பெண்களும் பயணங்களும்!
பயணங்களின்போது எத்தனைக்கு எத்தனை ஓட்டல் சாப்பாட்டை தவிர்க்க முடியுமோ அத்தனைக்கு அத்தனை தவிர்க்கப் பார்ப்போம். தயிர்சாதம், சப்பாத்தி, புளியஞ்சாதம், இட்லி என தயார் செய்து எடுத்துச் சென்றுவிடுவோம். செல்ஃப் டிரைவ் என்றால் எங்களுக்கு மட்டும், டிரைவர் என்றால் அவருக்கும் சேர்த்து.
அவை தீர்ந்த பிறகு தவிர்க்க முடியாமல் மட்டுமே ஓட்டல் சாப்பாடு. இப்படித்தான் மற்றவர்களும் செய்ய வேண்டும் என அறிவுரை சொல்ல வரவில்லை.
எங்கள் குடும்பங்களில் ஆண்களும் பெண்களுக்கு இணையாக வீட்டு வேலைகள் செய்வதால் எல்லாமே சாத்தியமாகிறது.
பெண்களுக்கு மட்டுமே சமையல் அறை என பட்டா போட்டு வைத்த வீடுகளில் வெளியூர் பிரயாணங்களும் பெண்களுக்கு கூடுதல் தண்டனையே.
இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால், ஒரு முறை நாங்கள் வழக்கமாகச் செல்லும் ட்ராவல்ஸில் அதன் உரிமையாளரே டிரைவராக வந்தார்.
அவர் ’இப்படி சாப்பாடு எடுத்து வருவது நல்லதுங்க. பல கஸ்டமர்கள் வண்டியில் ஏறி அமர்ந்ததும் அந்த ஓட்டலுக்குப் போங்க, இந்த ஓட்டலுக்குப் போங்க என ஓட்டலுக்குச் செல்வதில்தான் குறியாக இருப்பாங்க… அதுவும் பெண்கள் தான் அதில் பிடிவாதமா இருப்பாங்க…’ என்று சொன்னபோது எனக்கு சட்டென கோபம் வந்தது.
‘சார், நீங்க வீட்டு வேலை ஏதேனும் செய்வீர்களா?’
‘நமக்கு கார் ஓட்டுவது மட்டும்தான் தெரியும்…’
‘சாப்பிடத் தெரியும் அல்லவா?’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு கோபத்தை உள்ளடக்கி அவருக்கு சில விஷயங்களை புரிய வைக்க முயன்றேன்.
‘சார், பல பெண்களுக்கு இங்கு சமையல் வேலை என்பது வலிய சுமத்தப்பட்ட சுமை. அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களுக்கு பசித்தாலும் பசிக்காவிட்டாலும், உடல்நலனும் மனநலனும் நன்றாக இருந்தாலும் நன்றாக இல்லை என்றாலும் அவர்கள் சமையல் செய்துதான் ஆக வேண்டும். இதில் படித்த பெண்கள், படிக்காத பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், வேலைக்குச் செல்லாத பெண்கள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.
அதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பும் நேரங்களை தனதாக்கிக்கொள்ள நினைப்பதில் தவறில்லையே.
வெளியில் வரும் போதாவது ஹாயாக ஓட்டலில் சாப்பிட நினைப்பது அவர்களுக்கு சுதந்திர உணர்வைக் கொடுக்கிறது. நிம்மதியாக ஆர்டர் செய்து சாப்பிடுவது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது.
அதைவிட்டு ஜாலியாக வெளியூர் கிளம்பும்போதும் சாப்பாடு கடையில் மும்முரமாக வியர்க்க விறுவிறுக்க வேலை செய்துவிட்டு வருவதற்கு பெண்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.
ஆண்களும் சமையல் அறையை பகிர்ந்துகொண்டு வேலை செய்தால் ஒருவேளை அவர்கள் காரில் ஏறியவுடன் ஓட்டலுக்குச் செல்லச் சொல்ல மாட்டார்கள்.’ என அவர்க்குப் புரியும் விதத்தில் சொன்னேன்.
அவர் அப்போதும் விடாமல் ‘என்னங்க ரெண்டு மணி நேரமா ஆகப் போகுது ஆளுக்கு ரெண்டு இட்லி கட்டி எடுத்துவர…’ என நக்கலாகச் சொன்னார்.
நானும் விடாமல் ‘நீங்களும் சமையல் வேலையை கற்றுக்கொள்ள ரெண்டு நாள்தான் ஆகும்…’ என சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு அந்த விவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.
பொதுவாகவே ஒரு கஸ்டமரைப் பற்றி மற்ற கஸ்டமரிடம் பேசாமல் இருப்பது டிரைவர்களுக்கு நல்லது. நம்மைப் பற்றியும் இப்படித்தானே மற்றவர்களிடம் சொல்வார் என்ற எண்ணம் தோன்றுவது இயற்கைதானே.
வேலை / பிசினஸ் என்பது வெறும் வேலை மட்டும் அல்ல. ‘கம்யூனிகேஷன்’ தான் வேலையே, அதுவே பிசினஸ், அது எந்தத் துறையாக இருந்தாலும்.
எனவே கவனம்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஆகஸ்ட் 27, 2022 | சனிக்கிழமை