பயணங்கள்!
விக்கிரவாண்டி ஏ2பி-யில் சூடாக காபி குடித்துவிட்டு பயணத்தைத் தொடரலாம் என நினைத்துச் சென்றோம். அங்கு எனக்கு நேர் எதிரே இரண்டு வரிசைகளுக்கு அப்பால் ஸ்வாமிஜிகள் மூன்று பேர் அமர்ந்திருப்பது கண்களில்பட்டது. அதில் ஒருவர் முகம் பளிச்சென அவரது பெயரை நினைவூட்டியது. மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷின் உறைவிடப் பள்ளி மாணவர் இல்லத்து முதன்மை ஸ்வாமிஜி ‘உயர்திரு. சத்யக்ஞானானந்தா ஸ்வாமிஜி’. அவரிடம் சென்று நலம் விசாரிக்க ஆர்வம் மேலிட்டது.
அவர்களும் காபி அருந்திக்கொண்டிருந்ததால் அவர்களை பரபரக்க வைக்க வேண்டாம் என அவர்கள் காபி குடித்து முடிக்கும் வரை காத்திருந்தேன்.
அதுவரை அவரிடம் எப்படி பேசுவது என மனதுக்குள் ‘ட்ரைலர்’ ஓடியது. பத்துப் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு மூன்று நான்கு முறை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷின் உறைவிடப்பள்ளி மாணவர் இல்லத்தில் படிக்கும் மாணவர்களுக்காக எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை வாயிலாக சிறப்பு நிகழ்ச்சிகள், கட்டுரைப் போட்டிகள், பரிசுகள் எல்லாம் வழங்கி ஊக்கப்படுத்தி மகிழ்ந்திருக்கிறோம்.
அவருக்கு என்னை நினைவிருக்குமா? அப்படி நினைவில்லை எனில் இதையெல்லாம் சொல்லி நினைவுகூற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அவர்கள் எழுந்து கிளம்ப ஆயத்தமானார்கள். நான் வேகமாக சென்று ‘நமஸ்காரம் ஸ்வாமிஜி…’ என்று சொன்னேன்.
அவர் ஒரே ஒரு நொடி தலைகுனிந்து யோசித்துவிட்டு ‘ஆ…காம்கேர் தானே? எப்படி இருக்கீங்க…’ என்று அத்தனை மகிழ்ச்சியுடன் என்னை நலம் விசாரித்தார். நான் எதிர்பார்க்கவே இல்லை, அவருக்கு என்னை நினைவிருக்கும் என்று. மனதுக்குள் நான் தயாரித்த ட்ரைலருக்கு வேலையே இல்லாமல் செய்துவிட்டார்.
என் பெயரைக் கூட சொல்லமால் ‘காம்கேர்’ என்று எனை குறிப்பிட்டது எனக்கு சந்தோஷமானது. ‘இப்ப இன்னும் நல்ல பெரிய ஆளா உயர்ந்திருப்பீங்க இல்ல…’ என காம்கேரின் வளர்ச்சியைக் குறித்தே அதிகம் விசாரித்தது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியானது.
காபியின் சுவையுடன் ஸ்வாமிஜியின் அக்கறையான நலன் விசாரிப்பு எனக்குள் புது உற்சாகத்தை உண்டு செய்தது.
ஒரு நிகழ்ச்சிக்காக அவர்கள் வெளியூர் சென்று கொண்டிருப்பதாக கூறி விடைபெற்றார்.
ஒரு பயணம் எத்தனையோ நல்ல நல்ல அனுபவங்களை கொடுக்கும். அதில் முக்கியமானது நாம் மதிக்கும், நம்மை மதிப்பவர்களை எதிர்பாராமல் சந்திக்கும் அழகான சந்தர்ப்பம்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஆகஸ்ட் 26, 2022 | வெள்ளி