ஒரு டாக் ஷோ!
ஒரு பெண் தன் கணவனுக்கு ஏபிசிடி கூட தெரியாது என்று சாதாரணமாக வீட்டில் பேசுவதைப்போல் பேசிவிட அதைவைத்து அந்த அம்மாவை வில்லி போலவும் அந்தக் குழந்தையின் அப்பாவை ஹீரோ போலவும் ஆக்கி அப்பாவையும் மகளையும் நெகிழ்ச்சியான இணைப்புக்குள் கொண்டு சென்றதுதான் நேற்றில் இருந்து சமூக வலைதளத்தின் பேசுபொருள்.
TRP-க்காக அதற்காக இதற்காக என்று எத்தனை காரணத்தை வேண்டுமானாலும் இதற்கு வைத்துக்கொள்ளலாம்.
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
’ஜோக்’ என்ற போர்வையில் பெண்களைப் பற்றிய எத்தனை அவதூறுகளை பொதுவெளியில் ஆண்களில் பலர் பெண்களை குறிப்பாக தங்கள் மனைவி குறித்து பேசுகிறார்கள். பெண்களை மட்டப்படுத்தித்தான் எத்தனை எத்தனை நகைச்சுவை துணுக்குகள், பட்டிமன்ற நிகழ்ச்சி உரையாடல்கள். அதற்கெல்லாம் கைதட்டி கொண்டாடும் மக்கள்தான் ஒரு பெண் தன் கணவனுக்கு ஏபிசிடி தெரியாது என சொன்னவுடன் அவர் தன் கணவனை மட்டப்படுத்தினார், இளக்காரமாக பேசினார் என்றெல்லாம் கொதிக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி மூலம் அந்த குழந்தையின் மனதுக்குள் தன் அம்மா குறித்த எதிர்மறையான ஆறாத வடு விழுவதற்கு நூறு சதவிகித வாய்ப்புண்டு.
நான் இங்கு அந்த தாயையும் குறை சொல்ல வரவில்லை, தந்தையையும் குறை சொல்ல வரவில்லை.
பொதுவெளியில் நாம் நினைப்பதை எல்லாம் பேசிவிட முடியாது. கூடவும் கூடாது. அதுவும் குறிப்பாக தங்கள் பர்சனல் வாழ்க்கையை. அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்.
யார் யாரெல்லாம் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் பேசுவதற்கு சம்மதிக்கிறார்களோ அவர்கள் தாங்களாகவே இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குள் விட்டில் பூச்சிகளாய் சென்று விழுகிறார்கள். கேமிரா, லைட்டிங், டிவியில் முகம் தெரிதல், புகழ் என ஆயிரம் காரணங்கள் உள்ளன விட்டில் பூச்சி மனிதர்களை உருவாக்குவதற்கு. உருவாக்குவது எனவும் சொல்லிவிட முடியாதுதான். ‘விட்டில் பூச்சி மனிதர்களை வெளிக்கொணர’ என்று சொல்வது மிகப் பொருத்தம்.
‘எங்கள் வாழ்க்கையில் ஒளிவு மறைவே கிடையாதுப்பா’ என்று மார்தட்டிக்கொள்பவர்கள் வெகு இயல்பாய் வீடுகளில் பேசிக்கொள்வதைக் கூட வலுக்கட்டாயமாக நிகழ்ச்சியின் போக்கில் குற்றமாக்கி சம்மந்தப்பட்டவர்கள் குற்ற உணர்ச்சியில் சிக்கிக்கொள்ள ஆயிரம் வாய்ப்புகள் உண்டு.
இவ்வளவு ஏன் டிரைவர் வைத்துக்கொண்டு காரில் செல்லும்போது (அல்லது டிராவல்ஸ் காரில் செல்லும்போது) கூட நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். நம் நடவடிக்கைகள் அத்தனையும் நம் குடும்பத்துக்கு சம்மந்தமே இல்லாத வேறொரு நபர் கவனித்துக்கொண்டே இருக்கிறார் என்ற பிரஞ்ஞையுடன்தான் பயணிக்க வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்னர் எங்கள் பயணத்தில் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த டிரைவர் எங்களுடன் பேசியபடி வந்தார்.
பேச்சு வாக்கில் ஒரு குடும்பத்தைப் பற்றிய பேச்சு வந்தது. ‘அந்த சார் எழுபது வயசுக்கு நல்ல சுறுசுறுப்பு. ஆனால் அந்த வீட்டம்மாதான் டல் பேர்வழி. சரியான சோம்பேறி… எப்பவும் ஈஸிச் சேரில் படுத்தபடி இருப்பாங்க…’ என்று வார்த்தைகளில் கவனம் இல்லாமல் சர்வ சாதாரணமாகச் சொல்ல, வழக்கம்போல் எனக்கு சுர்ரென கோபம் எட்டிப் பார்த்தது.
அவர் சொன்ன குடும்பம் எங்களுக்கு மிக நன்றாக தெரிந்த குடும்பம். ஆனால் அந்த விஷயம் டிரைவருக்குத் தெரியாது.
அவர் சோம்பேறி என சொன்ன பெண்மணி தன் அறுபது வயது வரை எப்படி ஓடி ஓடி குடும்பத்துக்காக உழைத்தார் என்பது நாங்கள் நன்கறிவோம். இப்போது அவர் ஓய்ந்து சர்க்கரை நோய், இதய நோய் என உட்கார்ந்துவிட்டார். அவருடைய கணவர் சொந்தத் தொழில் என்பதால் பணம் சம்பாதிப்பது மட்டுமே அவர் வேலை. வீட்டு வேலை எதுவும் தெரியாது. நேரத்துக்கு வீட்டில் இருந்து டான் டானென்று சாப்பாடு டிபன் காபி டீ வந்துவிடும். அத்தனையையும் தயார் செய்பவர் அவர் மனைவிதான். கணவனுக்குப் பார்த்துப் பார்த்து செய்தவர் தன் உடல்நலனை பார்த்துக்கொள்ளவில்லை. விளைவு சோர்வும், களைப்பும். மனைவிக்கு உடல் நலன் மோசமானவுடன் அவர் சமைத்துப் போட்டு ஆறுதலாக இருந்தார் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். வெளியில் இருந்து சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள்.
ஒரு முறை அவர் தன் மனைவி குறித்து எங்களிடம் பேசும்போது ‘அவள் தண்டச்சோறு… இனி அவளிடம் சமையல் சாப்பாடு என எதையும் எதிர்பார்க்க முடியாது. அதனால் வெளிச்சாப்பாடுதான்…’ என கம்பீரமாக சொல்வதாக நினைத்து தலைக்குப்புற விழுந்தார்.
தண்டச்சோறு – எத்தனை பெரிய இழிவான வார்த்தை. அதைச் சொல்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி ஏதுமின்றி மூன்றாவது நபரிடம் பேசுகிறோமே என்ற உணர்வின்றி பேசுபவரை அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
இதைப்போல் எத்தனை பேரிடம் எத்தனை விதமாக அவர் சொல்லி இருப்பார் தன் மனைவியைப் பற்றி. இப்படிப்பட்ட ஆணைத்தான் எங்கள் டிரைவர் சுறுசுறுப்பு அதுவே இதுவே என புகழ்ந்துகொண்டிருந்தார். சுறுப்பான பெண்மணிக்கு சோம்பேறி பட்டத்தைக் கட்டினார்.
மிக விரிவாக நான் அந்த பெண்மணிக்கு ஆதரவாக பேசப் போக, டிரைவர் அதை அப்படியே அந்த குடும்பத்தாரிடம் தான் சொன்னதை எல்லாம் நான் சொன்னதாக பரப்பி விட்டால் என்ன செய்வது என்ற உள்ளுணர்வு இருந்ததால் டிரைவருக்கு நன்னெறி வகுப்பெடுக்கும் பணியை விரிவாக செய்யாமல் சுருக்கிக்கொண்டேன்.
‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல சார். அந்த அம்மாவின் சுறுசுறுப்பை நீங்கள் பார்த்ததில்லை. இப்போது ஓய்ந்து உட்கார்ந்திருப்பவரை மட்டும்தான் பார்க்கிறீர்கள்’ என்று மட்டும் சொன்னேன்.
ஒரு விஷயம் வீட்டை விட்டு வெளியே வந்தாலே அது வெறும் வாய்க்கு அவல் தின்பதைப் போல்தான்.
இப்படி இருக்கும் சூழலில் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். மனம் போன போக்கிற்கெல்லாம் பேசி விடமுடியாது. கூடாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்ன குடும்பநல கோர்ட்டா? நம் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல?
கவனம்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
செப்டம்பர் 12, 2022 | திங்கள்