ஆகஸ்ட் 15, 2022: கதையல்ல சம்பவம்!

ஆகஸ்ட் 15, 2022: கதையல்ல சம்பவம்!

ஆகஸ்ட் 15, 2022 – நம் நாட்டின் சுதந்திர தினத்துக்காக எங்கள் வீட்டில் நாங்களே தயாரித்த இனிப்பை டிஜிட்டல் புகைப்படமாக்கி உங்கள் அனைவருக்கும் கொடுக்க நினைத்துப் பகிர்ந்துள்ளேன். மகிழ்ச்சியாக இந்த நாளை கொண்டாடி மகிழ்வோம். எத்தனையோ வீரர்களின் தியாகங்களினால் நமக்குக் கிடைத்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்திப் போற்றுகிறோமா என நாம் ஒவ்வொருவரும் நினைத்து அவர்களை வணங்கி இந்த நாளை இனிய நாளாகத் தொடங்குவோம்.

‘தபால் நிலையங்களில் நம் நாட்டின் தேசியக் கொடி விற்பனைக்கு உள்ளது’ என்ற அறிவிப்பு வந்த நாளுக்கு அடுத்த நாளே தபால் நிலையத்தை அணுகினோம். அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்றார்கள். ஏமாற்றம் வரவில்லை. ஆச்சர்யமாக இருந்தது.

எங்கள் வீட்டுக்கு வழக்கமாக வரும் தபால்காரருக்குப் போன் செய்து ‘தேசியக் கொடி வாங்க வேண்டும். இரண்டாம் நாளே விற்றுத் தீர்ந்துவிட்டன என்றார்கள். மறுபடி ஸ்டாக் வந்துள்ளதா?’ என்றேன்.

‘இல்லைம்மா… வரவில்லை’ என்று சொன்னார். சரி ஆன்லைனிலோ அல்லது வேறு கடைகளிலோ வாங்கிக்கொள்ளலாம் என நினைத்து அமைதியானேன்.

இந்த இடத்தில் அந்தத் தபால்காரர் குறித்து சொல்லியாக வேண்டும்.

உயர்திரு. தனசேகர் அவர்கள். இன்னும் ஆறுமாத காலத்தில் ஓய்வுபெறப் போகும் வயது. கனிவும் மரியாதையும் கலந்த ஒரு மாமனிதர். நான் வெளிநாட்டுக்குச் சென்றாலும் ஏதேனும் பதிவுத் தபால் வந்தால் எதிர் வீட்டில் அங்கீகாரக் கடிதம் கொடுத்துவிட்டுச் சென்றாலும் எனக்கு வாட்ஸ் அப்பில் தகவல் சொல்லிவிட்டு அவர்களிடம் கொடுத்துவிட்டுச் செல்வார்.

அதுபோல நான் இந்தியா திரும்பியதும் ‘இன்னன்ன பதிவுத் தபால் வந்திருந்தே, அதை எதிர்வீட்டில் இருந்து வாங்கிக் கொண்டீர்களா?’ என ஒவ்வொரு கடிதத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு அந்தந்த நிறுவனத்தின் பெயரையும் சொல்லி அக்கறையாக மறக்காமல் விசாரிப்பார்.

தீபாவளி பொங்கல் போன்ற தினங்களில் மற்றவர்கள் கேட்பதைப் போல இனாம் எல்லாம் கேட்க மாட்டார். கொடுத்தாலும் வாங்க மாட்டார்.

இப்போதெல்லாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் ‘மறந்துவிட்டது, நேரம் இல்லை, ரொம்ப பிசி’ இப்படிப்பட்ட வார்த்தைகளையே கேட்டுக் கேட்டு சலித்துப்போன நம் மனதுக்கு இவரது அக்கறை வியப்பை உண்டு செய்வதோடு இவர் மீதான மரியாதையைக் கூட்டும்.

ஒருமுறை எங்கள் நிறுவனத்தின் விடுமுறை நாளில் நான் வீட்டில் இருந்தேன். மதியம் 2 மணிக்கு அழைப்பு மணி அடித்தது. அந்த தபால்காரர் ஏதோ ஸ்பீட் போஸ்ட் கொண்டு வந்திருந்தார். நான் கையொப்பமிட்டு அவரிடம் கொடுத்துவிட்டு அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன்.

‘இனி மதிய நேரத்தில் வந்தால் காலிங் பெல் அடிக்க வேண்டாம். கதவைத் தட்டுங்கள். திறக்கவில்லை என்றால் காலிங் பெல் அடியுங்கள். ஏனெனில் அப்பா அம்மா இருவரும் வயதானவர்கள், கொஞ்ச நேரம் மதியம் ஓய்வெடுப்பார்கள்.’ என்றேன்.

அதற்கு அவர் ‘சாரி மேடம், இனி அப்படியே செய்கிறேன்’ என்று சொன்னார்.

இதை நான் சொன்னது பத்து வருடங்கள் முன்பு. அன்றில் இருந்து அவர் காலையில் வந்தாலும், மதியம் வந்தாலும், முன்மாலை நேரத்தில் வந்தாலும் எங்கள் வீட்டு காலிங் பெல்லை அடிப்பதே இல்லை. மென்மையாகக் கதவைத் தட்டுவார். கதவைத் திறந்ததும் முகம் முழுக்க புன்னகையுடன் கடிதத்தைக் கொடுத்துவிட்டு வணக்கம் வைத்துவிட்டுச் செல்வார்.

இந்த குணம் எத்தனை பேரிடம் இருக்கிறது?

இவர் குறித்து இப்போது எதற்கு?

அவர் சனிக்கிழமை மதியம் ஒரு தேசியக் கொடியுடன் வந்திருந்தார். தன் வீட்டில் இரண்டு வாங்கியிருந்ததாகவும் அதில் ஒன்றை உங்களுக்குக் கொடுக்கலாம் என நினைத்து எடுத்து வந்தேன் என்றும் சொன்னார்.

தபால் நிலையத்தில் என்ன விலைக்கு விற்கிறார்களோ அதே விலையை எங்களிடம் வாங்கிக்கொண்டார்.

இதுபோன்ற மனிதாபிமானத்துடனும், மனித நேயத்துடனும், பிறர் மீது அக்கறையுடனும் செயல்படுபவர்களை எல்லாம் முப்பந்தைந்து நாற்பது வருடங்களுக்கு முன்பு நாங்கள் சீர்காழி, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற ஊர்களில் வாழ்ந்தபோது எங்கள் சிறுவயதில் பார்த்திருக்கிறோம்.

மனிதத்துடன் வாழ்பவர்களை எல்லாம் காண்பது அரிதினும் அரிதாகிவிட்ட நிலையில் இந்த பூமி இன்னமும் உயிர்ப்பாக இருப்பதற்குக் காரணம் இவரைப் போன்று நம் இந்தியப் பண்புகளுடன் வாழ்பவர்களால் மட்டுமே என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லவே இவ்வளவு விரிவாக இந்தப் பதிவு.

அன்பு, பண்பு, பாசம், நேசம், கரிசனம், மனிதாபிமானம், மனிதநேயம், குடும்ப அமைப்பு, பிறர் மீதான அக்கறை இவைதானே நம் நாட்டின் அடையாளம். அந்த அடையாளத்தை சுமப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் நம் கண்களில்படும் சொற்பமானவர்கள் அதிசயமாகத் தெரிகிறார்கள்.

நம் அடையாளத்தை சுமப்பதில் பெருமை கொள்வோம்! ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஆகஸ்ட் 15, 2022 | திங்கள் | காலை 6 மணி

(Visited 11 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon