குறைந்து வரும் குற்ற உணர்வுகள்!
முன்பெல்லாம் ஒரு கொலைகாரன் கொலை செய்வதைக் கூட உணர்ச்சி வேகத்தில் கொலை செய்து விட்டதாக சொல்வார்கள். அந்த நேரத்துக் கோபத்தில் கண்மூடித்தனமாக செய்திருப்பதாக மற்றவர்கள் கூறுவார்கள். ஏன் அவனே கூட அப்படி சொல்லுவான். கொலை செய்துவிட்ட பிறகு ஒவ்வொரு நொடியும் பயத்துடனும் குற்ற உணர்ச்சியுடனும்தான் அவன் வாழ்ந்துகொண்டிருப்பான். அதுதான் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் / நம்பப்பட்டு வரும் நம்பிக்கை.
ஆனால் இன்று எங்கு சென்றது அந்த குற்ற உணர்வுகள்?
ஏதோ ஒரு வேகத்தில் கொலை செய்யும் அளவுக்கு ஆக்ரோஷம் வருவதைக் கூட மனதை இரும்பாக்கிக்கொண்டு ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் கொலை செய்துவிட்டு பிணத்தை ஃப்ரிட்ஜில் வைத்து தினம் சிறு சிறு துண்டுகளாக்கி வெவ்வேறு இடங்களில் தூக்கி எறிந்து கொலையை மறைக்க முயற்சித்த சமீபத்திய செய்தியைத்தான் எந்த கோணத்திலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தன் வீட்டு ஃப்ரிட்ஜில் தான் கொலை செய்த பிணத்தை வைத்துவிட்டு எப்படி ஒருவனால் தூங்க முடிந்தது? ஒரு நாள் இரவு கூட தன்னை மறந்து உறங்கும் உறக்கத்தில் கூடவா ஆழ்மனதில் குற்ற உணர்வு ஏற்பட்டிருக்காது.
குறைந்து வரும் உணர்வுகளுக்குள் ரொம்ப ரொம்ப ஆபத்தானது குறைந்து வரும் / மறைந்து வரும் குற்ற உணர்வுகள்.
அன்பாக இருக்கவும், பண்பாக நடந்துகொள்ளவும் பயிற்சியும் அறிவுரைகளும் தேவையில்லை. தான் செய்த சிறு சிறு தவறுகளுக்கும் குற்ற உணர்வை கொஞ்சமாவது தூக்கி சுமக்கப் பழ(க்)க வேண்டும்.
அப்போதுதான் பெரும் குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டாகும்!
நாம் தான் இப்படி குற்ற உணர்வுகளையெல்லாம் தூக்கி சுமந்து விட்டோம். நம்ம பிள்ளைகளாவது நிம்மதியாக இருக்கட்டும் என சொல்லும் பெற்றோர் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள்!
சிந்திப்போம்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 16, 2022 | புதன்