அறிவாளித்தனத்தை அடக்கி வாசிப்போமே!
எல்லா தலைமுறையினருடனும் ஒத்து வாழ்வது என்பது என்னவென்றால் பிறர் சொல்வது நமக்கு தெரிந்தாலும் ‘அப்படியா?’ என அவர்கள் சொல்வதை காதுகொடுத்துக் கேட்டுக்கொள்வதே! குறிப்பாக எளிய மனிதர்களிடம் கூடுதல் பிரியம் பெறுவதற்கான வழியும் இதுவே.
பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் எங்கள் உறவினரின் வீட்டுக்குச் சமீபத்தில் சென்றிருந்தோம். அவர் வீட்டில் ‘தர்ப்பை’ காய வைத்திருந்தார்கள். அவர்களிடம் அது குறித்து கேட்டபோது காவிரிக் கரையில் தர்ப்பைப் புல் பறித்து எடுத்து வந்து காயவைப்பதாக கூறினார்கள். தர்ப்பைப்புல் எங்கிருந்து எடுப்பார்கள் என்ற விவரம் எங்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவர்களிடம் ஆச்சர்யமாக கேட்டுத் தெரிந்துகொண்டோம்.
கூடுதலாக, ‘நாங்கள் கடையில்தான் வாங்குகிறோம். இதை எடுத்துக்கொள்ளட்டுமா’ என அவர்களிடம் கேட்டபோது அவர்கள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. எங்களால் கடையில் வாங்கிக்கொள்ள முடியும்.
ஆனால் அவர்களிடம் கேட்டு வாங்கிக்கொள்ளும்போது நம்முடன் அவர்களுக்கு இன்னும் கூடுதல் பற்றுதல் உண்டாகும்.
காரணம், தாங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கிறோம் என்ற சிறு தாழ்வு மனப்பான்மை அவர்கள் மனதின் ஓரத்தில் இருக்கும். வெளிப்படையாக தெரியாவிட்டாலும், காட்டிக்கொள்ளாவிட்டாலும் குடும்ப நிகழ்ச்சிகளில் அவர்கள் அமைதியாக ஒதுங்கி நிற்பதில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.
அவர்களின் உழைப்பை நாம் அங்கீகாரம் செய்வதை வெளிப்படையாக காட்டிக்கொண்டாலே அது அவர்களுக்கு செய்யும் ஆகச் சிறந்த மரியாதை. ஆறுதல். அன்பு. பேரன்பு. இப்படி எந்தப் பெயரை வேண்டுமானாலும் கொடுத்துக்கொள்ளலாம் அந்த செயலுக்கு.
இதே நுணுக்கம் தான் பொது இடங்களிலும். நம்மை பிறர் மதிக்க நாம் சற்று நம் புத்திசாலித்தனத்தை சற்று மறைத்துக்கொண்டு செயல்பட்டாலே போதும்.
‘அப்போ ஒண்ணுமே தெரியாத முட்டாள்போல நடந்துகொள்ளணுமா?’ என நீங்கள் நினைப்பது புரிகிறது. முட்டாளாக மாறச் சொல்லவில்லை. பிறரை புத்திசாலியாக நினைக்க வைக்க வேண்டும். அதற்கு நாம் சற்று நம் அறிவாளித்தனத்தை அடக்கி வாசிக்க வேண்டும் என்கிறேன்.
பிறரை ஒரு படி உயர்த்த நாம் மேல் படியில் நின்றுகொண்டு கீழே இருப்பவரை Pull செய்வது ஒரு வகை செயல்பாடென்றால், நமக்குக் கீழிருப்பவரை உயர்த்த நாம் இருந்த இடத்தில் இருந்துகொண்டே அவர்களை Push செய்து மேலே உயர்த்துவது மற்றொரு வகை செயல்பாடு. முன்னதில் நமக்கு மட்டும் பெருமிதம் உண்டாகும். பின்னதில் நம்முடன் சேர்ந்து நம்மால் உயர்ந்தவருக்கும் பெருமிதம் கிடைக்கும்.
முயற்சிப்போமே!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
செப்டம்பர் 6, 2022 | செவ்வாய்