கழுநீர் பானையில் கையை விட்ட கதையாகாமல் இருக்க!

கழுநீர் பானையில் கையை விட்ட கதையாகாமல் இருக்க!

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களை அழைக்கும்போது அவர்களின் பெயர்களை தமிழில் எப்படி எழுத வேண்டும், ஆங்கிலத்தில் எப்படி எழுத வேண்டும், ஏதேனும் அடைமொழி / பட்டப்பெயர் உள்ளதா என்றெல்லாம் கேட்டு குறிப்பெடுப்பது முதல் கட்ட வேலை.

‘திரு’, ‘திருமதி’, ‘செல்வி’ என்றெல்லாம் யாரையும் திருமணமானவர் திருமணமாகாதவர் என வேறுபடுத்தி காண்பிக்காமல் ஆண் என்றாலும் பெண் என்றாலும் அவர் திருமணம் ஆனவராக இருந்தாலும் செய்துகொள்ளாதவராக இருந்தாலும் தமிழில் ‘உயர்திரு’ அல்லது ‘திருமிகு’, ஆங்கிலம் என்றால் Mr, Ms எனப் பயன்படுத்தலாம். இதனால் மேடையில் அவரை அழைக்கும்போது உண்டாகும் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

அத்துடன் நீங்கள் சேகரித்த தகவல்களை அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ள அடுத்தடுத்த நிலையில் உள்ள அனைவருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் நிகழ்ச்சி நிரல், அழைப்பிதழ், பெயர் பலகை, மேடையில் சிறப்பிக்க அழைக்கும்போது என எல்லா இடங்களிலும் குழப்பமின்றி ஒன்றுபோல செயல்படுத்த வசதியாக இருக்கும்.

யு-டியூப் சேனல் அல்லது தொலைக்காட்சி சேனல்களில் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர்களின் பெயர்களை சரியாக போட வேண்டும் அல்லவா, மீடியாவில் வீடியோ கவரேஜ் செய்பவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களின் பெயர், அடைமொழி, பட்டப்பெயர் போன்ற விவரங்களை மறக்காமல் கொடுக்க வேண்டும்.

அடுத்து சிறப்பு விருந்தினரின் சிறப்புகளை சாதனைகளை அவர்களின் செயல்பாடுகளை அவரிடம் நீங்களே கேட்டு வாங்கிக்கொள்வதுடன் நீங்களாக அவர் குறித்து அறிந்தவற்றையும் அவை சரிதானா என அவரிடம் ஒரு முறை கேட்டு உறுதி பெறுவது மிக முக்கியம். நீங்கள் அவரிடம் நேரடியாக கேட்கும் பதவியில் அவர் இல்லை இல்லை என்றால் அவரது உதவியாளரின் இமெயில், வாட்ஸ் அப்புக்கு தகவல் அனுப்பி சிறப்பு விருந்திரின் குறித்த தகவல்களை சரி பார்ப்பது அடுத்த கட்ட வேலை.

இவற்றில் எல்லாம் நீங்கள் கவனமாக இல்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சியையும் எவ்வளவு பிரமாண்டமாக செய்தாலும் அது முழுமையடையாது.

எல்லாவற்றையும் நீங்கள் சரியாக செய்தாலும் நிகழ்ச்சியை யு-டியூபில் எடிட் செய்யும் எடிட்டர்களும் கவனமாக செயல்பட்டால்தான் அந்த நிகழ்ச்சி பூரணத்துவம் பெறும்.

ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர், ஒரு யு-டியூப் வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்கள். வீடியோ டைட்டிலில் பேச்சாளரின் பெயரை போட்டு அருகில் ‘மூத்த பத்திரிகையாளர்’ என போட நினைத்து டைப் செய்யும்போது கவனக்குறைவாக ‘முத்த பத்திரிகையாளர்’ என போட்டிருந்தார்கள். நான் சம்மந்தப்பட்ட பேச்சாளருக்கு மெசஞ்சரில் தகவல் கொடுத்தேன். ஆனாலும் அந்த வீடியோ பல மாதங்களாக அப்படியேத்தான் சுற்றிக்கொண்டிருந்தது.

யு-டியூபில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன. டைட்டிலில் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அதை மாற்றி சரி செய்தாலும் யு-டியூபில் மட்டுமே மாறும். அந்த லிங்கை எடுத்து ஷேர் செய்யும் இடங்களில் மாற்றம் அடையாது. தவறான டைட்டிலுடனேயேதான் ஷேர் ஆகும். மொத்தமாக வீடியோவை டெலிட் செய்துவிட்டு புதிதாக திரும்பவும் அப்லோட் செய்து தவறில்லாமல் டைட்டிலில் அப்டேட் செய்துகொள்ளலாம். ஆனால் தவறான டைட்டிலுடன் அப்லோட் செய்யப்பட்ட வீடியோ எக்கச்செக்க லைக் பெற்றுவிட்டால் சம்மந்தப்பட்ட யு-டியூப் சேனல்காரர்கள் அதை டெலிட் செய்ய முனைப்பு காட்ட மாட்டார்கள்.

இதனையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் எக்கச்செக்கமாக செலவு செய்து நிகழ்ச்சியை பிரமாதப்படுத்திவிட்டு பெயரை சரியாக குறிப்பிடாமல் குழப்பிவிட்டால் நல்லதெல்லாம் பண்ணி கடைசியில் கழுநீர் பானையில் கையை விட்ட கதையாகிவிடும்.

எனவே, ஏதேனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய முனைந்துவிட்டால் நிகழ்ச்சிக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அத்தனைக்கு அத்தனை மேலே சொன்ன விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஆகஸ்ட் 18, 2022 | வியாழன் | காலை 6 மணி

(Visited 779 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon