற்று சாதனைப் பெண்களை வாழ்த்திப் பாராட்டும் நிகழ்ச்சி பொதிகை தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிறது.

இது சென்ற வார சனிக்கிழமை நிகழ்ச்சியின் அடுத்த பாகம்! (மறுஒளிபரப்பு அல்ல. தொடர்ச்சி)

வாய்ப்புள்ளவர்கள் பார்க்கலாம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஆகஸ்ட் 13, 2022, சனிக்கிழமை

பேசப் பழகுவோம்!

ஏதேனும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் நாம் நடந்துகொண்ட விதத்தினாலும், பேசிய நயத்தினாலும் நம்மை புரிந்துகொள்ளாமல் நம் மீது தவறான கருத்தைக் கொண்டிருப்பவர்களிடம் நம் வாழ்க்கையில் நடந்த பல உதாரண நிகழ்வுகளைச் சொல்லி நம்மைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் எடுத்துரைத்துப் புரிய வைக்கத் தொடங்கினால், அவர்கள் மேலும் மேலும் நம்மை பற்றிய குழப்பமான புரிதலுக்குள்ளேதான் சென்று கொண்டிருப்பார்கள்.

‘நான் இதற்காகத்தான் இப்படி செய்தேன், பேசினேன்’ என நேரடியாக சுருக்கமாக சொல்லிவிட்டு நம் அடுத்தகட்டப் பணிகளில் கவனம் செலுத்தினோமேயானால் இருபக்கமும் சேதாரம் இல்லாமல் தப்பிக்கலாம்.

இல்லையெனில் பிரச்சனைகள் தீவிரமாகுமே தவிர குறைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஆகஸ்ட் 13, 2022 | சனிக்கிழமை

நான்கே நாட்களில் அழகாக வேண்டுமா?

எந்த ஒரு விஷயத்தின் மீதும் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் கோபப்படுவதும், எரிச்சல்படுவதும், ஆசைப்படுவதும் கூட போதையாக மாறி நம்மை அடிமையாக்கக் கூடும். அதுவே நம் இயல்பாகவும் மாறக் கூடிய அபாயம் உண்டு. தீய பழக்கங்கள் என்பது மதுவும் சிகரெட்டும் மட்டுமல்ல. சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்படவோ எரிச்சல்படவோ ஆரம்பியுங்கள், நான்கே நாட்களில் எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணமுள்ளவராவீர்கள். நிதர்சனம். உங்களை நீங்களே உன்னிப்பாக கவனித்தால் அந்த உண்மை புரியும்.

நம் தீய எண்ணங்கள் தீய பழக்கங்களாக மாற அதிக நாட்கள் எல்லாம் தேவை இல்லை. ஒரு கையில் உள்ள ஐந்துவிரல்களுக்கும் குறைவான எண்ணிக்கைக் கொண்ட தினங்கள் போதும். அந்த அளவுக்கு பலவீனமானது நம் மனம்.

ஆகவே, தினமும் நாம் கடந்து செல்லும் விஷயங்களில் நல்லவற்றை நம் மனதுக்கு மடைமாற்றுவோம்! பலவீனமான சென்சிடிவான நம் மனதுக்கு அன்பையும் கருணையையும் பாசத்தையும் நேர்மையையும் தீனி போடுவோம்.

நாம் திடீரென அழகாகிவிடுவதைப் போல் நமக்கே தோன்றும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஆகஸ்ட் 12, 2022 | வெள்ளிக்கிழமை

தலைமைப் பொறுப்பு என்பது அத்தனை எளிதல்ல!

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தாங்கள் மட்டும் பொறுப்பாகவும் சரியாகவும் செயலாற்றுவதில் அல்ல அவர்களின் வெற்றி, தாங்கள் எடுத்துக்கொண்ட பணியில் ஈடுபட்டுள்ள கடைநிலை ஊழியர்கள் வரை பொறுப்பாக செயலாற்றத் தூண்டுவதிலும் செயல்படுத்த வைப்பதிலும்தான் இருக்கிறது அவர்களின் வெற்றி….

இது நிச்சயம் அரசியல் பதிவல்ல.

ஒரு அலுவலகப் பிரச்சனை குறித்து அந்தப் பிரச்சனை தீராத நிலையில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பேசிப் பேசி சோர்வான நிலையில் அவர்களிடம் நான் கடைசியாக பேசிய வார்த்தைகள் தான் இவை.

காம்கேர் கே.புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஆகஸ்ட் 10, 2022 | புதன் கிழமை

(Visited 22 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon