பிரசவ வைராக்கியம்!
சில வருடங்களுக்கு முன்னர் அம்மா மருத்துவமனையில் இருந்தபோது அவரை நன்கு கவனித்துக்கொண்ட ஒரு செவிலியருக்கு ஏதேனும் செய்ய நினைத்தார். அம்மா அப்படிச் சொல்வதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அந்த நேரம் தீபாவளி நேரமாக இருந்ததாலும், அந்த செவிலியர் பேச்சு வாக்கில் தன் வீட்டின் ஏழ்மையை அம்மாவிடம் சொல்லி இருந்ததாலும் புதுப் புடவை எடுத்துக்கொடுக்கலாம் என சொன்னார்.
அப்பா ’பணமாகக் கொடுத்துவிடலாம், அவருக்கு என்ன தேவையோ வாங்கிக்கொள்ளட்டும்’ என்றார்.
நான் முன்புபோல ‘புத்தகப் பித்து’ பிடித்திருந்திருந்தால்
நான் எழுதிய புத்தகம் ஏதேனும் ஒன்றை பள்ளி / கல்லூரியில் படிக்கும் அவரது மகனுக்கோ அல்லது மகளுக்கோ கொடுக்கலாம் என என் பங்கிற்கு யோசனை சொல்லி இருப்பேன்.
ஆனால் புத்தகம் பரிசாகக் கொடுத்த சில அனுபவங்கள் கண் முன் வந்து நக்கலாக சிரித்ததால் அந்த யோசனையைக் கைவிட்டேன்.
இப்போது மட்டும் ‘புத்தகப் பித்து’ இல்லையா என கேட்க வேண்டாம், இப்போதும்தான். ஆனால் முன் அளவுக்கு பிறரையும் அந்தப் பித்துக்குள் ஆட்பட நினைப்பதில்லை. நான் மட்டுமே அந்த பேரானந்தத்துக்குள் திளைக்கின்றேன். அது ஒன்றுதான் வித்தியாசம்.
அடுத்தநாள் நாங்கள் அம்மாவிற்கு சாப்பாடு எடுத்துச் சென்றபோது அப்பாவும் நானும் புடவைக் கடைக்குச் சென்றோம்.
புடவையை எங்களுக்கு எடுக்க உதவிய சேல்ஸில் இருந்த பெண் நாங்கள் நல்லதாக தரமாக தேர்ந்தெடுக்கும் விதத்தை வைத்து நாங்கள் தேடும் புடவைகளிலேயே மிக உயர்வானதாக எடுத்து காண்பிக்க ஆரம்பித்தார்.
அப்பா எப்பவும் இப்படித்தான். பணியாளர்களுக்கு ஆடைகள் எடுத்துக்கொடுக்கும் பட்சத்தில் நாம் எப்படி வாங்குகிறோமோ அந்தத் தரத்திலேயே தான் எடுப்பார். அப்பாவின் நல்ல பல குணங்களுக்குள் அதுவும் ஒன்று. அதுவே எங்கள் குடும்ப பழக்க, வழக்கமும் ஆனது.
தேடித்தேடி நல்லதாக ஒரு புடவையை எடுத்த பிறகு விலை நாங்கள் நினைத்திருந்ததைவிட நூற்று ஐம்பது அதிகம் வந்தது. ஆயிரத்து நூற்றி ஐம்பது.
பிளவுஸ் பீஸ் வைக்காமல் புடவை கொடுக்கக் கூடாது என்பதால் வீட்டில் இருந்தே ஒன்றை எடுத்து வந்திருந்தோம். கிட்டத்தட்ட நாங்கள் வாங்கிய புடவைக்கு கலர் பொருத்தமாக இருந்தது. மனம் நிறைவாக இருந்தது.
அம்மா சாப்பிட்ட பிறகு புடவையை கொடுத்தோம். அம்மா தன் கையால் அதை அந்த செவிலியருக்குக் கொடுத்தார். அவர் முகம் எப்படி இருந்தது என்பதை எழுதத் தேவையில்லை.
அடுத்த நாள் நாங்கள் காரில் இருந்து இறங்கும் முன்னரே மூன்று செவிலியர்கள் எங்களை நோக்கி வந்தார்கள். எங்களை சூழ்ந்துகொண்டு அவர்கள் என்னென்ன சேவைகள் செய்கிறார்கள் என சொல்லிக்கொண்டே போனார்கள்.
அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொண்ட நாங்கள் சிரித்தபடி வாழ்த்துகள் சொல்லிவிட்டு அம்மாவைப் பார்க்க மருத்துவமனைக்குள் சென்றோம். எல்லாம் நேற்று அவர்களின் சக செவிலியருக்கு நாங்கள் வாங்கிக்கொடுத்த வாங்கிக்கொடுத்த புடவை செய்யும் வேலை என்பதால் அம்மாவிடம் இந்த விஷயத்தை சொன்னோம்.
எங்களிடம் பேசிய மற்ற செவிலியர்கள் அம்மாவை கவனித்துக்கொள்ளும் பணியில் இல்லை. அவர்கள் ஐசியூவில் இருக்கும் மற்ற நோயாளிகளை கவனித்துக்கொள்பவர்கள் என்றார்.
அதனால் அந்த செவிலியர்கள் கேட்டதை நாங்கள் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
மறுபடி புத்தகப் பித்து எனக்குள் இருந்து எட்டிப் பார்க்க, அவர்கள் வீட்டில் அவர்கள் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என கேட்டு தெரிந்துகொண்டேன். நாங்கள் அவர்களுக்கு உடை வாங்கித்தருவோம் என நினைத்துக்கொண்டு அவர்கள் வயதை எங்கள் மனதில் நன்கு பதியும்படி சொனனர்கள். நான் அவர்கள் பிள்ளைகள் குறித்து கேட்டதற்கான நோக்கமே வேறு.
அடுத்த நாள் அந்த மூவருக்கும் ‘Easy Way to Learn C Language’, ‘போட்டோஷாப்’, ‘ஸ்மார்ட்போனில் கலக்கலாம் தமிழில்’ என ஆளுக்கொரு புத்தகத்தை அழகான கவரில் போட்டுக் கொடுத்தேன். கூடுதல் மகிழ்ச்சிக்காக ‘உங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் பரிசு. இவை நான் எழுதிய புத்தகங்கள்’ என்றேன்.
அவர்கள் முகத்தின் சிரிப்பில் அதுவரை இருந்த சிறு கனிவு காணாமல் போயிருந்தது.
நாங்கள் அங்கிருந்து நகர்வதற்குள் அவர்கள் தங்களுக்குள் ‘புக் கொடுக்கிறாங்களாம்… யாருக்கு வேண்டும் புக்கெல்லாம்… டிரஸ் வாங்கிக் கொடுப்பாங்கன்னு பார்த்தா….’ என பேசிக்கொண்டார்கள்.
எனக்குள் இருந்த புத்தகப் பித்துக்குக் கிடைத்த மற்றுமொரு பரிசாக நினைத்து ‘இனி யார் எனக்கு புத்தகம் தேவை, கொடுங்கள் என கேட்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்’ என வைராக்கியம் எடுத்தேன். பிரசவ வைராக்கியம்!
அப்பாதான் வருத்தப்பட்டு ‘அதுக்குதான் நான் சொன்னேன். எதுவுமே கொடுக்காமல்கூட இருக்கலாம். ஆனால் புத்தகம் மட்டும் கொடுக்கவே வேண்டாம் என்று…’ சொல்லிக்கொண்டே வந்தார்.
அவர் வருத்தப்பட்டது செவிலியர்கள் சொன்ன வார்த்தைகளுக்காக அல்ல. அந்த வார்த்தைகளால் எனக்குள் இருந்த புத்தகப் பித்தன் அவமானப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக!
புத்தகங்கள்தான் எத்தனை பேருக்கு எத்தனை விதமான அனுபவங்களைக் கொடுக்கிறது?
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 18, 2022 | வெள்ளிக்கிழமை