ஆசிரியர்கள்!
பள்ளியில் தன் மகளுடன் படிக்கும் சக மாணவன் மகளுக்கு படிப்பில் போட்டியாக இருப்பதால் அவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்துக் கொன்ற தாய்- நேற்றைய மகா கொடுமையான செய்தி.
பள்ளியில் தன் வகுப்பில் படிக்கும் மாணவிதான் பள்ளி இறுதித்தேர்வின் போது முதலாவதாக வர வேண்டும் என்பதால் அவளுக்குப் போட்டியாகவும் மாநில அளவிலும் முதலாவதாக வர வேண்டும் எனவும் நினைத்து படித்து முதல் மதிப்பெண் எடுத்து வந்த மற்றொரு மாணவியின் தமிழ் ஆங்கிலம் தவிர்த்து மற்ற எல்லா சப்ஜெக்ட்டுகளிலும் விடைத்தாள்களில் கடைசி மூன்று பக்கத்தை குறுக்கே அடித்து அவளால் பள்ளியில்கூட முதலாவதாக வர முடியாமல் செய்த ஆசிரியை. – முப்பது வருடங்களுக்கு முந்தைய செய்தி. (மாநில அளவில் முதலாவதாக வர நினைத்துப் படித்த மாணவி வேறு யாருமல்ல நானே தான்)
இரண்டு மூன்று பிள்ளைகள் உள்ள வீட்டில் சரியாகப் படிக்காத தன் மூத்த மகன்/மகளுக்கு ஏக்கம் வந்துவிடக் கூடாது என நினைத்து மிக நன்றாக படிக்கும் படுசுட்டியான இரண்டாவது மகனை/மகளை பரிட்சை நேரத்தில் படிக்க விடாமல் செய்யும் தாய்மார்களையும் நான் சந்தித்திருக்கிறேன்.
இப்படி கல்வி, மாணவர்கள், ஆசிரியர்கள் இவை சார்ந்து இயங்கும் எந்த சூழலுமே என் மனதுக்கு இனிமையாக இல்லாத சூழலிலும்…
எங்கள் காம்கேர் நிறுவனம் மூலம் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர், அனிமேஷன் தயாரிப்புகள் மூலம் நான் பெறுகின்ற அனுபவங்களை அந்தந்த காலகட்டத்தில் புத்தகமாகவும், ஆடியோ வீடியோவாகவும் எழுதி வெளியிட்டு வருவதால் அவை தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்குப் பாடத்திட்டமாக இடம் பெற்று வருவதுடன் நூலகங்களிலும் இடம்பெற்று எனக்கான கெளரவத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
அந்த வகையில் கடந்த 30 ஆண்டுகால IT துறை அனுபவம் என்னை நேரடியாக தொழில்முனைவோராக அறிமுகம் செய்து தொழிலதிபராக உயர்த்தியதுடன் மறைமுகமாக லட்சோபலட்சம் மாணவர்களுக்கு குருவாகவும் இருக்கும் அற்புத வாய்ப்பையும் அளித்துள்ளது.
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
செப்டம்பர் 5, 2022 | திங்கள்