யாரும் இங்கே தெய்வங்கள் அல்ல!

யாரும் இங்கே தெய்வங்கள் அல்ல!

சுடிதார் தைப்பதற்காக தையல்கடைக்காரிடம் துணி கொடுத்துவிட்டு வாங்கும்போது கவனித்தால் துணியில் ஓரிடத்தில் கிழிந்திருந்தது. என்ன ஏது என விசாரித்தால் ஏற்கெனவே அப்படித்தான் கிழிந்திருந்தது என சொல்பவரிடம் ‘முன்பே கவனித்திருந்தால் போன் செய்து சொல்லி இருக்கலாமே. தைக்கவே வேண்டாம் என சொல்லி இருப்போம் அல்லவா? இந்த கிழிசல் சுடிதாரின் மேல் பக்கத்தில் வேறு இருக்கிறது. ஒட்டு போட்டு தைத்தாலும் பார்வையாக இருக்காதே?’ என வருத்தப்பட்டு சொன்னதற்கு ‘இனி எங்கே நல்லா தைக்கிறாங்களோ அங்கே கொடுத்துக்கோங்க’ என சொல்லிவிட்டு அடுத்த கஸ்டமரை கவனிக்கத் தொடங்குகிறார் அந்த தையல் கடைக்காரர்.

பொது இடத்தில் இயங்கும் டிஜிட்டல் பிரிண்டிங் செண்டர்களில் பெரிய சைஸ் போஸ்டர்களை பிரிண்டுக்கு கொடுத்துவிட்டு வேலை முடிந்ததும் அதை அவர்கள் கம்ப்யூட்டரில் இருந்து டெலிட் செய்யச் சொன்னால் ‘என்னைத் தவிர யாரும் இந்த கம்ப்யூட்டரை பயன்படுத்த மாட்டார்கள். நம்பிக்கை இருந்தா அடுத்த முறை இங்கே வாங்க… இல்லைன்னா வேறு இடம் போய்க்கோங்க…’ என்று கறாராக சொல்லிவிட்டு கம்ப்யூட்டர் திரையை முறைக்கத் தொடங்குகிறார் அந்த டிடிபி டிஸைனர்.

பல கிளைகள் கொண்ட பெயரெடுத்த ஹோமியோபதி மருத்துவமனையில் பொறுப்பற்று செயல்பட்ட ஒரு மருத்துவ உதவியாளரின் கவனக் குறைவால் நாங்கள் வாங்கிய மருந்து எண்ணிக்கையில் குறைவாக இருந்தது. அதாவது, ஒரு பாட்டிலில் மாத்திரைகளை எண்ணி அளவிட்டு போடுவார்கள். அது குறைவாக இருந்தது. ஒரு பாட்டிலில் 30 மாத்திரைகள் என்றால் 15 தான் இருந்தது. இதுபோல 5 பாட்டில்கள்.

அதற்குள் கொரோனா கால ஊரடைப்பு வந்து விட்டதால் உடனடியாக கேட்க முடியவில்லை. ஊரடைப்பு தளர்த்தப்பட்ட ஒரு நாளில் அவர்களிடம் சென்று விசாரிக்கையில் அந்த மருத்துவ உதவியாளர் வாய்க்கு வந்ததை பேசத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் விவாதம் முற்றியது. பாதிக்கப்பட்ட எங்களுக்குத்தான் மனதுக்குள் பதற்றம் வந்ததே தவிர அவர்களுக்கு எந்தவிதமான குற்ற உணர்வும் வரவில்லை.

பிறகு அந்த மருத்துவமனை இமெயில் முகவரிக்கு நடந்ததை எழுதி அனுப்ப மட்டுமே முடிந்தது. வேறு யாருக்காவது நடக்க இருக்கும் தவறு இதன் மூலம் தடுக்கப்படலாம். எங்களுக்கு பைசாவுக்கு லாபம் இல்லை.

எனக்கு விருதளிக்க அழைத்த ஒரு நிறுவனத்தில் என் பெயர், நான் என்ன செய்கிறேன் போன்ற விவரங்களை விரிவாக டாகுமெண்ட்டாக ஃபைலாகக் கொடுத்த பிறகும் மேடையில் என் பெயரை குறிப்பிடுவதிலும் எங்கள் நிறுவனத்தின் பெயரை குறிப்பிடுவதிலும் பெரும் குழப்பம் செய்தவர்களிடம் நான் மென்மையான குரலில் வலுவாக சுட்டிக் காட்டியபோது அவர்கள் கொஞ்சமும் வருத்தம் தெரிவிக்காமல் ‘உங்கள் இஷ்டம் போல் எல்லாம் எங்களால் நிகழ்ச்சி நடத்த முடியாது. ஒரு நிகழ்ச்சி என்றால் அதில் சின்ன சின்ன தவறுகள் வருவது இயற்கைதானே..’ என்று விட்டேத்தியாக பேசினார்கள். சின்ன சின்ன தவறுகள் நம் பெயரிலும், நம் நிறுவனப் பெயரிலும் என்கின்ற போது விருதை கொடுக்காமலேயே இருந்திருக்கலாமே. விருது என்பதே நம் செயல்பாடுகளுக்கான சாட்சிதானே? இதற்குக் குரல் கொடுத்தால் நாம் எதிரி ஆகிறோம்.

பெயர் எடுத்த பெரிய மருத்துவமனைதான். அப்பாவுக்கு வருடாந்திர மருத்துவ பரிசோதனை செய்த பிறகு டாக்டர் எழுதித்தரும் மருந்துகளை அவரது உதவியாளர் டைப் செய்து டாக்டரிடம் காண்பித்து அவர் கையெழுத்து வாங்கித்தருவார். நாளின் பெரும்பகுதி இதற்கே சரியாகிவிடும்.

சமீபத்தைய பரிசோதனையின்போது டாக்டரின் உதவியாளர், டாக்டர் கையால் எழுதிக் கொடுத்த ப்ரிஸ்கிருப்ஷனை எங்களிடம் கொடுக்கவில்லை. அவர் டைப் செய்து டாக்டரிடம் கையெழுத்து வாங்கிய ப்ரிஸ்கிருப்ஷனை மட்டும் கொடுத்தார். நான் வலுக்கட்டாயமாக டாக்டர் கையால் எழுதியதை பார்ப்பதற்காகக் கேட்டேன். அதற்கு ஒரு காரணமும் இருந்தது. அவர் டைப் செய்தபோது பக்கத்தில் இருந்தவர்களிடம் எல்லாம் ஏதோ ஜோக் சொல்லி சிரித்தபடி வேலை செய்துகொண்டிருந்தார்.

அவர் முதலில் மறுத்தார். நான் சரிபார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்திக் கேட்டேன். அவர் முணகியபடி கொடுத்தார். நான் டாக்டர் கையால் எழுதியதையும் உதவியாளர் டைப் செய்ததையும் ஒப்பிட்டேன். நான் சந்தேகித்ததைப் போல அவர் டைப் செய்திருந்தது இப்போது மருத்துவர் கொடுத்த ப்ரிஸ்கிருப்ஷனை அல்ல. கடந்த முறை அவர் கம்ப்யூட்டரில் வைத்திருந்ததை அப்படியே பிரிண்ட் எடுத்திருந்தார்.
இந்த முறை டாக்டர் மருந்துகளின் பவரை குறைத்திருந்தார். மேலும் புது மருந்து ஒன்றையும் சேர்த்திருந்தார். டாக்டரும் அதை கவனிக்காமல் கையெழுத்திட்டு கொடுத்துவிட்டார்.

நாள் ஒன்றுக்கு நாற்பது ஐம்பது நோயாளிகளை கவனிக்கிறார். இடை இடையே ஸ்டெண்ட் வைக்க ஆபரேஷன் தியேட்டர் சென்றுவிடுவார். அவரால் ஒவ்வொருவருக்கும் என்ன எழுதிக்கொடுத்தோம் என்று நினைவில் வைத்திருக்க முடியாதுதான். ஆனாலும் அவர் தான் எழுதிக்கொடுத்ததுடன் டைப் செய்ததை ஒப்பிட்டு அல்லவா கையெழுத்திட வேண்டும்?

நானும் இதை கவனிக்காமல் விட்டிருந்தால் அப்பா பழைய மருந்துக்களையே அல்லவா தொடர்ந்திருப்பார். உடல் நலம் என்னாவது?

மீண்டும் சரியான ப்ரிஸ்கிரிப்ஷனில் கையெழுத்திட்டு
வாங்கிக்கொடுக்க சொன்னபோது அவர் கடுமையாக எங்களிடம் விவாதிக்க நாங்கள் நேரடியாக டாக்டரை அணுகினோம். அவரும் தான் செய்த தவறை மறைக்க இனி வரும்போது எல்லா ப்ரிஸ்கிருப்ஷனையும் ஃபைல் செய்து வைத்திருக்கும் ஃபைலை எல்லாம் கொண்டு வராதீர்கள், பாருங்கள் பழைய ப்ரிஸ்கிருப்ஷனை பார்த்து டைப் செய்துவிட்டார் என உதவியாளருக்கு ஆதரவாக பேசி கேஸை திசை திருப்பினார்.

இதுபோல பொறுப்பற்ற செயல்பாடுகளுக்கு பொருட்களை காவு கொடுக்கலாம், நம்பிக்கையை காவு கொடுக்கலாம், பைசாவை காவு கொடுக்கலாம். ஆனால் உடல் உறுப்புகளை காவு கொடுப்பதும், உயிரை காவு கொடுப்பதும் காலக் கொடுமை.

மனிதர்களின் பெரும்பாலான தவறுகள் கவனக் குறைவுகளால்தான் அரங்கேறுகின்றன. பேச்சு சுவாரஸ்யத்தினாலும், எண்ணச் சிதறல்களினாலும்தான் கவனக் குறைவுகள் உண்டாகின்றன. மேலும் எதற்குமே குரல் கொடுக்காதவர்களினால்தான் தவறு செய்பவர்கள் தங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்வதில்லை. கவனக் குறைவுகளும் குறைவதில்லை.

யாரும் இங்கே தெய்வங்கள் அல்ல, எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்கின்ற அவசியமும் இல்லை.

என்ன ஆனால்தான் என்ன? நமக்கு நேரிடும் சிறு தவறுகளுக்கும் குரல் கொடுப்போம். அப்போதுதான் நமக்கில்லை என்றாலும் வருகின்ற தலைமுறையினராவது தப்பிப் பிழைப்பார்கள்.

அண்மையில் தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டு உயிரையும் இழந்த இளம் கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 18, 2022 | வெள்ளிக்கிழமை

(Visited 2,125 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon