மனதை மயக்கும் மைக்ரோ காரணங்கள்!

மனதை மயக்கும் மைக்ரோ காரணங்கள்!

எங்கள் வீட்டுக்கு அருகில் ஓர் அரசுப் பள்ளி. அதில் சுதந்திர தின விழா விமர்சையாக நடைபெற்றது. மைக் வழியாக அவர்கள் வாசிக்கும் நிகழ்ச்சி நிரல் ஸ்பீக்கர் வழியாக எங்களை வந்தடைந்து, நாங்களே நேரில் கலந்துகொண்டதைப் போன்ற பரவசத்தைக் கொடுத்தது.

பதினோரு மணி அளவில் ஸ்ரீராம் சேவா டிரஸ்ட் நடத்திய ராதா கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டோம்.

அந்த நிகழ்ச்சி என்னை புத்துணர்வாக்கியது ஒருபக்கம் என்றால், பல வருடங்களுக்கு முன்னர் எங்கள் நிறுவனத்தின் பயிற்சிப் புரோகிராமர் (பெண்) ஒருவர் என்னை சந்தித்த நிகழ்வு பரவசப்படுத்தியது.

‘மேம், எப்படி இருக்கீங்க, உங்களை சந்தித்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு’ என்று சொல்லியபடி வேகமாக வந்து நான் சுதாகரித்துக்கொள்வதற்குள் என் காலைத்தொட்டு வணங்கியவளின் முகத்தைப் பார்த்தேன்.

அவருடைய குரல் முதற்கொண்டு எனக்கு நினைவில் இருந்தது.

அவருடன் வந்திருந்த பத்து வயதிலும், பன்னிரெண்டு வயதிலுமான இரண்டு பெண் குழந்தைகளையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அத்தனை பரவசத்துடன் நம்மிடம் பேசும் நபர்களை சந்தித்து அதிக நாட்கள் ஆனதால் அவரது பரவசம் என்னையும் தொற்றிகொண்டது.

முப்பந்தந்தைந்து வயது பெண் நிச்சயம் எனக்கு முந்தைய ஜெனரேஷன் பெண்ணாகத்தான் இருக்க முடியும். தனக்குப் பயிற்சி கொடுத்தவரை நினைவில் வைத்துக்கொள்வதே பெரிய விஷயம். அப்படியே நினைவில் இருந்தாலும் முறையாக அறிமுகம் செய்துகொண்டு என்னிடம் அத்தனை மரியாதையுடன் ஆசி பெற்றவரை வியப்பு மேலிட பார்த்துக்கொண்டே இருந்தேன்.

வாழ்க்கை நமக்கு அறிமுகப்படுத்தும் நபர்களால் ஒருபக்கம் சோர்வு உண்டாக்கியபடியே மறுபக்கம் நம்மை சோர்வடையச் செய்யாமல் இருக்க நல்லவர்களையும் நம் கண்களில் படச் செய்துகொண்டேதான் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

வாழ்க்கை நம்மை என்றும் ஏமாற்றுவதில்லை. நாம் விழிப்பாக இருந்து கடந்து சென்றால் நாம் உயிர்ப்போடு இருப்பதற்கு ஆயிரம் ‘மைக்ரோ’ காரணங்கள் எங்கும் பரவித்தான் கிடக்கின்றன. பொதுவாக நம் மனம் மேக்ரோ காரணங்களால் மட்டுமே ஈர்க்கப்படுகின்றன. மைக்ரோ காரணங்களால் உத்வேகம் பெற வேண்டுமானால் நாம் விழிப்போடு இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

(புரியாதவர்களுக்காக ஒரு விஷயம். மைக்ரோ என்பதை சிறிய என்றும், மேக்ரோ என்பதை பெரிய என்றும் பொருள் கொள்க)

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஆகஸ்ட் 16, 2022 | செவ்வாய் | காலை 6 மணி

(Visited 16 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon