குருவருளால் குருவாகவும்!

 

குருவருளால் குருவாகவும்!

எங்கள் காம்கேர் நிறுவனம் (1992) ஐடி நிறுவனம் என்பதால் அடிப்படை பணி சாஃப்ட்வேர் தயாரித்தல். அனிமேஷன் உருவாக்குதல், வெப்சைட் வடிவமைத்தல், ஆப் தயாரித்தல் என பல பிரிவுகளை உள்ளடக்கியது.

ஒருநாள் எங்கள் நிறுவனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் என்ன நினைத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை. உள்ளே நுழைந்து ’இங்கு தமிழில் கம்ப்யூட்டர் சொல்லித் தருவீங்களா?’ என கேட்டார். ’இல்லை, இது சாஃப்ட்வேர் தயாரிக்கும் ஐடி நிறுவனம். பயிற்சி நிறுவனம் அல்ல’ என்று பதில் சொன்னேன்.

நான் தமிழில் பேசியதால் அவர் முகம் மலர்ந்து, ‘இதே தெருவில் என்.ஐ.ஐ.டி, ஆப்டெக், ப்ரில்லியண்ட் போன்ற சென்டர்கள் உள்ளன. அவற்றில் சென்று கேட்டேன். முதலில் விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் சேர்ந்து ஆங்கிலம் பேசக் கற்று வாருங்கள் என்று சொல்கிறார்கள்… அதனால்தான் இங்கும் விசாரித்தேன்’ என்று கடகடவென மனதில் உள்ளதைக் கொட்டினார்.

‘அப்படியா? அவர்கள் உங்களிடம் தமிழில் பேசவில்லையா?’ என்று கேட்டதற்கு ‘இல்லை மேம். ஆங்கிலத்தில்தான் பேசினார்கள். நான் புரியாமல் திரும்ப ‘என்ன என்ன’ என்று கேட்டதற்கு இப்படி பதில் சொன்னார்கள்’ என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

அன்றைய தினம் உறக்கத்தில் இதே நினைவு. பொதுவாகவே காலை ஆறு முதல் இரவு பத்து மணிவரை காம்கேரே கதி என்றிருப்பதாலும் அதன்பின்னர் வீட்டிலும் ப்ராஜெக்ட்டுகள் குறித்த R&D யிலேயே இயங்குவதாலும் இரவு கனவில்தான் பெரும்பாலும் நாங்கள் செய்கின்ற ப்ராஜெக்ட்டுகளுக்கான லாஜிக் கிடைக்கும். அதுபோல கனவில்தான் புது ப்ராஜெக்ட்டுகளுக்கும் அஸ்திவாரம் போடுவேன். காலையில் புத்துணர்வுடன் எழுந்து அவற்றை செயல்படுத்துவேன்.

அப்படித்தான் அன்றிரவு கம்ப்யூட்டர் பயிற்சி குறித்த சிந்தனையே என் கனவாக வந்தது.

வழக்கமாக எங்கள் நிறுவனத்திற்கு வருபவர்களிடம் அவர்களின் பெயர் முகவரி, தொலைபேசி எண் எழுதி வாங்குவோம். அப்படி அவரிடம் எழுதி வாங்கியதால் அவரை தொடர்புகொள்வது சுலபமாக இருந்தது. மிகக் குறைந்த கட்டணம் சொல்லி அவரை மாணவராக சேர்த்துக்கொண்டோம்.

இப்படியாக காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பயிற்சியும் கொடுக்க ஆரம்பித்தோம். வேலைக்குச் செல்வதற்கு முன், வேலையில் இருந்து திரும்பும்போது என பலர் பயிற்சிக்காக காம்கேரில் சேர்ந்தனர்.

இப்படியாக ஆசிரியர் பணி என்றாலே வேப்பங்காயாக இருந்த என்னையும் குரு ஸ்தானத்தில் உட்கார வைத்தது எங்கள் காம்கேர்.

இந்தச் சூழல் காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் தியானம் செய்வதைப் போல் அமைந்தது.

நான் வகுப்பெடுக்கும் பாங்கு பிரபலமாகி சென்னையின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் வர ஆரம்பித்தார்கள்.

ஐஐடியில் இருந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து என பல்வேறு துறை சார்ந்த மாணவர்கள் தங்கள் ப்ராஜெக்ட்டுகளுக்காக காம்கேரை அணுக ஆரம்பித்தனர்.

மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும், பேராசிரியர்களும் வர ஆரம்பித்தனர்.

ஆனாலும் என்னால் பயிற்சி நேரத்தை நீட்டிக்க முடியவில்லை. காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணி நேரம். அவ்வளவே.

மற்ற நேரத்தில் சாஃப்ட்வேர், அனிமேஷன் தயாரிப்புகள் ஓடிக்கொண்டே இருக்கும். நானும்தான். எங்கள் நிறுவனத்தில் இயங்கும் பல்வேறு டீமிற்கு என் முழு கவனமும் அவசியமாக இருந்தது.

மேலும் நான் எந்த புத்தகத்தையும், ரெஃபரென்ஸையும் வைத்துக்கொள்ளாமல் சொல்லித்தருவேன். மனதில் இருந்து வார்த்தைகள் வரும். கைகளால் புரோகிராம்களை எழுதிக்கொண்டெ லாஜிக்கை விளக்குவேன். கம்ப்யூட்டர் எப்படி புரோகிராமை இயக்கும் என்பதை கைகளால் எழுதி புரிய வைப்பேன். உடனடியாக அதை கம்ப்யூட்டரில் இயக்கி செயல்படுத்தியும் காண்பிப்பேன்.

பயிற்சிக்காக தனி பிரிவை உருவாக்கலாம் என்றால் நான் சொல்லிக்கொடுக்கும் பாணியில் சொல்லித்தரும் நிபுணர்கள் கிடைப்பது கடினமாக இருந்தது.

எல்லோருக்கும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து புரோகிராம் டைப் செய்து பலமுறை இயக்கிப் பார்த்து தவறுகளை சரி பார்க்கத்தெரியுமே தவிர, தவறே இல்லாமல் புரோகிராம் எழுதிய பிறகு அதை இயக்கி விடை காண்பது என்பது விழி பிதுங்கும் சமாச்சாரம் ஆக இருந்தது.

அத்துடன் என்னைப் பற்றி கேள்விப்பட்டு வருபவர்கள் இதுபோல கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வாய்க்குளேயே பேசி பலமுறை இயக்கி சரி பார்த்து சொல்லித் தருவதை விரும்பாமல் ‘நீங்கள் சொல்லித் தருவதால்தான் வந்தோம். வேறொருவரை வகுப்பு எடுக்கச் சொன்னால் நாங்கள் நின்று கொள்கிறோம்’ என சொல்ல ஆரம்பித்தார்கள்.

நான்தான் பயிற்சி அளிக்க வேண்டுமென்றால், காலை 5 மணிக்கு வாருங்கள் என்று சொன்னாலும் ஐஐடி மாணவர்கள் காலை 4.55 மணிக்கெல்லாம் காம்கேர் வாசலில் காத்திருப்பார்கள். அதனால் பயிற்சி கொடுப்பதை நானாக நிறுத்த நினைத்தாலும் அது முடியாததாகிப் போனது.

கால ஓட்டத்தில் எல்லாமே ஆன் லைன் என்றானபிறகு, அவ்வப்பொழுது ஆன்லைனில் உலகம் முழுவதிலும் இருந்து ஐடியில் பணிபுரிந்துகொண்டிருக்கும் பலரும் என்னிடம் சாஃப்ட்வேர் கன்சல்டன்சி பெறுகிறார்கள்.

மேலும் எங்கள் நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகள் மூலம் நான் பெறும் அனுபவங்களை அந்தந்த காலத்தில் புத்தகமாகவும் ஆடியோ வீடியோ தயாரிப்புகளாகவும் தயாரித்து வெளியிட்டு வந்ததால் உலகம் முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அவை பாடத்திட்டமாக இருப்பதுடன், நூலகங்களிலும் இடம் பெற்று, லட்சோபலட்சம் மாணவர்களுக்கு குருவாக இருக்கும் வாய்ப்பையும் காம்கேர் எனக்கு வழங்கி கெளரவித்தது.

இந்தக் கதை எல்லாம் இப்போது ஏன் என நினைக்கிறீர்களா?

2005 ஆம் ஆண்டு எங்கள் காம்கேரில் அனிமேஷன் பயிற்சி பெற்ற பள்ளி ஆசிரியர் ஒருவர் இன்று அலுவலக லேண்ட் லைனில் போன் செய்து நலன் விசாரித்தார். அவரது மாணவ மாணவிகளுக்கு என்னை முன்னுதாரணமாக அடிக்கடி சொல்வாராம். கூடுதலாக என்னைப் போல அத்தனை எளிமையாக யாராலும் வகுப்பெடுக்க முடியாது என்றும் சொல்லி இன்றைய நாளை இனிமையாக்கினார்.

இதைக் கேட்டபோது பதினைந்து வயதில் ஆசிரியை ஒருவரின் சூழ்ச்சியால் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்த தாக்கத்தில் ஆசிரியர்கள் மீதான வெறுப்பில் ஆசிரியர் பணியின் மீது ஒருசிறு துளியும் ஈடுபாடில்லாமல் இருந்த என்னை குரு ஸ்தானத்தில் அமர வைத்த சூழலையும், அந்தப் பணியையும் என்னால் நூறு சதவிகிதம் ஈடுபாட்டுடன் செய்ய முடிவதையும் மனது அசை போட்டதன் விளைவு இந்தப் பதிவு!

நாம் முழு ஈடுபாட்டுடன் முனைப்புடன் செயல்பட்டால் மலையைக் கூட சிறு துரும்பாய் தூக்கிப் போடும் லாவகம் நமக்குள் வந்து புகுந்துகொள்ளும் என்பதற்கு இதுவே ஒரு சான்று.

எதை செய்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்வது என்பது என் முதன்மையான திறமை என்பதையும் காம்கேர் எனக்கு உணர்த்தியது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

செப்டம்பர் 8, 2022 | வியாழன் கிழமை

(Visited 1,332 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon