கொடிய ரணங்களுக்கும் மாமருந்து!
குடும்ப நண்பர் ஒருவரின் 80 வயதுக்கும் மேலாகும் அம்மா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்தார். அவர் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்றிருந்தேன். நான் நினைத்ததை விட அவர் அம்மா மிக தைரியமாக இருந்தார். சிரித்துப் பேசினார்.
தன் பேத்தியைப் பற்றிப் பேசும்போது மட்டும் ‘அவள் என் அம்மாபோல அப்படியே பேச்சு, பாசம், அணுசரனை…’ என சொல்லும்போது குரல் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார்.
நான் சூழலை சமாளிப்பது எப்படி என யோசிக்கும்போது சட்டென அவர் பேரனும் பேத்தியும் சேர்ந்து அவர் உளுத்தம்களி செய்யும் வீடியோவை தங்கள் யு-டியூப் சேனலில் பதிவிட்டிருந்தது நினைவுக்கு வர அது குறித்து பேச்சை எடுத்தேன்.
‘நீங்கள் அந்த வீடியோவில் பேசிக்கொண்டே உளுத்தம்களி செய்து காண்பித்தது சூப்பரா இருந்தது…’
அடுத்தநொடி அவர் முகத்தில் அத்தனைப் பிரகாசம். அழுகையை துடைத்துக்கொண்டு வெட்கப்பட்டு சிரித்தார்.
எத்தனை வயதானால்தான் என்ன? மனிதர்களுக்கு சின்னச் சின்ன பாராட்டு வார்த்தைகள்தான் எத்தனை பெரிய கொடிய ரணங்களுக்கும் ஒத்தடம் கொடுக்கிறது?
காசா பணமா, பாராட்டு தானே, வஞ்சப்புகழ்ச்சி இல்லாமல் பாராட்டித்தான் மகிழ்வோமே!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 11, 2022 | செவ்வாய்